பெண்ணாகப்பட்டவள் சமையலறையை கவனிக்க மட்டுமே பிறப்பெடுத்தவளா? ஆண்கள் உல்லாசமாக வாழ்க்கையைக் கழிக்க, அவர்களுக்கு பணிவிடை செய்தே தேய்ந்துபோகக் கடமைப்பட்டவளா?
இல்லை. அதையும் கடந்து, தங்களுக்கான வாழ்க்கைப் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். மனச்சிறைகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சுதந்திர மூச்சை விடவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் மலையாள திரைப்படம்தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’
ஒரு சராசரி மலையாளக் குடும்பத்தின் மருமகளாக, படித்த, புரட்சிகர எண்ணம் கொண்ட ஒரு பெண் நுழைகிறார். சமைப்பதும், வீட்டைப் பராமரித்துக் கொள்வதும் மட்டுமே பெண்களின் கடமை. அவள் வேலைக்குகூட போகக் கூடாது என்ற சட்டதிட்டங்கள், அவளை மூச்சுத் திணற வைக்கின்றன.
அதிலும் சாப்பாட்டை விறகு அடுப்பில்தான் சமைக்க வேண்டும், துணிகளைத் துவைக்க வாஷிங் மெஷினைப் பயன்படுத்தக்கூடாது, தீட்டான நாட்களில் ஒரு இருட்டு அறையில் மற்றவர்கள் கண் படாமல் பாயில்தான் படுக்க வேண்டும் என்பது போன்ற சட்ட திட்டங்கள் அவளது கழுத்தை நெறிக்கின்றன. எல்லாவற்றையும் அவள் பொறுத்துக்கொள்கிறாள்.
ஆனால் கடைசியில் தனக்கு விருப்பமான ஒரு கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்யக்கூட அந்த வீட்டில் உரிமை இல்லை எனும்போது பொங்கி எழுகிறாள். புகுந்த வீட்டை உதறித் தள்ளி தனக்குப் பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் முக்கால் பங்கு நேரத்தை ஒரு பழைய கேரள சமையலறைக்குள்ளேயே எடுத்து முடித்திருக்கிறார்கள். காலையில் சமையலறைக்குள் நுழையும் நாயகி, இரவுவரை அதற்குள்ளேயே பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறார். காலையில் அடுக்களையைத் திறந்து அன்றைய சமையலுக்கு தயாராகிறார்.
வீட்டில் உள்ள அவரது கணவர் யோகா செய்கிறார். மாமனார் பேப்பர் படித்துக்கொண்டு இருக்கிறார். பல் தேய்ப்பதற்குக்கூட வீட்டில் உள்ள பெண்கள்தான் பிரஷ்ஷை எடுத்துக் கொடுக்க வேண்டும், வெளியில் செல்லும்போது காலணியை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பெட்டித்தனமான குடும்பத்தில், நன்கு படித்த ஒரு மருமகள் படும் அவஸ்தைகளை படம் நெடுக விவரித்திருக்கிறார் இயக்குநர் ஜியோ பேபி.
காலையில் எழுந்ததும் காய்கறி நறுக்குவது, சமைப்பது, வீட்டைத் துடைப்பது, வெளிப்புறத்தை சுத்தப்படுத்துவது, வீட்டில் உள்ளவர்களுக்கு அரக்கப் பரக்க பரிமாறுவது, சாப்பாட்டின்போது எச்சிலைக்கூட மேஜையிலேயே துப்பிவிட்டுச் செல்லும் கணவர் மற்றும் மாமனாரின் செயல்களை சகித்துக் கொள்வது, இரவில் தனக்குப் பிடிக்காதபோதும் கணவரின் வற்புறுத்தலுக்காக உடலுறவில் ஈடுபடுவது என்று ஒரு சராசரி பெண்ணின் அனைத்து அவஸ்தைகளையும் கண்முன் நிறுத்துகிறார் நாயகி நிமிஷா சஜாயன்.
அடிக்கடி அடைத்துக்கொள்ளும் கிச்சன் சிங்க்கில் கைவிட்டு துழாவும்போது அருவருப்பு படுவது, அதைச் சரிசெய்ய பிளம்பரை அழைக்கச் சொல்லி ஒவ்வொரு நாளும் கணவரிடம் கெஞ்சுவது, அவன் மறந்துவிட்டேன் என்று சொல்லும்போது ஏமாற்றதுடன் சிரிப்பது வீட்டில் மேஜையிலேயே சாப்பாட்டின் மிச்சங்களைத் துப்பும் கணவர், ஓட்டலில் ‘டேபிள் மேனர்ஸ்’ என்று கூறி அவற்றை ஒரு தட்டில் போடும்போது தட்டிக் கேட்பது, என ஒவ்வொரு உணர்வையும் மென்மையாக வெளிப்படுத்துகிறார்.
அதிலும் தனது தங்கையிடம் தண்ணீர் எடுத்துவரச் சொல்லும் தம்பியிடம் “ஏண்டா ஒரு கிளாஸ் தண்ணிகூட நீங்களா எடுத்து குடிக்க மாட்டீங்களா… அதுக்குகூட பெண்கள்தான் வரணுமா?” என்று வெகுண்டு எழும்போது உணர்ச்சிப் பிழம்பாய் காட்சியளிக்கிறார்.
அவரது கணவராக வரும் சூரஜ் வெஞ்சரமூடும் பல இடங்களில் அசத்துகிறார். ஆணாதிக்கம் கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அப்பாவின் சொல்படி நடக்குமாறு மனைவிக்கு அமைதியாக கட்டளையிடுவது, ‘டேபிள் மேனர்ஸ்’ பற்றி மனைவி சொன்னதும் பாதி சாப்பாட்டில் எழுந்துசென்று கோபத்தைக் காட்டுவது என்று ஒரு சராசரி கணவராக கண்முன் நிற்கிறார்.
பெண் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட இப்படத்தில், கடைசியில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி அளிப்பது பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் அவசியம் தேவைதானா என்ற சர்ச்சையும் உள்ளது.
அதனால்தானோ என்னமோ நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற பெரிய ஓ.டி.டி. தளங்கள் இப்படைத்தை வாங்கவில்லை. neestream தளம் இப்படத்தை தனது ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பி உள்ளது. ரூ.149 செலுத்தி இப்படத்தை அந்த ஓ.டி.டி. தளத்தில் பார்க்கலாம்.
16.02.2021 11 : 15 A.M