இதயத்தைப் பாதிக்கும் நகர்ப்புற வாழ்க்கை!

ரூமாடிக் ஃபீவா் பற்றி விாிவாகப் பாா்த்தோம்.

இதை ஒழிக்கக் குழந்தைகளுக்குச் சத்துணவு வேண்டும். உடலில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும்போதுதான் இந்தக் காய்ச்சல் தாக்குகிறது. பொருளாதார வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கே இது வரும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இப்போது கிராமப்புறத்தில் பள்ளிக்கூடங்களில் மதியம் சத்துணவு கொடுக்கிறார்கள். இதன்மூலம் குழந்தைகளுக்கு ஓரளவாவது புரோட்டின் சத்து கிடைக்கிறது.

அமெரிக்காவிலும் லண்டனிலும் சராசரி மக்களின் வாழ்க்கை நிலை உயரஉயர ரூமாடிக் காய்ச்சலின் பாதிப்பு குறைந்தது. தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் மூலம் இங்கும் குறையலாம்.

கிராமங்களும் இருபத்தைந்து சதவிகிதம் நகர மயமாகி வருகின்றன. அவர்களுடைய வாழ்க்கை முறை, உணவுமுறை எல்லாமே சற்று மாறுகிறது.

தொடர்பு வசதிகள் பெறுகின்றன. சத்துணவுத்திட்டம் கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வைட்டமின் சத்துக் குறைபாடுடைய குழந்தைகளை இப்போது அபூர்வமாகவேப் பார்க்க முடிகிறது என்கிறார், கிராமப்புறங்களில் ஆய்வு செய்திருக்கிற எனது மனைவி.

முன்பு ‘மெனாஸ்மஸ்’ என்று எலும்பும் தோலுமாக ஆக்கிவிடும் கொடூரமான நோய், வைட்டமின் பற்றாக்குறையினால் வரும். அதை இப்போதுப் பார்க்க முடிவதில்லை என்பது ஆரோக்கியமான விஷயம்.

உணவில் இருக்கிற சில சத்துக்கள் மூலம்தான் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. காா்போ ஹைட்ரேட்டும் வேண்டியிருக்கிறது. புரதச்சத்தும் வேண்டியிருக்கிறது.

புரதச்சத்து குறைந்துபோனால் எதிர்ப்புச் சக்தியும் குறைந்து விடுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் சுலபமாகத் தொற்ற வாய்ப்பாகி விடுகிறது.

நகர்ப்புறங்களில் எங்கு பார்த்தாலும் உணவில் ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் வந்துவிட்டது. இதன்பாதிப்பு நகர்ப்புறக் குழந்தைகளுக்கும் இருக்கிறது.

இவர்கள் எதிர்காலத்தில் எம்மாதிரி பாதிக்கப்படுவார்கள் தெரியுமா?

இவர்களுக்கு ரத்த அழுத்தம், டயாபடீஸ், அதிகமான கொழுப்புச் சத்து மூன்றும் வந்துவிடும். நகர்ப்புறங்களில் சாப்பிடுகிற உப்பும் அதிகம். மாவுச் சத்தும் அதிகம். கொழுப்புச் சத்தும் அதிகம்.

அதே சமயத்தில் உடல் உழைப்பு கிடையாது. உடற்பயிற்சி கிடையாது. இதனால் ரத்த அழுத்தம் நிரம்பியவா்களும், கொழுப்புச் சத்து மிகுந்தவர்களும் எதிர்காலத்தில் அதிகமாக இருக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ரத்தநாள அடைப்புகள் சம்பந்தமான நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

ஆசியா கண்டத்தில் இருப்பவர்களுக்கு இப்போது இதயநாள அடைப்பு, மூளைக்குப் போகக்கூடிய ரத்தக்குழாயில் அடைப்பு அதிகமாக இருப்பதைத் தெரிவிக்கின்றன சில ஆய்வுகள்.

டயாபடீஸ் பாதிப்பும் உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகம். அதாவது நூற்றுக்கு ஒன்பது பேருக்கு இந்தப் பாதிப்பு.

நகர்ப்புறங்களில் இருக்கிறவர்களுக்கு நூற்றுக்கு ஒன்பது சதவிகிதப் பாதிப்பு. கிராமங்களில் நூற்றுக்கு நான்கு சதவிகிதத்தினருக்கு மட்டுமே பாதிப்பு.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நகர்ப்புறங்களில் மனிதனின் வாழ்க்கையே மாறிப் போய்க் கிடக்கிறது. மனதளவில் ஒருவித இறுக்கம். பலரிடம் பொதுவான அம்சமாக இருக்கிறது மனச்சோர்வு இருக்கிறது. மற்றவர்களிடமிருந்து ஒதுங்கக் கிடக்கிற போக்கு அதிகரித்திருக்கிறது.

