பிரமாண்டமான உருவம். அசுரத்தனமான பலம். மதம் பிடித்தால் பல மடங்கு வேகம். இத்தனை இருந்தும் ஒரு மனித மூளைக்கு அடிபணிந்து சொல்வதைக் கேட்கிறது. சில சமயங்களில் தெருவில் யாசகம் கேட்கிறது. மின்வேலிகளின் அதிர்வு தாங்காமல் சரிந்து உயிரிழக்கிறது. அதன் தந்தத்திற்காக குறிவைக்கப்பட்டும் காடுகளில் அனாதரவாக இறந்து போகின்றன இந்தப் பேருயிர்கள்.
இதைப்பற்றி அண்மையில் உயர்நீதிமன்றம் தன் கவலையை வெளியிட்டிருக்கிறது. சும்மா இருந்த யானைகளுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கிறோம் என்று முகாமுக்கு அழைத்துப் போனால், அங்கு சிறுபிள்ளைகளைப் போல அடி வாங்குகின்றன இந்த யானைகள். அடித்த பாகன்களைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள்.
ஏன் இந்த அவலம் யானைகளுக்கு?
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன்;
இறந்தாலும் ஆயிரம் பொன்;
நின்றால் மட்டும் பத்துப் பைசா”-
பல வருடங்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் திருநீற்றுப் பட்டை போட்ட யானை ஒருவரை ஆசிர்வதிக்கிற புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழ் இப்படிக் கச்சிதமான வரிகளை எழுதியிருந்தார்கள்.
உருவத்தில் பருத்த யானைகளை நாம் எப்படி நடத்தி வந்திருக்கிறோம்?
விநாயகராக வழிபடுகிறோம். விநாயகர் சதூர்த்தி விழாவை திலகர் காட்டிய வழியில் நாடு முழுக்க கொண்டாடி, சிலைகள் அமைத்து, கடலில் கொத்தாகக் கரைப்பது நடக்கிறது.
மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தில் வடிக்கப்பட்ட யானைகளின் சிலைகள் துவங்கி, பலவற்றில் யானைகளின் அடையாளங்கள். திருவிளையாடல் புராணத்தில் முருகனின் சகோதரனாக வருவது துவங்கி எத்தனை கதைகள்?
கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளின் அணிவகுப்பு கோலாகலமாக நடக்கும். தங்க நிறத்தில் முகம் மறைத்து, முதுகில் வண்ணம் போர்த்திப் பார்ப்பது தனி அழகு.
கோவில்களில் யானைகளுக்குத் தனி மரியாதை. எட்டி நின்றுத் தொட்டுக் கும்பிடும் பக்தர்கள். யானையின் வாலில் உள்ள கனத்த முடியைக் கைவிரல் மோதிரத்தோடு சேர்த்து அணிந்தால் தங்களுக்கு ராசி என்றும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.
ஜெமினி தயாரிப்பில் வெளிவந்த ‘ஔவையார்’ துவங்கி, டார்ஜன் படங்கள், நம்மூர் தேவர் படங்கள் வரை யானைகள் சாகசம் பண்ணி படத்தை வெற்றி பெற வைத்திருக்கின்றன.
இதெல்லாம் இருந்தாலும், யானைகளைப் பழக்குகிறவர்கள் அதிகம் இருப்பது கேரளாவில். எத்தனையோ பாகன்கள் ஒரு குழந்தையைப் போல, யானைகளை வளர்த்திருக்கிறார்கள்.
அதற்கு மதம் பிடித்த நேரங்களில் அதன் காலடியில் உயிரை விட்டிருக்கிறார்கள். பாரதி கூட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தூக்கி வீசப்பட்டதாகச் செய்திகள் உண்டு.
யானைகள் வாழும் காட்டில் அவற்றை எப்படி வைத்திருக்கிறோம்? பொதுவாக கூட்டமாக வாழும் இயல்பு கொண்ட யானைகள், குறிப்பிட்ட வனப்பகுதியில் கால மாற்றத்திற்கேற்ப நடமாடுபவை.
அவற்றின் வழித்தடங்கள் அவற்றின் மரபணுக்களில் பதியப்பட்டிருப்பதைப் போல, அவற்றின் இயக்கம் இருக்கும்.
ஆனால் சுற்றுலாத் தளம் என்கிற பெயரில் யானைகள் நடமாடும் பகுதிகளை மறித்து, மின்சார வேலிகள் அமைத்திருக்கின்றன பல கார்ப்பரேட் நிறுவனங்கள்.
அந்த வேலிகளில் பாயும் கூடுதலான மின்சாரம் தாக்கி ஒவ்வொரு ஆண்டும் பல யானைகள் உயிரிழக்கின்றன.
பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் மீதேறித் தான் பல சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் நுழைந்து யானை உள்ளிட்ட வனவாழ் மிருகங்களின் இயல்பான வாழ்க்கைக்குள் அத்துமீறிப் படம் எடுத்துப் பிறருடன் பகிர்கிறார்கள்.
முதுமலைப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சாலையின் ஓரத்தில் தனித்து ஒரு யானை.
