எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்- 24
செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை தான் பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளவர் இந்தத் தோட்டத்துத் தூயவர் என்பதை இவரே பல முறை எழுதியும், சொல்லியும் இருக்கிறார்.
அதை நான் திரும்பச் சொல்லத் தேவையில்லை.
செல்வி பத்மா சுப்பிரமணியத்திற்கு நம் அன்புத் தலைவர் ஒரு சிறிய தந்தையார் போல. அவ்வளவு மதிப்பும், மரியாதையும் அந்தக் குடும்பத்தில் இவருக்கு உண்டு.
ஒருமுறை பத்மா ஒரு நிகழ்ச்சியில் இவரை “அண்ணன்” என்று குறிப்பிட்டுப் பேசி முடித்துவிட்டார். விழா முடிந்து மேடைக்குப் பின்னால் போனபோது, அங்கிருந்த பத்மாவின் காதைத் திருகி, “நான் உனக்கு அண்ணனா? சித்தப்பா. மரியாதை எல்லாம் எங்கே போச்சு?” என்று சிரித்தபடி பத்மாவின் தலையில் செல்லமாக ஒரு குட்டும் வைத்துவிட்டு வந்தார்.
டாக்டர்.பத்மா சுப்பிரமணியத்திற்கு இந்த நிகழ்ச்சி இன்றைக்கும் மறந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
பத்மா சுப்பிரமணியத்தை மனதில் வைத்துக்கொண்டு அமரர் கல்கி அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’ படைப்பை ‘சினிமா ஸ்கோப்’ படமாக எடுக்க உரிமை பெற்றிருந்தார் எனது அன்பு நாயகர்.
கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு பத்மா தான் பொருத்தமானவர் என்று பல வாரங்கள் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
பத்மாவோ ‘நான் சினிமாவில் நடிப்பதில்லை’ என்ற கொள்கையை மிகுந்த உறுதியோடும், ரொம்பவும் மென்மையாகவும் இவரிடத்தில் சொன்னார். “அப்படியானால் ‘சிவகாமியின் சபதம்’ படம் எடுக்கப் போவதில்லை” என்று கூறியதோடு அப்படியே நடந்தும் கொண்டார்.
அதற்காக பத்மாவிடம் அவர் ஒருபோதும் கோபம் கொண்டதில்லை. மாறாக, அவரது கொள்கைப் பிடிப்பு கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார்.
இது குறித்தும் தன் சித்தப்பாவிடம் பத்மாவுக்குப் பயம் வந்து என்னிடமே பத்மா, “நான் செய்தது சரிதானே? அவருக்கு ஒன்றும் கோபம் இல்லையே?” என்று மெல்ல கேட்க, அதற்கு நான், இவர் பத்மா மேல் கொண்டிருந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் சொன்ன பிறகு பத்மா உண்மையிலேயே நெகிழ்ந்து போனார்.
இவர் முதல்வரான பிறகு ஒருநாள் பத்மாவின் சிலப்பதிகார நடன நாடகத்திற்கு சபாக் காரர்களுக்குத் தெரியாமல் தோட்டத்திலிருந்து ஆளனுப்பி நிறைய டிக்கெட்டுகள் வாங்கி வரச்சொன்னார்.
நிகழ்ச்சி பார்த்தசாரதி சபையில் என்று நினைக்கிறேன்.
ஒரு சில சக அமைச்சர்கள், எங்கள் நெருங்கிய உறவினர்கள் சிலர் சூழ திடீரென்று மற்ற ரசிகர்களைப் போல முன்வரிசையில் போய் அமர்ந்துவிட்டார். கடைசிவரை அன்றைய நிகழ்ச்சியில் இருந்தார். உடனே மேடை ஏறிப் போய் பத்மாவை வாழ்த்தி விட்டு வந்தார்.
பத்மாவுக்கு இது ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.
இதைப் பார்த்த எனக்குக் கூட இது முதலில் கொஞ்சம் ஆச்சரியமாகப்பட்டது. ஆனால் இவரைப் பொறுத்தவரை நல்ல கலைஞர்களின் நிகழ்ச்சியென்றால் முதல்வர் என்ற பரபரப்பு இல்லாமல் நிகழ்ச்சியைக் காணச் செல்வதற்கு எப்போதும் தயங்க மாட்டார்.
பத்மாவின் குடும்பம் எங்களோடு மிக நெருங்கிய குடும்பம் என்பதால் மட்டுமல்ல, அவரது கலையின் மீது கொண்ட ஈடுபாட்டால் நிகழ்ந்தது இது.
இந்த இடத்தில் என்னைப் பற்றியும் ஒரு வரி சொல்லி ஆகவேண்டும். நானும் பத்மாவின் குடும்பத்தினரோடு நெருக்கமானவள் தான்.
அவரது பெற்றோர் என்னை ஒரு மகளாகவே நடத்தியவர்கள். அவர்களது நடனப் பள்ளியின் நடன குழுவில் வளர்ந்தவள் என்பதைத் தவறாமல் நான் இங்கு சொல்லியாக வேண்டும்.
(தொடரும்…)
15.02.2021 02 : 40 P.M