தி.மு.க.வுக்கு எதிராக முயற்சித்து முறிந்த அஸ்திரங்கள்!

தேர்தல் கூட்டணியில் என்னவிதமான மாய விசித்திரங்களும் நடக்கலாம். முரண்பட்ட கருத்து நிலையில் உள்ளவர்கள் தற்காலிகமாக ஒன்று சேரலாம், தி.மு.க. கூட்டணியில் ராஜாஜி 1967 தேர்தலில் சேர்ந்ததைப் போல.

சில புதிய மூன்றாவது அணிகள் கடந்து போகும் மேகத்தைப் போலத் தேர்தலைக் கடந்து முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போகலாம்.

சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மக்கள் நலக்கூட்டணி என்கிற ஒன்று உருவாகாமல் இருந்திருந்தால், தி.மு.க வெற்றி பெற்றிருக்கும் வாய்ப்பே அதிகம். அம்மாதிரியான தற்காலிகமான கூட்டணிகளின் நோக்கம் தான் வருவதல்ல, மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது.

அதே மாதிரி இப்போது நடக்க இருக்கும் தேர்தலுக்கு முன்னாலும் இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலாவது ரஜினியின் வருகை.

பீடிகையுடன் ஊடகங்களால் பெரிதும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட அளவுக்கு ரஜினி அரசியலில் நுழையவில்லை. அவரை அரசியலில் இறக்கிவிட எத்தனித்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அவர் உடல்நிலையை மையமாக வைத்து நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

ஒருவிதத்தில் ரஜினி எடுத்தது அவருடைய உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை மிகச் சரியான முடிவும் கூட. ஏற்கனவே அரசியலில் இறங்கி தீவிரப் பிரச்சாரத்தை எல்லாம் மேற்கொண்ட தே.மு.தி.க தலைவரான விஜய்காந்த் அதற்கு ஒரு முன்னுதாரணமாக கண்ணுக்கு முன்னிருக்கிறார்.

அவர் 7 விழுக்காடு வாக்கு வங்கியிலிருந்து 15 விழுக்காடு வரை வாங்கிப் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், தி.மு.க. வர வாய்ப்பிருக்காது என்று தொலைக்காட்சிகளில் குரல் ஓங்கிக் கத்திப் புள்ளிவிபரங்களை அள்ளி வீசி வந்த சிலர் அதற்குப் பிறகு அமைதியாகி விட்டார்கள்.

இரண்டாவது – மு.க.அழகிரியின் வருகை.

தி.மு.க மற்றும் கலைஞரின் குடும்பத்திற்குள்ளேயே ஒரு பிளவை உண்டாக்கும் விதத்தில் மு.க.அழகிரியின் தென் தமிழகச் செல்வாக்கை வைத்து அவரை முன்னிறுத்தி ‘கலைஞர் தி.மு.க’ என்ற பெயரில் தனி இயக்கம் காண இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

மு.க.அழகிரியும் அதற்கு ஏற்றாற்போல பேட்டிகள் கொடுத்தார். தனது ஆதரவாளர்களை ஒன்றிணைத்துக் கூட்டத்தை நடத்தினார். அதுவரை அவரைக் கடுமையாக விமர்சித்து வந்த ஊடகங்கள் கூட, அவரைத் தூக்கிக் கொண்டாடின. தி.மு.க.வுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று கணித்தன. புள்ளிவிபரப் புலிகள் அழகிரி மூன்று சதவிகித அளவுக்கு தி.மு.க வாக்குகள் சிதறும் என்று ஆருடம் சொன்னார்கள்.

ஆனால் அதுவும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.

அழகிரியை அவருடன் உடன் பிறந்தவர் பேசியபிறகு அவர் சமாதானமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு அழகிரிக்கும், அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கும் பொறுப்பான பதவிகள் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதன் மூலமாக தி.மு.க.வுக்கு முன்னால் இருந்த சில தடைகள் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

இரண்டு அஸ்திரங்கள் எய்வதற்கு முன்பே வலுவிழந்திருக்கின்றன.

-யூகி

15.02.2021 01 : 54 P.M

Comments (0)
Add Comment