காரில் சுற்றுலா வந்த பயணிகள் யானையைப் பார்த்ததும் இறங்குகிறார்கள். ஆரவாரிக்கிறார்கள். செல்போன்களுடன் யானைக்கு அருகில் சென்று மாலை நேரத்தில் படம் எடுக்கிறார்கள்.
ஃப்ளாஷ் வெளிச்சம் முகத்தில் விழுந்ததும், சட்டென்று யானை முன்னேறிப் பாய்ச்சல் காட்டியதில் படம் எடுத்தவர் அந்த இடத்திலேயே மூச்சில்லாமல் போனார்.
தவறு யார் மீது?
கேரள, தமிழக எல்லைப் பகுதியில், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தி சேகரிக்கப் போனபோது, வன அதிகாரிகளையும், பல யானைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களையும் சந்தித்திருக்கிறேன்.
நுட்பமான உணர்வு கொண்ட யானைகளைப் பற்றி அவர்கள் அனுபவங்கள் வழியே உணர்ந்து சொன்ன பல செய்திகள் வியப்பூட்டுபவை.
மனிதர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக தன்னளவில் யானைகள் எதிர்வினையாற்றி இருக்கின்றன.
தங்களுடைய உணவும், நீரும் தடைப்படும்போது அவை வழக்கமான தடம் மாறி ஊருக்குள் நுழைகின்றன.
மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து உணவுக்காகத் துழாவியிருக்கின்றன. பயிர்களைச் சேதம் பண்ணியதாகச் சொல்லப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றன.
சந்தனக் கடத்தல் வீரப்பன் காட்டுக்குள் இருந்தபோது, துவக்கத்தில் சில யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டிருக்கின்றன. அப்போது வன அதிகாரி காண்பித்த ஒரு புகைப்படத்தில், தலைப்பகுதி மட்டும் வெட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் ஒரு யானையைப் பார்க்கும் போதே பரிதாபம்…
தற்போது கேரளாவில் அன்னாசிப் பழத்திற்குள் வெடிமருந்தை வைத்து வெடிக்க வைத்து, கர்ப்பிணியான யானை ஒன்று நீரில் நின்றபடியே உயிரை விட்ட செய்தி வெளிவந்து பலரைக் கலங்கடித்திருக்கிறது.
காட்டில் வசிப்பவர்களுக்கு இது புதிய செய்தி அல்ல.
அந்த அளவுக்குக் கொடுமையாக வேட்டையாடப்பட்டிருக்கின்றன யானைகள்.
யானைகளுக்குப் பிடித்தமான பழங்களில் ஒன்று, ‘சக்கைப் பழம்’ என்று கேரளாவில் அழைக்கப்படும் பலாப்பழம். நன்றாகக் கனிந்த பலாப்பழ வாசனைக்கே யானைகள் தேடி வரும். பலா மரத்தை ஒட்டி நின்று தும்பிக்கையை நீட்டிப் பலாப்பழத்தை விரும்பி உண்ணும்.
யானைகளைத் தந்தத்திற்காக வேட்டையாடுகிறவர்கள் கையாளும் உத்தி அதிர்ச்சியூட்டக் கூடியது.
நல்ல பலாப்பழத்தைப் பிளந்து, அதன் நடுவில் வெடி மருந்தை வைத்து, மறுபடியும் அதைத் தைத்து விடுவார்கள். பலாப்பழ வாசனை தூக்கலாக இருக்கையில், வெடிமருத்தின் நாற்றம் பின்தங்கி அடிபட்டுப் போய்விடும்.
யானை வந்து அந்தப் பலாப் பழத்தைத் தும்பிக்கையால் எடுத்து, வாய்க்குள் வைத்து அழுத்தும்போது, வெடிச்சத்தம் அதிரும். அப்படியே வாய்ப்பகுதி சிதறி அவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அலறிச் சரிந்து விழும். வலி தாங்காமல் துடிதுடித்து உயிரை விடும்.
உயிர் போன பிறகு அந்த யானையின் தந்தத்தை வேட்டையாடுகிறவர்கள் உருவியெடுத்துக் கொண்டு போனதும், வனப்பகுதியில் மாமிசக் குவியலைப் போலக் கிடக்கும் அந்த யானை.
அதற்கான புகைப்படங்களைப் பாரக்கிறபோதும், அந்த யானைகளை ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்த மருத்துவர்களின் கனத்த அனுபவங்களைக் கேட்கிறபோதும் உறுத்தலாக மனம் கனக்க வைக்கிறபடி இருக்கும்.
அப்படி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டிருப்பது வனப் பகுதியில் பழகியவர்களுக்குத் தெரியும். பட்டும், படாமலுமாக அந்தப் புள்ளிவிபரங்கள் பதிவாகும் அல்லது காணாமல் போகும்.
ஒரு பக்கம் “விநாயகனே… வினை தீர்ப்பவனே…” என்று சீர்காழி குரலால் தொழுது, கொழுக்கட்டை படைத்துக் கும்பிடுகிறோம். மறுபுறம் யானைகளின் வசிப்பிடங்களை மறித்து, மின் வேலியாலும், வெடி மருந்தாலும் உயிரிழக்கச் செய்கிறோம்.
களையைப் போல எத்தனை குரூரம் சிலருடைய மனங்களில்?
- யூகி
22.02.2021 02 : 40 P.M