வெற்றி பெற்ற திரைப்படத்தின் தாக்கத்தில் இன்னொரு கதையை உருவாக்குவது சாதாரண விஷயம். தமிழ் திரையுலகம் தொடங்கிய காலத்தில் இருந்து தொன்று தொடரும் இந்த வழக்கத்தை மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது ‘சக்ரா’.
விஷால், சமந்தா, ரோபோ சங்கர் நடிப்பில் பெருவெற்றி பெற்ற ‘இரும்புத்திரை’யை நினைவூட்டும் வகையில் சில காட்சிகளும் கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. முழுக்க முழுக்க டிஜிட்டலில் வழி நடக்கும் திருட்டுகளை முன்னது விவரிக்க, இப்படமோ டிஜிட்டல் உதவியுடன் நிகழ்த்தப்படும் திருட்டுகளின் பின்னணியைச் சொல்கிறது.
பரபரவென்று கதை சொல்வதில் தனக்கு திறமை இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார் இதன் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன்.
சுதந்திர தின கொள்ளை!
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அடையாறு வட்டாரத்தில் 50 வீடுகளில் வரிசையாகத் திருட்டுகள் நடக்கின்றன. கொள்ளை போன வீடுகள் அனைத்திலும் முதியோர்களே வசிக்கின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் சந்துரு தனது தந்தை பெற்ற அசோக சக்ரா பதக்கமும் கொள்ளை போனதை அறிகிறார். அதை மீட்பதற்காக, காயத்ரியின் தேடலில் கைகோர்க்கிறார்.
கொள்ளை போன அத்தனை வீடுகளிலும் ‘டயல் ஃபார் ஹெல்ப்’ நிறுவனம் சார்பாக எலக்ட்ரிக், பிளம்பிங் வேலைகள் நடந்தது கண்டறியப்படுகிறது. அதில் பணியாற்றுபவர்கள் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று போலீசார் சந்தேகப்பட, டிஜிட்டல் வழியில் அத்தனை நெட்வொர்க்கையும் கையகப்படுத்தி ஒரே ஒரு ஆள் இதனைச் செய்திருக்க முடியும் என்று நம்புகிறார் சந்துரு.
அவர் சந்தேகத்தை மெய்ப்பிக்கும் வகையில், லீலா (ரெஜினா கேசண்ட்ரா) என்ற பெண் இக்கொள்ளைகளில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்படுகிறது. கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் யார்? அவர்களுக்கும் லீலாவுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கடுத்து லீலா கொள்ளைகளில் ஈடுபட்டாரா? காயத்ரியும் சந்துருவும் அவரை எப்படி நெருங்கினர் என்ற கேள்விகளுக்குத் தனது பரபர திரைக்கதையில் பதிலளித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்தன்.
புத்திசாலித்தனமான காட்சிகள்!
எழுத்தில் ‘டைப்’ செய்வதை குரலாக மாற்றும் உத்தி, சிசிடிவி உட்பட நெட்வொர்க்கில் இயங்கும் பணிகளை தன்வயப்படுத்துதல், எல்லா விஷயங்களிலும் நேரெதிராக யோசிக்கும் குணம் உள்ளிட்ட சில விஷயங்களை வைத்துக்கொண்டு திரைக்கதையில் பரபரப்பு கூட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும், படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இப்படித்தான் நகருமென்ற எதிர்பார்ப்பு பொய்ப்பதில்லை.
தொடக்கத்தில் வரும் பதினைந்து நிமிடங்களில், அடுத்தடுத்து நடக்கும் கொள்ளைகளையும் அதனால் காவல் துறையில் ஏற்படும் அழுத்தத்தையும் விவரித்து, விஷாலின் அறிமுகத்துக்கு வழி கொடுக்கிறது திரைக்கதை. அதன் தொடர்ச்சியாக, கொள்ளை போன வீடுகளில் பணிகள் மேற்கொண்ட நபரைத் தேடும் காட்சி விறுவிறுப்பை கூட்டுகிறது.
அதன்பின், வழக்கம்போல கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டவரை உசுப்பேற்றுவது நிகழ்கிறது. இதில் தொடங்கி, லீலா என்ற பெண்ணைத் தொடர்வது வரை திரைக்கதை ஓட்டம் சீராக இருக்கிறது.
இறுதியாக, லீலாவும் சந்துருவும் நேருக்கு நேராக மோதும் காட்சிகள் மட்டுமே அந்த வேகத்தை மட்டுப்படுத்துகின்றன. இதனால், கிளைமேக்ஸ் வெகு சிம்பிளாக முடிந்தது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
திரைக்கதை அமைப்பிலும் கதாபாத்திர உருவாக்கத்திலும் ‘இரும்புத்திரை’யை நினைவூட்டுகிறது சக்ரா.
ஒருவேளை ‘இரும்புத்திரை 2’ என்ற பெயரை வைத்திருந்தால், இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாமல் போயிருந்திருக்கலாம். காரணம், இரும்புத்திரையில் காட்டப்பட்ட டிஜிட்டல் திருட்டின் நீள அகலம் அதிகமென்பதால் ‘சக்ரா’வின் மையமாகத் திகழும் திருட்டு மிகமிகச்சிறியதாக இருப்பதே.
கே.டி.பாலசுப்பிரமணியமின் ஒளிப்பதிவும், தியாகுவின் படத்தொகுப்பும் கண்ணனின் கலையமைப்பும் ஒரு பிரமாண்டமான படத்தைப் பார்க்கும் உணர்வை அதிகப்படுத்துகின்றன. வழக்கம்போல, தன் பின்னணி இசையால் காட்சிகளின் வேகத்தை துரிதப்படுத்தியிருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.
அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் பிரமாண்டம் தெரிந்தாலும், உற்சாகமூட்டும் அம்சங்கள் இல்லை.
விஷால், சாரதா ஸ்ரீநாத், ரோபோ சங்கர், ரெஜினா கேசன்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர். மனோபாலா, கே.ஆர்.விஜயா, விஜய்பாபு ஆகியோர் இரண்டொரு காட்சிகளில் வந்து போகின்றனர்.
டெல்லி கணேஷ் மகன் மகாவுக்கும் அவரது சகோதரராக நடித்தவருக்கும் இன்னும் கொஞ்சம் ‘ஸ்பேஸ்’ தந்திருக்கலாம்.
இரும்புத்திரையை போல அப்பா-மகன் செண்டிமெண்டோ, வலுவான வில்லத்தனமோ, டிஜிட்டல் வழி திருட்டுகளின் அபாயங்களோ ‘சக்ரா’வில் இல்லை. ஆனாலும், அதன் மினியேச்சர் போல அமைந்திருக்கிறது.
ஒரு கமர்ஷியல் திரைப்படம் என்ற வகையில் கச்சிதமான உருவாக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘சக்ரா’. விஷாலின் பார்முலா என்று சொல்லத்தக்க வகையில், இதன் தொடர்ச்சியாக சில கதைகள் வெளியாக வழியமைத்து தந்திருக்கிறது.
- உதய் பாடகலிங்கம்
22.02.2021 01 : 20 P.M