அதிமுக வேட்பாளர்கள் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம்!

தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் கடைசியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முனைப்புடன் செய்து வருகிறது. ஒரு சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. – தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே முதல்கட்ட சுற்றுப் பயணத்தை முடித்து விட்டார். அடுத்த கட்டமாக அவர் கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் நடைபெறும்போது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அ.தி.மு.க. முந்துவது வழக்கம். அதே போல் இந்தத் தேர்தலிலும் வேட்பாளர்ளைத் தேர்வு செய்யும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்க உள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வரும் 24-ம் தேதி (புதன்கிழமை) முதல் மார்ச் மாதம் 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

கேரள சட்டசபைத் தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment