விதவிதமான கதாபாத்திரங்கள், வெவ்வேறு பருவங்களில் முகிழ்க்கும் காதல், குறிப்பிட்ட வட்டாரத்தில் நிகழும் வாழ்க்கை ஆகியவற்றை ஒரு நூலில் கோர்த்தாற்போல கதை சொல்கிறது ‘C/O காதல்’. திரைக்கதை மிகமெதுவாக நகர்வது போன்று தோன்றினாலும், குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல் படத்துடன் ஒன்றுகிறது மனம்.
அதேபோல, மிகச்சில படங்களில் நடித்தவர்கள் இடம்பெற்றிருப்பதும் ஒருவித ‘ப்ரெஷ்னெஸ்’ தருகிறது.
வெவ்வேறு பருவங்களில் காதல்!
வேலு எனும் பள்ளிச்சிறுவன் தன்னுடன் பயிலும் சுனிதாவின் மீது ஈர்ப்பு கொள்கிறார். ஒருமுறையாவது பேச முடியாதா என்று ஏங்குபவர்க்கு, அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்தச் சூழலில், வேலுவின் விருப்பத்தை ஏற்று பள்ளி விழாவில் ஒரு பாடலை பாட முடிவெடுக்கிறார் சுனிதா. இதனைப் பார்க்கும் சுனிதாவின் தந்தை, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அதன்பின்னர், சுனிதாவைப் பார்க்க முடியாமல் வேலு தவிக்கிறார்.
ஆனாலும், மதத்தைக் காரணம் காட்டி பார்கவியின் காதலுக்குத் தடை போடுகிறார் தந்தை. இதனால், பார்கவிக்கு வேறொருவருடன் திருமணமாகிறது.
மதுக்கடையில் பணியாற்றும் தாடிக்கு சலீமா என்ற பெண்ணை வெறுமனே கண்களுக்காகவே காதலிக்கிறார். அவர் விபச்சாரத்தை தொழிலாக மேற்கொள்கிறார் என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தாலும், தாடியின் காதல் குறைவதில்லை.
ஆனாலும், இருவரது காதலுக்கும் குறுக்கே மதம் வருகிறது.
நான்காவது கதையில், ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலை செய்யும் பழனிக்கு புதிதாக மாற்றலாகி வரும் அலுவலர் ராதாவின் நட்பு கிடைக்கிறது. கணவரை இழந்த ராதா தனது மகளுடன் வசித்து வருகிறார்.
மெதுவாக இருவரது புரிதலும் அதிகமாகி காதலில் வந்து நிற்கிறது. 50 வயதானாலும் கல்யாணமாகாமல் இருக்கும் பழனியைச் சுற்றியிருப்பவர்கள் கிண்டலடிக்க, 42 வயதான ராதாவின் வீட்டில் ‘இந்த வயதில் மறுகல்யாணமா’ என்று தடை போடுகின்றனர்.
நான்கில் மூன்று கதைகள் சோகத்தில் முடிகின்றன. கடைசி கதை என்னவானது என்பதைச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
இருக்கு ஆனா இல்ல!
நான்கு ஜோடிகளின் காதலைக் காட்டினாலும், கிளைமேக்ஸ் ‘அட’ சொல்ல வைக்கிறது.
‘விளக்கு வச்ச நேரத்துல’ பாடலைப் பாடும் காட்சி, திரைக்கதை நிகழும் காலகட்டத்தை விளக்குகிறது. ஆனால், அதற்கடுத்த கதைகளில் காலம் தெளிவாக விளக்கப்படவில்லை.
மிகச்சில இடங்களில் மட்டுமே நடித்தவர்கள் ஒப்புவிக்கும் பாவனை காணக் கிடைக்கிறது. அதனை ஈடு செய்யும் விதத்தில், படம் முழுக்க யதார்த்தம் நிறைந்திருக்கிறது.
அதுவே, இதன் இயக்குனர் ஹேமாம்பர் ஜஸ்தியை கொண்டாட வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது. தெலுங்கில் வெளியான C/O காஞ்சரபலம் படத்தின் ரீமேக் இது என்பது கூடுதல் தகவல்.
