மாற்றத்தை விரும்பும் மாநிலம்!

தேர்தல் களம் – 4 : மேற்குவங்கம் 

மேற்கு வங்களம் என்ற மாநிலம் மற்ற எந்த இந்திய மாநிலத்தையும் விட மிகவும் வேறுபட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இதன் நவீன சரித்திரம் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை, இந்த பிரதேசத்தின் சிறப்புக் குணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலம்.

நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஆன்மீகவாதிகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், சாரதா தேவி, மகரிஷி அரவிந்தர், வேதாந்த சுவாமி பிரபுபாதா போன்ற உலகப் புகழ்பெற்ற ஆன்மீகப் பெரியோர்கள் உதித்த இடம். அடுத்தது கவித்துவ மனம் கொண்ட கலைஞர்களான ரவீந்திரநாத் தாகூர், பக்கிம்சந்திர சட்டர்ஜி, சத்யஜித் ராய், மிருணாள் சென், சரத் சந்திரர், தாராசந்திர பந்தோ பாத்யாயா எனப் பலரை இந்த வகையில் குறிப்பிடலாம்.

இதைத் தவிர விடுதலைப் போராட்ட வீரர்களான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பிபின் சந்திர பால், சித்தரஞ்சன் தாஸ், குதிராம் போஸ் போன்றோரும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இதேபோல், அரசியல்வாதிகள் என்று எடுத்துக்கொண்டால், அகில இந்தியப் புகழ் பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்திய வரலாற்றில் நெடுங்காலம் முதல்வராக இருந்த ஜோதி பாசு, மிகப் பல வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, அனைவரும் இப்போது பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் இன்றைய முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராயும் இந்த மாநிலத்தவர்தான்.

இந்த மாநிலத்தின் முக்கிய விளையாட்டு துடிப்பு மிக்க கால்பந்து. இந்தியா முழுவதற்கும் பெருமை சேர்த்த முக்கிய அணிகள் இங்கிருந்துதான் இயங்கி வந்தன. இதன் காரணமாகத்தான், இப்போது இந்தியா முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்கள் விளையாடும் கால்பந்து லீக் உருவாகியுள்ளது.

இது மட்டுமின்றி எதில் ஈடுபட்டாலும் தங்களது வேகம், சட்டென்று எதையும் செய்ய நினைக்கும் துடிப்பு இந்த மாநில மக்களுக்கு இயல்பானது என்பதற்கு கிரிக்கெட் ஆட்டக்காரர் சவுரவ் கங்குலியையும் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.

இதெல்லாமே, மேற்கு வங்காளம் என்ற மாநிலத்து மக்களின் மனப்பாங்கைப் புரிய வைக்கக்கூடிய விஷயங்கள். இவர்களது மாநில அரசின் விலங்கு –  மீன் வேட்டையாடும் பூனை; பறவை – மீனைக் காத்திருந்து அதி வேகமாக வேட்டையாடும் கிங்ஃபிஷர். மரம் – பழங்குடிகளால் பிசாசு மரம் என்று வர்ணிக்கக்கூடிய சப்த பர்ணிகா.

மாற்றத்தை விரும்பும் மாநிலம்

இது போன்று குறிப்பிட்ட இடத்துக்கே உண்டான குணாம்சங்கள், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையிலும், அரசியலிலும் பிரதிபலிப்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான்.

இதையெல்லாம் அந்தப் பகுதியின் குணாம்சங்களின் உதாரணங்களாகப் பார்க்கலாம். அதாவது, மாற்றத்தை விரும்புபவர்கள், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள். எதையும் கேள்வி கேட்கப் பழகியவர்கள், மிகப் பெரும் அறிவும், உணர்ச்சிகரமான மனதையும், கலையுணர்வையும் கொண்டவர்கள்.

