ஊடக வெளிச்சம் கிடைக்குமா நமது இளைஞர்களுக்கு?

இன்றைய அரசியல் சூழல் நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. அந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை நம் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன.

‘உண்மை தான் கடவுள்’ என்ற காந்தியின் வாதம் முடக்கப்பட்டு இன்று தேர்தலுக்காக ஒருவித அரசியல் கட்டமைக்கப்பட்டு தேர்தலில் வெற்றிபெற எந்த வழிமுறையையும் பின்பற்றலாம் என்ற நிலைக்கு நம் கட்சிகள் வந்து பொய்மையிலும் பிம்பங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக மக்களாட்சி என்பது மக்களைப் பக்குவப்படுத்தும் மாண்பினைப் பெற்ற ஒரு ஆட்சிமுறை. ஆனால் அந்த மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளான, சமத்துவம், சகோதரத்துவம், நேர்மை, நியாயம், நீதி, ஒருவரையொருவர் மதித்து நடத்துதல், ஆதிக்கமற்ற ஒப்புரவுத் தன்மை, உண்மையின் அடிப்படையில் செயல்படுதல், விவாதத்தின் அடிப்படையில் முடிவு எடுத்தல், எதிர்க்கருத்துக்கு மதிப்பளித்தல் போன்றவைகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு தேர்தல் வெற்றிதான் பிரதானம் என்ற கட்டத்திற்கு நம் அரசியலைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றோம்.

இவைகள் எல்லாம் நாம் பார்க்கும் வெளித்தோற்றம்.

ஏனென்றால் இன்று வெகுஜனங்களுக்கான ஊடக வெளிச்சம் முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளின் பக்கமும், அரசாங்கத்தின் பக்கமும் விழுவதால் சமூகத்தில் நடக்கும் எண்ணற்ற நல்ல பணிகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. எது தொடர்ந்து வெளிச்சத்தைப் பெறுகிறதோ அதுதான் மக்களின் மன ஓட்டத்தில் சென்று மக்கள் சித்தனைப் போக்கில் தாக்கம் பெற்று விடுகிறது.

அந்த வகையில் சமூகத்தில் நடைபெறும் நற்செயல்களைக் காட்டிலும் அரசியல் தளத்தில் நடக்கும் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஊடகங்கள் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. அவை தான் சமூகத்தின் சிந்தனைச் சூழலில் பிரதிபலிக்கின்றன.

இந்தச் சூழல் தொடர்வது நம் சமூகத்திற்கும் நல்லதல்ல அரசியலுக்கும் நல்லதல்ல. இதை ஆழ்ந்து ஆய்வு செய்து பார்த்தால் நமக்கு ஒரு செய்தி புலப்படும். இவைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் நம் சமூகத்தில் மக்களின் மன ஓட்டம் மாசற்று இயங்க இயலாத நிலைக்கு மக்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் என்பதுதான்.

காந்தி இந்தியாவுக்கான விடுதலை பற்றி விவாதிக்கும்போது இந்தியாவுக்கு முதலில் தூய்மை, தேவையாக இருப்பது துப்புரவு, சுத்தம் தான் என்று கூறி தூய்மைக்கான ஒரு அறிவியல் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். காந்தி சொன்ன தூய்மை என்பதை நாம் வெளியில் கிடக்கும் அசுத்தத்தைத் துப்புரவு செய்வது என்ற புரிதலுடன் நிறுத்திக் கொண்டோம்.

அவர் தூய்மை என்பதை இரண்டு நிலையில் சமூகத்துக்கு வடிவமைத்து ஒரு அறிவியலாகவும் கலாச்சாரமாகவும் செயல்பட வழிவகை கண்டார். ஆனால் அதை நாம் துப்புரவு என்ற பதத்திற்குமேல் பார்க்கத் தவறிவிட்டோம். உள்ளும் புறமும் என்ற இரண்டு இடங்களுக்கான தூய்மையை வலியுறுத்தி, அவைகளுக்கான முறைமைகளையும் நமக்கு அவர் உருவாக்கித் தந்தார்.

இந்தத் தூய்மைக்கும் நம் சுதந்திரத்திற்கும் ஒரு தொடர்பிருக்கிறது. நாம் எந்த அளவுக்கு வெளியிலும் உள்ளுக்குள்ளும் தூய்மையாக வாழ்வை அமைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு சுதந்திரம் வயப்படும். இந்த இரண்டும் நடந்தேறும் சூழலில் சமூகம் மிக உயரிய கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பித்துவிடும். எந்த அளவுக்கு ஒரு சமூகம் சுயக் கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பிக்கின்றதோ, அந்த அளவுக்கு அந்த சமூகம் மேம்பட்ட மானுட வாழ்க்கை முறைக்கு வந்துவிடும்.