வெங்கடேஷ் மஹா எழுதிய கதைக்கு நீலன் கே.சேகர் வசனம் எழுதியிருக்கிறார். வசனங்களில் இயல்பு குறையவில்லை என்றாலும், மதுரை வட்டாரத் தமிழ் மட்டும் ஆங்காங்கே தடம் புரண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
ஒளிப்பதிவில் குணசேகரனும், படத்தொகுப்பில் ஸ்ரீகர் பிரசாத்தும் இயக்குனரின் பார்வையைத் தாங்கிப் பிடித்திருக்கின்றனர்.
ஸ்வீகர் அகஸ்தியின் பின்னணி இசை மிகச்சொற்பமான இடங்களில் மட்டுமே ஒலிக்கிறது. இது, இயக்குனருக்கு இசை மீதிருக்கும் காதலைக் காட்டுகிறது.
‘முட்டைக்குள்ள பட்டம் விட்டு நின்னானே’, ‘காற்றில் ஆடும் தீபம் ஓயாதே’ பாடல்கள் திரைக்கதையின் முக்கியமான இடங்களில் ஒலிக்கின்றன. ‘பாட்டை கேளு’ பாடல் மட்டும் கதை நிகழும் வட்டாரத்துக்கு அந்நியமாகத் தெரிகிறது.
கார்த்திக் நேத்தாவின் வரிகளோடு இசைந்து நின்று, மனதை அசை போட வைக்கிறது ஸ்வீகரின் இசை.
நிஷேஷ் – ஸ்வேதா, கார்த்திக் ரத்னம் – ஐரா, வெற்றி – மும்தாஜ் சொர்கார், தீபன் – சோனியா கிரி ஆகியோர் இக்கதைகளில் பிரதான பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கின்றனர். இதில் கார்த்திக் மற்றும் ஐராவுக்கான பகுதி குறைவாக இருப்பது போலத் தோன்றுகிறது.
தீபனின் பார்வையில் இருந்து தொடங்கும் திரைக்கதை, அவரது வாழ்க்கையுடனே முடிவடைகிறது. இதனால், முக்கால்வாசி படம் அவரது பாத்திரத்தைக் கொண்டே நகர்கிறது.
‘முதல் மரியாதை’ படத்தில் ‘அந்த நிலாவதான் கையில புடிச்சு’ பாடல் பெற்ற வரவேற்பு தீபன் யார் என்பதைச் சொல்லும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதனை ஈடுசெய்யும் விதமாக இப்படத்தில் பழனியாக வருகிறார். அந்த வகையில், அவருக்கு இது அசத்தல் ‘ரீ-என்ட்ரி’.
அவருக்கு ஜோடியாக வரும் சோனியா கிரியும் தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, வெற்றியும் மும்தாஜும் மனதில் நிற்கின்றனர். மும்தாஜின் மேக்கப் மட்டும் ‘பேஷன் ஷோ’வில் கேட்வாக் செய்வது போன்றிருக்கிறது. இருவருக்குமான காதல் படத்தின் உயிர்நாடியாக இருக்கிறது.
கார்த்திக் மற்றும் ஐராவுக்கு திரைக்கதையில் குறைவான இடம் என்றாலும், அவர்களது பங்களிப்பை மிகச்சரியாகத் தந்திருக்கின்றனர். போலவே, நிஷேஷ்-ஸ்வேதா ஜோடி ‘பின்னியிருக்காங்க’ என்று சொல்ல வைத்திருக்கின்றனர்.
நான்கு ஜோடிகளையும் தாண்டி, நிஷேஷின் தந்தையாக நடித்தவரும் ரவுடி துரையாக வருபவரும் மனதில் நிற்கின்றனர்.
‘காஸ்டிங்’ இப்படத்தில் அருமையாக அமைந்திருக்கிறது. ஆனாலும், கிளைமேக்ஸ் முடிச்சுக்கு தகுந்தாற்போல சிற்சில மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
வெவ்வேறு வயதுகளில் காதல் வந்தாலும், அதன் அடிப்படை இழை ஒன்றுதான் என்பதே இத்திரைக்கதையின் மையம். மதுரை வட்டாரத்தை நினைவூட்டும் அம்சங்களும், காலமாற்றத்தைப் பிரதிபலிக்கும் விஷயங்களும் நிறைந்திருந்தால் இன்னும் அதிக திருப்தி கிடைத்திருக்கும்.
ஆனாலும் என்ன, தீராக்காதலின் வெவ்வேறு முகங்களைக் காட்டியதற்காகவே ‘C/O காதல்’ குழுவினரைப் பாராட்டலாம்!
- உதய் பாடகலிங்கம்
17.02.2021 12 : 10 P.M