‘நானும் சிங்கிள்தான்’; முரட்டு சிங்கிள்களின் ‘கெக்கேபிக்கே’!

கடந்த சில ஆண்டுகளாக, ஒருவர் எந்த தசாப்தத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து கிண்டலடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருமணமாகாமல் தனியராகத் திரிபவர்களில் பலர் 90களில் பிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

அதாவது, இப்போது 30 வயதைத் தொட்ட, தாண்டியவர்கள் அனைவரும் இந்தக் கணக்கில் அடங்குவர். 80களில் இருந்த பழமையான அனுபவங்களின் இனிமையையும் முழுதாக அனுபவிக்க இயலாமல், 2000களில் உண்டான டிஜிட்டல் சகாப்தத்தையும் உள்வாங்க முடியாமல் திணறுபவர்களாகச் சமூக வலைதளங்களில் இவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.

அப்படி வாழ்ந்து வரும் நான்கு இளைஞர்களில் ஒருவரது காதல் பற்றிப் பேசுகிறது ‘நானும் சிங்கிள்தான்’. மேலோட்டமாகக் கேட்கையில் நகைச்சுவைக்கு அதிக இடமிருப்பதாகத் தோன்றினாலும், திரைக்கதை அதனை ஈடு செய்யத் தவறியிருக்கிறது.

அதே நான்கு நண்பர்கள்!

90களில் வெளியான படங்களில் நண்பர்கள் கூட்டமொன்று நாயகனின் காதலுக்கு தூது போகும்; ஐடியாக்களை வாரி வழங்கும்; அப்படியே, நாயகனின் பெற்றோர்க்குச் செல்லப்பிள்ளைகளாகவும் வலம் வரும். இதிலும் அப்படியே.

பெற்றோர்க்கு (மனோபாலா-ரமா) ஒரே மகனான உதயகுமார் (தினேஷ்) ஒரு டாட்டூ கடையை நடத்தி வருகிறார். அவரது நெருங்கிய நண்பர்கள் மூவர் (கதிர், ஆதித்யா, செல்வா) எந்த வேலைக்கும் செல்லாமல் உடன் இருக்கின்றனர்.

சிங்கிள் ஆக இருப்பதனால் அவமானப்படும் நால்வரும் விதவிதமாகத் தங்களது காதல் இணையைத் தேடுகின்றனர்.

ஒருநாள் ஸ்வேதாவை (தீப்தி) உதய் பார்க்க, உடனே காதலில் விழுகிறார். அவரோடு நட்புடன் பழகிவரும் நிலையில், திடீரென்று காதலை வெளிப்படுத்துவது இருவருக்கும் இடையே பிளவை உண்டாக்குகிறது.

லண்டன் செல்லும் ஸ்வேதாவைப் பார்க்க, நண்பர்களுடன் கிளம்புகிறார் உதய். அவரைச் சந்தித்தபிறகு என்ன நடக்கிறது? உதய்யின் காதலை ஸ்வேதா ஏற்றாரா என்பது மீதிக்கதை.

தலைமுறை இடைவெளி!

90களில் பிறந்தவர்க்கும் அதற்கடுத்த தலைமுறையினருக்கும் காதலைப் பொறுத்தவரை மிகப்பெரிய இடைவெளி இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஆண் பெண் உறவில் இது மிக அதிகம்.

அதனால், 90களில் பிறந்த ஒரு ஆணுக்கும் பத்தாண்டுகள் இளையவராக இருக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் ஓரு கலாட்டாவாகச் சித்தரிக்கப்படுகிறது. ‘நானும் சிங்கிள்தான்’ படத்தில் அதனை முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கோபி.

ஆனால், அவரது முயற்சி பல இடங்களில் பலனளிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். காரணம், வயது வந்தோருக்கான நகைச்சுவையையும் முழுதாகத் தர முடியாமல், கவிதைத்தனமான காதலையும் சித்தரிக்க இயலாமல் திணறியிருக்கிறார்.

நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒருவரையொருவர் கலாய்ப்பதில் பழமை இல்லை என்றாலும், காட்சிகளின் பின்னணி ‘புது வசந்தம்’ டைப்பில் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற முயற்சித்தபோதும் காதலியை ஒருவன் விரும்புகிறான் என்பது செண்டிமெண்டுக்கான இடம். ஆனால், அதையும் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியிருப்பது பெரிய அளவில் சிரிப்பை வரவழைக்கவில்லை.

‘அட்டகத்தி’ படம் முதல் இப்போதுவரை இயல்பான 30 வயது பையன்களை பிரதிபலித்து வருபவர் தினேஷ். காதலாகிக் கசிந்துருகுவதில் அவர் கெட்டியாக இருந்தாலும், சில காட்சிகளில் வயிற்றை எக்கிக்கொண்டு திரிகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

நாயகி தீப்தி படம் முழுக்கத் தான் வரும் காட்சிகளில் அழகாகத் தெரிய வேண்டுமென்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். மேக்கப் டிபார்ட்மெண்ட் முதல் ஒளிப்பதிவு வரை பல கலைஞர்கள் இதற்கு உதவியிருக்கின்றனர்.

மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரமா என்று ஆளாளுக்கு லேசுபாசாக கிச்சுகிச்சு மூட்டுகின்றனர். தண்டச்சோறுக்கும் foodieக்குமான ஒற்றுமையை விளக்கும் இடத்தில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றனர் கதிர், ஆதித்யா மற்றும் செல்வா.

சிரிக்கவைக்கும் ஒன்லைனர்கள் இருந்தும், சில இடங்களில் ‘டைமிங்’ மிஸ் ஆவதை தவிர்த்திருக்கலாம். நாயகியின் தோழியாக வருபவர்கள் வெறுமனே வந்துபோகின்றனர். அவ்வளவுதான்.

ஆனந்த்ராஜின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளிலும் பாடல்களிலும் ‘ஆஹா’ என்றிருக்கிறது. அதுவே, ஒரு அறையில் நிகழும் காட்சியென்றால் அமிழ்ந்துவிடுகிறது. சட்டியில் இருப்பதை அழகுற பரிமாறுகிறது ஆண்டனியின் படத்தொகுப்பு.

ஹிதேஷ் மஞ்சுநாத்தின் இசையில் ‘மாமழை வானம் நேரலையாகும்’ பாடலும், ‘இதுவரை’ பாடலும் நெஞ்சோடு ஒட்டிக் கொள்கிறது.

90’ஸ் கிட்ஸ் அலப்பறைகளை கோமாளி படத்தில் கலாட்டாவாக காட்டியபிறகு, கிட்டத்தட்ட அதே ரகத்தில் சமூக வலைதளங்களில் அடிபட்ட மீம்ஸ்கள் பிரதியெடுக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம். அதுவே, ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக மாறுவதைத் தடுத்திருக்கிறது.

சிங்கிளாக இருக்கும் 90களின் தலைமுறையையும், அவர்களிடம் இருந்து எதையாவது கற்றுக்கொள்ளலாம் என்றிருக்கிற 2000களுக்குப் பிறகான தலைமுறையையும் திரைக்கதை ஏமாற்றியிருக்கிறது. அதை மட்டும் சரியாகக் கையாண்டிருந்தால், சிங்கிளாக இருப்பவர்கள் ‘டபுள்’ சந்தோஷத்தைப் பெற்றிருப்பார்கள்!

– உதய் பாடகலிங்கம்

17.02.2021  12 : 30 P.M

Comments (0)
Add Comment