அது சுய ஆட்சிக்கான அறிவியல். சமூகம் புறத்திலும், அகத்திலும் எந்த அளவுக்கு தன்னை அறிவியல் பூர்வமாக தூய்மைப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்கு சமூகம் தன்னை நெறிப்படுத்திக் கொண்டுவிடும். தன்னை நெறிப்படுத்திக் கொண்டு வாழும் சமூகத்தில் மனித வாழ்வு மாண்புற்றதாக அமையும்.

இதற்கு மிகப்பெரிய அளவில் மக்கள் தயாரிப்பு தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்புக்குத் தான் இந்தியா தயாராக வேண்டும் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு என்ற அடிப்படையில் கிராம நிர்மாணத் திட்டத்தை வடிவமைத்து, அதை நடைமுறைப்படுத்த கிராம நிர்மாண ஊழியர்களை உருவாக்க முயன்றார் காந்தி. அவர் மறைவிற்குப்பின் அது இயக்கமாகவில்லை. அந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் அரசு செய்யும் என உத்தரவாதத்தை தந்து அரசாங்கத்தைக் கட்டி, திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தின அரசுத் துறைகள்.

அதன் வெளிப்பாடுதான் இன்று நாம் சமூகத்தில் பார்க்கும் குப்பைக் கிடங்குகள். நாம் இந்தக் குப்பைகளை நம் நுகர்வால் உருவாக்கியிருக்கிறோம். நுகரத் தெரிந்த நமக்கு நுகர்வால் வந்த குப்பையை மேலாண்மை செய்யத் தெரியவில்லை. அது துப்புரவுப் பணியாளர்களின் பொறுப்பு என்று கூறி அப்படியொரு சமூகத்தை உருவாக்கி அவர்களை ஆபத்தான வாழ்க்கையில் வாழ வைத்துள்ளோம்.

காந்தி கூறிய அகத்தூய்மை பற்றி புரிதல் இருந்து நாம் நம்மை தயார் செய்திருப்போமேயானால் இவ்வளவு வெறி பிடித்து நுகர்வுக்குச் செல்லாமல் தேவை அடிப்படையில் வாழ்ந்து, நம் குப்பை, நம் கழிவு, நம் பொறுப்பு என்று புறத்தூய்மை பேணி இந்தியாவை தூய்மையாக வைத்திருப்போம்.

சுதந்திரத்திற்கு முன், எனக்கு சுகாதாரம்தான் முதலில் இந்தியாவிற்கு வேண்டும் என்று கூறிய காந்திக்கு ஆண்டுதோறும் விழா நடத்த முடிந்ததே தவிர தூய்மையான இந்தியாவை உருவாக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு மாறாக இந்தியாவின் நகரங்களையும் கிராமங்களையும் நாம் குப்பைக் கிடங்குகளாக்கி, அதில் வாழப் பழகிக் கொண்டோம்.

காந்தியின் 150-வது பிறந்த ஆண்டிலாவது இந்தியாவை, குறைந்தது புறத்திலாவது சுத்தமாக்கி, அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் என தூய்மை இந்தியா என்ற திட்டம் அமலானது. அதையும் நம் அரசியல் சூழலால் அதன் மூலத்தை உணர்ந்து அதற்கான ஒரு ஆதரவுச் சூழலை உருவாக்கி, தூய்மை இந்தியாவுக்கான மக்கள் இயக்கமாக மாற்ற இயலவில்லை.

தூய்மை இந்தியா என்பது தூய்மைப் பணியாளர்களால் மட்டுமே உருவாவது கிடையாது. தூய்மை இந்தியா இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் ஒவ்வொருவரின் பொறுப்புமிக்க செயல்பாடுகளால் வருவது. எனவே குடிமக்கள் பொறுப்புமிக்க குடிமக்களாகச் செயல்படுவதற்கான புரிதலும், அறிவும், திறனும் வளர்க்கப்பட்டாக வேண்டும். அதற்கான வாழ்க்கைக் கல்வியைப் பொதுமக்களுக்குத் தந்திருக்க வேண்டும்.

