சமீபத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் விதமாக சமையல் காஸ் சிலிண்டரின் விலையும் 50 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 735 ரூபாயாக இருந்த சிலிண்டர் 785 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தற்போது சிலிண்டர் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குப் பிறகு கடுமையான பொருளாதார நெருக்கடியை நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் சந்தித்துத் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் கூடுதல் சுமையாக இந்த விலையேற்றம் நடந்திருக்கிறது.
இதையடுத்து ஹோட்டல்கள், தேநீர்க் கடைகள், வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் காய்கறி உள்ளிட்ட எல்லாப் பொருட்களின் விலை தானாகவே ஏற்றப்பட்டுவிடும். மானியங்களையும் இனி குறைக்க முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே வரிச்சுமை, இந்த நிலையில் தற்போது விலையேற்றம்!
வாங்கும் சக்தியைப் படிப்படியாக இழந்து கொண்டு வருகிற சராசரி மக்கள் எப்படித் தான் சமாளிப்பார்கள்?
இவர்கள் தான் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசியல் கட்சிகள் சந்திக்க இருக்கிற வாக்காளர்கள் என்பது கவனத்தில் இருக்கட்டும்.
– யூகி
16.02.2021 04: 02 P.M