கிராமப்புறங்களில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது அதிகம். அதனால் மனச்சோா்வு அங்கு அதிகம் வருவதில்லை. கூட்டுக் குடும்ப அமைப்பு முறை குலைந்து விட்டது. வீட்டில் பெரியவர்களின் அரவணைப்பு இல்லை. நேசம் இல்லை.

என்னதான் வசதிகள் இருந்தாலும் பலருக்கு மிஞ்சுவது ஒருவித சலிப்பான வாழ்க்கைதான். ஏர் கண்டிஷனில் என்னதான் சவுகாியமாக இருந்தாலும் மனது நிம்மதியாக இருக்காது.

இந்தச் சமயத்தில் மனம் சஞ்சலப்படுகிறது. அதிலிருந்து விடுபடத் துடிக்கிறபோது, ஒருவனிடம் பலவிதமான பழக்கங்கள் தொற்றுகின்றன. புகை பிடிக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். அளவுக்கு மீறி சாப்பிடுகிறார்கள். சட்டத்தை மீறிய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

இந்தப் பதற்றங்கள் எல்லாம் உடல் நலத்தைப் பாதிக்கின்றன. இந்த நேரங்களில் ரத்தநாளச் சுரப்பியிலிருந்து, அட்ரீனல் சுரப்பியிலிருந்து அட்ரீனல் அதிகமாகச் சுரக்கிறது. இது முழுமையாக உடலின் இயக்கத்தையே பாதிக்கிறது.

ஒரு தொழிலில் முழுமையாக ஈடுபாடு இல்லாதவனை அந்தத் தொழிலில் வைத்திருந்தால், அவனுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். நாகரீகமான நகர கலாச்சாரத்தில் நமக்கு நாமே வரவழைத்துக் கொள்கிற வியாதிகள் இவை.

இப்போது நாட்டிலேயே அதிகம் இருக்கிற வியாதி மனச்சோர்வு தான். அடுத்து கேன்சர். மூன்றாவது இதயமும், இதயம் சார்ந்த அத்தனை நோய்களும்.

இப்போது சராசரியாக நாற்பது, நாற்பத்தைந்து வயதில் பக்கவாதம் வருகிறது. ஹாா்ட் அட்டாக் வருகிறது. சர்க்கரை அதிகரிக்கிறது. இதனால் கிட்னி பாதிக்கப்படுகிறது. இதயமும் பாதிக்கப்படுகிறது.

நகர்ப்புற வாழ்க்கைமுறை உருவாக்கிக் கொடுத்த விளைவு இந்த வியாதிகள். உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், உடற்பயிற்சி இல்லாமல், பரஸ்பரம் மனம் விட்டு பேசுவதற்கு நல்ல மனிதர்கள் இல்லாமல் எப்போதும் போட்டி, பொறாமை எதைப் பார்த்தாலும் சந்தேகத்துடன் தனக்குத்தானே வரவழைத்துக் கொள்கிற வியாதிகள் இவை.

டார்வின் முன்பு சொன்னபடி, “சூழ்நிலைக்கு ஏற்றபடி அனுசரித்து ஆரோக்கியத்துடன் இருக்கும் ஜந்து தான் வாழும்” அதுதான் இன்றைக்கும் உண்மை.

உடல் ஆரோக்கியமும், திறமையும் வேண்டும்.

வாழ்க்கைக்கென்று ஒரு சில நியதிகளாவது கண்டிப்பாக வேண்டும். அப்படியிருந்தால் வியாதி வந்து சேர்வதற்கான காரணங்களைத் தவிர்க்க முடியும்.

இதயநோய் அதிகமாகக் காணப்படுவதற்கான காரணங்களான ரத்த அழுத்தமும், கொழுப்புச் சத்தும், சர்க்கரைச் சத்தும் எந்த அளவுக்கு நம் நாட்டில் இருக்கிறது?

கொழுப்புச்சத்து ஏன் நம் நாட்டில் மாறுபட்ட அளவில் இருக்கிறது? உடற்பயிற்சினால் நமக்கு கிடைக்கிற பலன்கள் என்ன? இயந்திரங்களைச் சார்ந்திருப்பதால் நமது உடல் எப்படி கெட்டது? என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.

(தொடரும்..)

அகில் அரவிந்தன் தொகுத்த ‘இதயமே இதயமே’ நூலிலிருந்து…

18.12.2019   04 : 30 P.M

Comments (0)
Add Comment