தூய்மை இந்தியா என்பது கழிப்பிடம் கட்டுவதால் மட்டுமே வந்துவிடாது. கழிப்பிடக் கலாச்சாரம் உருவாக்கப்பட்டால் கட்டிய கழிப்பிடத்தை மக்கள் தனதாக்கி முறைப்படிப் பயன்படுத்தி ஒரு ஆரோக்யமான வாழ்வை வாழ்ந்திடுவார்கள். கழிப்பிடக் கலாச்சாரத்தை உருவாக்க நமக்குத் தேவை மக்களிடம் ஒரு விழிப்புணர்வு, ஒரு பார்வை, அது நம் வாழ்க்கையின் அத்தியாவசியம் என்ற உணர்வை உருவாக்க வேண்டும்.

இந்தச் செயல்பாட்டை நாம் செய்வதன் மூலம் தான் ஒரு தூய்மையான பாரதத்தை உருவாக்க முடியும். இந்தக் கல்வியை இன்றுவரை நம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நாம் கொண்டு சேர்க்கவில்லை. அதன் பிரதிபலிப்புதான் நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற குப்பை மேடுகள் மற்றும் முறையுடன் உபயோகப்படுத்தப்படாத கழிப்பறைகள்.

குப்பையுடன் தொடர்புடைய இன்னொரு பிரச்சினை தண்ணீர். உலக மக்கள் தொகையில் 16% மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். ஆனால் உலக தண்ணீர் ஆதாரத்தில் 4% தண்ணீரை மட்டுமே இந்தியா பெற்றிருக்கிறது. இன்று அதுவும் பெருமளவு 70% மாசுபட்டு தூய்மை இழந்துள்ளது என்பதை நமக்கு ஆய்வு அறிக்கைகள் தரவுகளின் மூலம் கொண்டு வந்து கொடுத்துள்ளது.

தண்ணீர் பற்றிய பார்வையும், அறிவும், உணர்வும் அற்று செயல்பட்டதன் விளைவு தண்ணீர் மாசுபட்டது மட்டுமல்ல எதிர்காலத் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாது 2030ல் 40% மக்கள் தண்ணீருக்காக அலைய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

அது மட்டுமல்ல நம் பொருளாதார வளர்ச்சிச் செயல்பாடுகளுக்குத் தேவையான தண்ணீர் கொடுக்க இயலாத சூழலில் பொருளாதார வளர்ச்சி 2040, மற்றும் 2050ல் 4% அளவுக்கு வரும் சூழல் இருப்பதாகவும் சூழலியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகியும் நாம் இன்னும் 80% குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடிதண்ணீரைத் தர இயலவில்லை.

தற்போதுதான் இதற்கான ஒரு நீர்த்திட்டம் மக்கள் இயக்கமாக உருவாக்கப்பட்டு 3.50 லட்சம் கோடி செலவில் 18 கோடி குடும்பங்களுக்கு 2024க்குள் தண்ணீர் கொடுக்கத் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று தண்ணீர் சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு, அதுவே பெரு வணிகமாகவும், மாற்றப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு குடிதண்ணீருக்காக என்று குழாய் பதித்து தண்ணீர் தர முனைந்ததோ அன்றே நம் கிராமத்து மக்கள் நீர்; ஆதாரமாக விளங்கிய குளங்களையும் குட்டைகளையும், ஊரணிகளையும் கைவிட ஆரம்பித்து விட்டனர்.

இன்று அந்த நீர் நிலைகள் அனைத்தும் பல இடங்களில் குப்பைக் கிடங்குகளாகவும், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் விட்டன. இந்தச் செயலை வெளிநாட்டிலிருந்து வந்து யாரும் செய்யவில்லை. அந்த ஊரில் வசிக்கும் மக்கள்தான் அப்படி நீர்நிலைகளை பாழ்படுத்தி கவனிப்பாரற்று ஆக்கி வைத்துள்ளனர். இது அறியாமையின் ஒரு வெளிப்பாடு.

அடுத்து பொதுச் சொத்தைச் சுரண்டும் ஒரு ஆசை. அதே நேரத்தில் பொறுப்பற்று இயங்கும் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக இயற்கையைப் பாழ்படுத்தும் செயலை தொடர்ந்து விழிப்பற்ற நிலையில் செய்து வருகின்றனர் என்பது தெரிந்தும், இதற்குத் தேவையான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வற்று இயங்குகிறது நம் நடுத்தர படித்த வர்க்கம்.