இந்த குணங்களின் கலவையாகத்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இருந்தார்கள். இதில் கட்சிப் பாகுபாடு ஏதுமில்லை. இந்த மாநிலத்தின் ஆதிகாலம் முதலே அரசியலில் இருந்த ஒரே பொதுப்படையான குணம் அதிகாரத்தை ஏற்க மறுப்பது, அமைதியின்றி இருப்பது ஆகியனவற்றை சொல்லலாம்.

பங்காளிப் பகைமை

இங்கே நடந்த அனைத்து விதமான அரசியல் மாற்றங்களும், கொள்கை மாறுபாடுகளால் ஏற்பட்டதல்ல. ஒரே கட்சியில் இரு தரப்பினருக்கும் இடையில் எழும் கருத்து வேறுபாடுகள்தான் காரணம்.  அது காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இப்போது திரிணமூல் காங்கிரஸ் என்று எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்கு வங்க அரசிலில் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய சூட்சுமம் இது என்றும் கூறலாம்.

சுதந்திரம் அடைந்த முதல் முப்பது வருடங்கள் மேற்குவங்க மாநிலம் காங்கிரஸ் கையில் இருந்தது. ஆனாலும் கூட பிற மாநிலங்களில் இருந்தது போன்ற அமைதியான ஆட்சியாக, ஆளும் கட்சியாக இருந்தாலும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்படும் கட்சியாக இருந்ததே இல்லை. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அது தன் ஆட்சியை இழந்தது எதிர்க் கட்சியினரிடம் இல்லை. சொந்தக் கட்சியிலேயே அதிருப்தியாளர்களால் கேள்வி கேட்கப்பட்டு ஆட்சியை பறிகொடுத்தக் கட்சியாக இருந்தது. அது பற்றி பின்னர் பார்க்கலாம்.

அது போலவே, கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே கட்டுப்பாடான கட்சி என்ற பெயர் இருந்தது. ஆனால் உலகத்திலேயே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கம்யூனிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றும் கட்சியாக இருந்த மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆட்சியை, பெயரை இழந்ததும், உட்கட்சிப் பூசல்களினால்தான். அதன் கூடவே புதிதாக அரசியல் வானில் சூறாவளி போல பிரவேசித்த மம்தா பானர்ஜியை ஒரு வித காழ்ப்புணர்ச்சியுடனும், அலட்சியத்துடனும் கையாண்டதால், ஆட்சியை இழந்தது.

மம்தாவின் எழுச்சி

காங்கிரசுக்குள் தனது சிறு வயதிலிருந்தே ஐக்கியமாகி இருந்த மம்தா பானர்ஜி அந்தக் கட்சியை உடைத்து வெளியேறினார்.  காங்கிரஸ் பெயருடன் திரிணமூல் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டு, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வீழ்த்தினார். இதற்கும் மேலே ஒரு படி சென்று அதே காங்கிரசுடன் கூட்டும் வைத்துக் கொண்ட அவரை, காங்கிரசால் மறுபடியும் ஜீரணிக்க முடியவில்லை.

பத்து வருடங்களுக்கு முன்பு வரை, மேற்கு வங்கத்தில் பெரும் சக்திகளாக இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இப்போது பெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிற பாஜகவையும் மம்தா பானர்ஜி தனி ஒருவராய் எதிர்த்து நிற்கிறார். மிகப் பெரும் சக்தி மையங்களாய் விளங்கிய காங்கிரசும், அதை எதிர்த்தே அரசியல் செய்து முப்பது வருடங்களாய் அந்தக் கட்சியை இரண்டாம் முறை காலூன்ற விடாமல் செய்த கம்யூனிஸ்டு கட்சி ஆகிய இரண்டுமே இன்று தனது வலிமையை இழந்து நிற்கின்றன.

இணைந்த எதிரிகள்

கடந்த காலங்களில், இவர்கள், தங்களது கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று வாக்குகளை அளிக்காமல், பாஜகவைத் தோற்கடிக்க, மம்தா, மம்தாவைத் தோற்கடிக்க பாஜக என்று வாக்குகளை மாற்றிப் போடும் மிகப் பரிதாபமான நிலைகுத் தள்ளப்பட்டனர்.

