கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் அரும்பிய ஆன்லைன் வழிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்யவேண்டிய காலகட்டம். அரசுகளும் தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.
இவற்றுள் பிள்ளைகளின் கல்வி கற்பிக்கும் வழியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் போலவே தொழில் நிறுவனங்கள் பணியாளர்களின் திறன் வளர்க்கும் கற்றல் வழிமுறைகளிலும் பல மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் நிபுணர் கார்குழலி பகிர்ந்து கொள்கிறார்.
நகரங்களிலும் கிராமப் புறங்களிலும் இருக்கும் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இணைய வழியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் முயற்சிகள் பரவலாக நடந்து வந்தன.
எந்த வயதிலிருந்து பிள்ளைகளால் கற்பிக்கும் ஆசிரியரை நேரில் பார்க்காமல் அவர் சொல்லித் தருவதை உள்வாங்கிக் கொள்ள முடியும்? ஏற்கனவே வறுமையிலும் அடிப்படை வசதியில்லாமலும் வாடும் மாணவர்களுக்கு இது சாத்தியமா? வசதியும் வாய்ப்பும் இருந்தாலும் தொழில்நுட்ப விழிப்புணர்வும் இல்லாத பெற்றோர் தொழில்நுட்பம் சார்ந்த சவால்களை எப்படி எதிர்கொள்வார்கள்? என்பதெல்லாம் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விஷயங்கள்.
இதுவரையிலும் இணையவழிக் கற்றல் பெரும்பாலும் வயது வந்தோருக்குப் பலனளிக்கும் கற்றல் வழிமுறையாகத்தான் இருந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அது ஒரு இணை அல்லது துணை கற்றல் வழிமுறையாகத்தான் பரிந்துரை செய்யப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கற்பதுதான் முதன்மை வழிமுறையாக இருக்க வேண்டும்.
இணையவழிக் கற்றல், வீடியோ செயலி, கருத்தரங்கம் என்பதெல்லாம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காக உருவாகிய ஒரு கற்றல்முறை.
வீட்டுக் கணினிகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது மின்வழிக் கற்றலும் கூடவே நுழைந்தது. இணையப் புரட்சி நடைபெற்ற 90களில் வயது வந்தோருக்குத் தொழில்நுட்பத்தில் பயிற்சியளிக்க அதிகாரபூர்வ கல்வி கற்பிக்கும் அல்லது கற்றல் முறையாக வேரூன்றியது.
மேற்கத்திய நாடுகளின் பல்கலைக் கழங்களில் வயது வந்தோருக்கான கற்றல் உத்தி மற்றும் பயிற்றுமுறை வடிவமைப்பு சார்ந்த துறைகள் பல வருடங்களாக அங்கீகாரமும் ஒப்புதலும் பெற்று இயங்கி வருகின்றன. இந்தியாவில் இந்தத் துறையில் பட்டயக் கல்வியும் சான்றும் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் பெறமுடியும் என்றாலும் பல்கலைக் கழங்களில் அங்கீகரிக்கப்பட்ட துறையாக அமைக்கப்படவில்லை.
மெல்ல அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் தொழிற் சாலைகளிலும் பணிபுரிவோருக்கு ஒவ்வொரு நிலையிலும் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு நிலையிலும் பிரிவிலும் இருக்கும் பணியாளர்களுக்கென அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்சார்ந்த தெளிவான பாடத் திட்டத்தை வரையறுக்கத் தொடங்கின.
பயிற்சிகள்
நேர்முகப் பயிற்சியில் பயிற்றுநருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு நட்பிழை பின்னப்பட்டு பரஸ்பர நன்மதிப்பு தோன்றி கற்றுக் கொள்ளும் ஊக்கத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தும். ஆனால் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்றுகூட முடியாத இப்போதைய நெருக்கடி நிலையில் இந்தப் பயிற்சிகளை எப்படி நடத்துவது என்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
நிறுவனங்களின் பாடம் மற்றும் பயிற்சித் திட்டம், பயிற்றுநர், மாணவர்கள் எல்லோரும் தயார். நேர்முகப் பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அப்படியே இணைய கருத்தரங்க செயலி வழியாக நடத்திவிடலாமே என்று சொல்லலாம், செய்தும் பார்க்கலாம்.
நேரில் ஒன்றைச் சொல்வதற்கும் செய்வதற்கும் இணையத்தின் வழியாக நடைமுறைப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் உடல்மொழியை வைத்தே சொல்வதைப் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பதைப் பயிற்றுநர் கண்டுபிடித்து விடுவார்.