இதனால்தான் ஒரு கனடா நாட்டு விஞ்ஞானி கூறினார் “உயிரினங்களிலேயே மனிதன் ஒரு விசித்திரமான பிறவி. அதனால்தான் தான் அவன் வணங்குகின்ற தெய்வம் இயற்கை என்பது தெரியாமல் அதையே அழிக்கின்றான்”

சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்னும், உலகில் அறிவுசார் மக்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவால் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அறிவியலையும், முறையான தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி மதிக்கத்தக்க மானுட வாழ்வை மக்களாட்சி தரும் சமத்துவத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை. மரியாதையுடன் வாழத் தேவையான அறிவையும் ஆற்றலையும் தர முடியவில்லை.

இன்று கிராமங்களுக்குத் தேவை பணம் அல்ல, அறிவியல், தொழில்நுட்பம், வாழ்வியல் கல்வி, ஆற்றல் பெருக்கம். இந்தப் பணிக்கு பெரும் மூலதனம் தேவையில்லை. அதற்குத் தேவை வழிகாட்டும் அறிவுசார் தலைமை. பொதுவாக நம் சமுதாயத்தில் தலைமை என்றால் அதிகாரம் வைத்திருக்க வேண்டும், பதவி வைத்திருக்க வேண்டும், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற விளக்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

தலைமை என்பதற்குப் பெயர் மாற்றத்திற்கான வழிகாட்டி. அந்த வழிகாட்டும் தலைமை ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. அந்த வகையில் ஒரு கல்லூரியிலிருந்து மாணவர்களுடன் சென்று மக்களிடம் சுகாதாரம் பற்றி, சுத்தம் பற்றி, வசிப்பிடத் துப்புரவு பற்றி, கழிப்பறைக் கலாச்சாரம் பற்றி, தண்ணீரின் முக்கியம் மற்றும் மேலாண்மை பற்றி மாசில்லா எரிபொருள் பற்றி, உடல் ஆரோக்யம் பற்றி, எரிசக்தி சிக்கனம் பற்றி, இயற்கை முறை விவசாயம் பற்றி, சிக்கனம் பற்றி, ஒரு ஆசிரியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவரும் ஒரு தலைவரே.

வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நிறைய மனிதர்கள் மிகப்பெரிய நல்ல காரியங்களை ஓசையின்றிச் செய்து மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு ஊடக வெளிச்சம் இல்லாத காரணத்தால் நம் அரசியல் அழுக்குகள் மீண்டும் மீண்டும் அலசிப் போட்டி போட்டு தாழ்நிலைக்குச் செல்லும் அரசியலையே தொடர்ந்து படம்பிடித்துக் காட்டி மக்களை ஒரு சோர்வு நிலைக்கு தள்ளுகின்றனர்.

இந்த நிலையிலிருந்து விடுபடக் களத்தில் எண்ணற்ற இளைஞர்கள் எதிர்காலம் குறித்த பார்வையுடன் பணி புரிகின்றனர். அவர்களின் ஒருங்கிணைப்பும், அறிவார்ந்த மக்கள் இயக்கச் செயல்பாடும்தான் தமிழகத்துக்கு வழிகாட்டும். நம் அரசியல் கட்சிகளின் போட்டி சேவைக்கானது அல்ல, அதிகாரத்தைச் சுவைப்பதற்கானது.

சேவைக்கானது என்றால் இவ்வளவு செலவழித்து தேர்தலில் ஒரு வெறுப்பு அரசியலை உருவாக்கி மக்களைப் பிரித்துச் செயல்பட வைக்க மாட்டார்கள். இதையறிந்த காந்தி மிகக் கடுமையான விழுமியங்களை வைத்து அரசியலை கட்டமைக்க முனைந்தார். அந்த அரசியல் சேவைக்கானது, மாற்றத்திற்கானது. அது விலையில்லா அரசியல். அது ஒட்டுமொத்த மக்களுக்கான மேம்பாட்டு அரசியல்.

இதற்குக் கட்சிகள் தேவையில்லை. இதற்கு அன்பும், அர்ப்பணிப்பும், சேவையும், தியாகமும் தான் தேவை. அது மாற்றுச் செயல்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்களிடம் இருக்கிறது. எனவே மாற்றத்தை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற இளந்தலைவர்களை படம் பிடிக்கவும், அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சவும் நம் ஊடகங்கள் தயாராக வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

22.02.2021  04 : 37 P.M

Comments (0)
Add Comment