சிங்கப் படையின் புதிய சிப்பாய்கள்!

மொயின் அலி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3  விஷயங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டிருந்தனர். முதலாவதாக டுபிள்ஸ்ஸி ஆடாத சமயங்களில் அதை ஈடுகட்ட ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வேண்டும். இரண்டாவதாக இந்திய ஆடுகளங்களில் எடுபடும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் வேண்டும். மூன்றாவதாக ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அதிரடியாய் ரன்களைக் குவிக்க ஒரு சூப்பர் பினிஷர் வேண்டும்.

இந்த 3 தேவைகளையும் பூர்த்தி செய்யும் நபராய் அணியில் நுழைந்துள்ளார் மொயின் அலி. இங்கிலாந்து அணிக்காக  தொடக்க ஆட்டக்காரராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும், சிறந்த பினிஷராகவும் பல்வேறு அவதாரங்களை  எடுத்துள்ள மொயின் அலியை 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சேப்பாக்கம் மைதானத்தில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 17 பந்துகளில் 43 ரன்களை மொயின் அலி குவித்தபோதே, அவரது பெயரை தோனி தன் மனதில் குறித்துக்கொண்டார். அதனால்தான் ஏலத்தின்போது அணி நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்த தோனி, மொயினை வாங்கிப் போடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் செட்டிலான பாகிஸ்தானிய குடும்பத்தில் 1987-ல் பிறந்த மொயின் அலி, தனது 15 வயது முதலே இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார்.  ‘தூஸ்ரா’ வகைப் பந்துகளை வீசக்கூடிய முதலாவது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்று பெயர்பெற்ற மொயின் அலி, 2014-ம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக ஆடிவருகிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய மொயின் அலி, இம்முறை சென்னை சிங்கமாக கர்ஜிக்க வருகிறார்.

கிருஷ்ணப்பா கவுதம்:

ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா ஆகியோர் இல்லாத நிலையில் உள்ளூரைச் சேர்ந்த ஒரு நல்ல ஆஃப் ஸ்பின்னர்  சென்னை அணிக்கு தேவைப்பட்டார். அந்த சுழற்பந்து வீச்சாளர், பேட்டிங்கிலும் கொஞ்சம் கெட்டிக்காரராய் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அணி ஆசைப்பட்டது. இந்த 2 தேவைகளையும் பூர்த்தி செய்வார் என்பதால்தான் கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன்மூலம் இந்திய அணிக்காக ஆடாத வீரர்களில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையை கிருஷ்ணப்பா கவுதம் பெற்றுள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் ரசிகரான கிருஷ்ணப்பா கவுதம், அவரைப் போலவே பந்து வீசக்கூடிய திறன் வாய்ந்தவர். 2012-ம் ஆண்டுமுதல் கர்நாடக அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் கிருஷ்ணப்பா கவுதம், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியபோதிலும், இந்திய அணியில் இன்னும் இடம்பிடிக்கவில்லை.

சென்னை அணிக்காக ரு.9.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள கிருஷ்ணப்பா கவுதம், “என்னால் இன்னும் இதை நம்ப முடியவில்லை. சென்னை அணிக்கு என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆடுவேன்” என்று கூறியுள்ளார். சென்னை அணியும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

சேதேஸ்வர் புஜாரா:

டெஸ்ட் போட்டிகளில் சக்ரவர்த்தியாக இருந்தாலும், டி20 போட்டிகளில் ஒரு சாதாரண படைவீரன் அளவுக்குகூட இதுவரை யாரும் புஜாராவை மதிக்கவில்லை. இந்த நிலையில் புஜாராவின் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்தைக் கொடுத்து வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை அணியைப் பொறுத்தவரை தோனி, ரெய்னா, ஜடேஜா,  பிராவோ, சாம் கரண் என்று அதிரடியாக ஆட பல வீரர்கள் உள்ளனர். அதே நேரத்தில் திடீரென்று ஒரு சரிவு ஏற்பட்டால், அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய, நிதானமாக ஆடும் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. சென்னை அணியின் தொடக்க காலங்களில் பத்ரிநாத் செய்துவந்த இந்தப் பணியை செய்வதற்காகவே புஜாராவை வாங்கியுள்ளனர்.

ஹரி நிஷாந்த்:

சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் தமிழக அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹரி நிஷாந்த், தொடக்க ஆட்டக்காரரான இவர் பல போட்டிகளில் தமிழக அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்தக் காரணத்துக்காக ரூ.20 லட்சம் கொடுத்து தமிழக அணியில் ஹரி நிஷாந்தைச் சேர்த்துள்ளனர். 19 டி20 போட்டிகளில் ஆடியுள்ள நிஷாந்த் 393 ரன்களை அடித்துள்ளார்.

இவர்களைத் தவிர ஆந்திர வேகப்பந்து வீச்சாளரான ஹரிசங்கர் ரெட்டி, ஹைதராபாத் ஆல்ரவுண்டரான பகத் வர்மா ஆகியோரையும் சென்னை அணி வாங்கியுள்ளது.

– பிரேமா நம்பியார்

19.02.2021 11 : 23 A.M

Comments (0)
Add Comment