இப்போது இருவருக்கும் மேற்கு வங்க அரசியலில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காக, முன்பு பரம வைரிகளாய் இருந்தவர்கள் பிழைத்திருப்பது மட்டுமே முக்கியம் என்கிற தாரக மந்திரத்தோடு ஒன்றிணைந்திருகின்றனர்.

இப்போது களத்தில் பரபரப்பாகப் பேசப்படும் முக்கிய எதிரிகளாய் இருக்கும் பாஜக, மம்தா ஆகியோர் புதிதாய் வளர்ச்சி பெற்றவர்கள். இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், மற்றவர்கள் செய்யும் தவறுகளினால் வளர்ந்து செழித்திருப்பதுதான்.

காங்கிரஸ் அலட்சியம் செய்ததால் பொங்கியெழுந்து தனிக் கட்சி ஆரம்பித்தவர் மம்தா. அவரை மிக முக்கிய எதிரியாக அடையாளப் படுத்தி, மிக முரட்டுத் தனமாக கையாண்டு, அவரை பெரும் தலைவராக நிலை நிறுத்திய பெருமை கம்யூனிஸ்டு கட்சியையே சாரும்.

அதே சமயம், கம்யூனிஸ்டுகளையும் காங்கிரசையும் ஓரம் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த மம்தா, அவர்களைப் போல முரட்டு வழிகளைக் கையாளாவில்லை. தனது அரசின் நடவடிக்கைகள், இரு கட்சிகாளாலும் எதிர்க்க முடியாத சிறுபான்மையிருடன் நெருக்கம் போன்றவற்றால், அவர்களை ‘பாதுகாப்பு ஆட்ட நிலையிலேயே’ வைத்திருந்தார்.

பாஜக உள்ளே வந்து இந்துத்துவ கொள்கையைப் பேச ஆரம்பித்ததும், திடீர் சவாலால் சிறிது தடுமாறிய மம்தா, ஆரம்பத்தில், தனக்கே உரிய தடாலடி பாணியில் பாஜகவை எதிர்த்தார். கம்யூனிஸ்டு கட்சி அவர் விஷயத்தில் செய்த அதே தவறை, முதல்வர் மம்தா, பாஜகாவைக் கையாளும் முறையில் செய்தார். விளைவு, அவர் எதிர்பார்க்காமல் மாநிலத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது பாஜக.

பாஜகவின் ஆட்டம்

காங்கிரஸ், கம்யூனிசக் கட்சிகள் முழு மூச்சுடன் மம்தாவை எதிர்க்க விடாமல், சற்றே நிதானிக்க வைத்தது, மம்தாவிற்கு இருந்த சிறுபான்மையினரின் ஆதரவு. ஆனால் பாஜகவிற்கு இதுபோன்ற நிலை மிக சாதகமானது. இதுதான் மம்தா திணறக் காரணமாக இருந்தது.

போதாக்குறைக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் மம்தாவை ஒடுக்க, பாஜகவிற்கு வாக்களித்த கணிசமான பிற எதிர்க் கட்சியினர் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், அவசர கதியில் கூட்டுகளை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள்.

பாஜகவும் தன் பங்கிற்கு, மம்தாவை மட்டுமே எதிரியாக நினைத்து காய்களை  நகர்த்தி வருகிறது. திரிணமூல் கட்சியிலிருந்துதான் ஆட்கள் பாஜகவிற்குள் ‘ஈர்க்கப்படுகின்றனர்’.

இதுதான் இப்போதைய நிலை. அடுத்து கட்சிகள் வாரியாக இருந்த நிலை, இருக்கும் நிலை ஆகியவற்றைப் பார்க்கலாம்.

18.02.2021    2 : 30 P.M

Comments (0)
Add Comment