கவனம் கலைகிறது என்றால் உடனடியாக நகைச்சுவையாக எதையாவது சொல்லி மீண்டும் தன்னைக் கவனிக்கச் செய்வார். அயர்ச்சியாக இருப்பதுபோலத் தெரிந்தால், தேநீர் இடைவேளையை சில மணித்துளிகள் முன்னதாகவே அறிவிப்பார். இதெற்கெல்லாம் இணையவழி வகுப்பில் சாத்தியம் குறைவு.
வசதிகள்
அடுத்ததாகக் கருத்தில் கொள்ளவேண்டியது பயிற்றுமுறை வடிவமைப்பு சார்ந்த மாற்றங்கள். ஏற்கனவே சொன்னதுபோல நேர்முக வகுப்பில் வெற்றிபெற்ற செயல்முறைகள் எல்லாமே இணையவழிக் கற்றலில் அதேபோல எடுபடும் என்று சொல்ல முடியாது.
எடுத்துக்காட்டாக, நேர்முக வகுப்புகளில் மாணவர்களை மூன்று நான்கு பேர் அடங்கிய சிறிய குழுக்களாகப் பிரித்து சில செயல்முறைகளைச் செய்யச் சொல்லுவார்கள். பின்னர் அதுகுறித்த அவர்களுடைய கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளச் சொல்வார்கள். இதைத்தொடர்ந்து கேள்வி நேரமும் பயிற்றுநரின் விளக்கமும் இடம்பெறும்.
ஒருசில இணையவழிக் கருத்தரங்க செயலிகளில் இதுபோன்ற சிறு குழுக்களை உருவாக்கி செயல்படவைப்பது சாத்தியம்தான். என்றாலும் நேர்முகத்தில் முன்பின் தெரியாதவர்கள் இணைந்து செயலாற்றுவது போலப் பலன்தருமா என்பதும் கேள்வி தான்.
புதுமையான கற்பித்தல்
விளையாட்டு வழியாக முக்கியமான கோட்பாடுகளைக் கற்றுத் தருவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘புதையல் வேட்டை’ என்ற விளையாட்டு இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் ஒன்று. புதையலைத் தேடும் பூதங்கள் போல நிறுவனத்தின் தளம் முழுவதும் தேடியலைந்து குறிப்பிட்ட தகவல்களையும் பொருட்களையும் சேகரித்துக் கொண்டு வரவேண்டும்.
அலுவலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் புகுந்து சென்று முகமறியாத சக பணியாளர்களோடு பேச வேண்டிவரும். தனியாகவோ, குழுவாகவோ எப்படி விளையாடினாலும் சுவாரசியமான விளையாட்டு இது. இணையத்துக்காக எப்படி மாற்றியமைப்பது?
சில வகுப்புகளில் வீடியோக்களைப் பார்த்த பின் அதுகுறித்த தங்கள் கருத்துக்களையும் எழும் கேள்விகளையும் தனித்தனியாகவோ குழுவாகக் கலந்தாலோசித்தோ வகுப்பிலிருக்கும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
கேள்வி-பதில் நேரம் அல்லது வினாடி – வினா போன்றவற்றில் முதலில் கையைத் தூக்கும் மாணவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதுபோன்ற பயிற்றுமுறைகளின் வடிவமைப்பையே இணைய வழிக்கற்றலுக்கு ஏற்றாற்போல மாற்றி வடிவமைக்க வேண்டியது அவசியம்.
நேர வரையறை
வகுப்பறையில் காலை ஒன்பது முதல் மாலை ஐந்து மணி வரையிலும் பயிற்சி நடக்கும். இணையவழிக் கற்றலில் இத்தனை நேரம் செலவுசெய்ய யாராலும் முடியாது. எனவே பாடத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட வயது வந்தோருக்கான கற்றல் உத்திகளைப் பயன்படுத்தி மாற்றியமைக்க வேண்டும். இதனால் மாணவர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் சலிப்பின்றிப் பாடங்களைக் கற்க முடியும்.
ஏற்கனவே கைவசமிருக்கும் பாடத்தை அப்படியே இணையத்தின் வழியாக நடத்துவதென்பது ‘ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்’ என்பதைப்போல அபத்தமான செயலாகும். நிறுவனங்கள் வடிவமைப்பை மாற்ற நிதி ஒதுக்கீட்டுடன் பயிற்றுமுறை வடிவமைப்பு மற்றும் இணையவழிக் கற்றலில் தேர்ந்த நிபுணர்களின் பங்களிப்பைப் பெறவேண்டியிருக்கிறது.
-தான்யா
17.02.2021 12 : 55 P.M