மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல்!

தமிழக அரசியல் களம் 2021 தேர்தலுக்கு இதுவரை எந்தப் பொதுத் தேர்தலும் சந்திக்காத புதிய சூழலில் உதயமாகிறது. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, கூட்டணி முடிவாகவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரம் கொரோனா காலத்திலும் களைகட்ட ஆரம்பித்து விட்டது.

கதைகள், எதிர்க் கதைகளை உருவாக்கி மக்களை தன் வயப்படுத்தும் இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல். இரண்டு பெரிய ஆண்ட கட்சிகளும் பணபலத்துடன்தான் நிற்கின்றன, தேர்தலைச் சந்திக்க. ஆனால் கட்சிகள் உள் வடுக்களுடன் இயங்குகின்றன. தேர்தல் பணிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கும் நிலையில்தான் நடக்கின்றன.

கூட்டணிக் கட்சிகள் இரண்டு பக்கமும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் தங்களுக்கான இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றன.

சிறிய கட்சிகளின் மனோபாவம் பெரிய முதலாளிக் கட்சிகளுக்கு கோபத்தை எழுப்புகின்றன. தமிழ்நாட்டு மக்கள் கூட்டணியை விரும்ப மாட்டார்கள் என்ற கருத்தாடலை உருவாக்கி சிறிய கட்சிகளை பயம்காட்ட முனைகின்றார்கள்.

அதேபோல் கூட்டணியில் இருந்தாலும் இந்தச் சிறிய கட்சிகள் இந்த இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பிடித்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருக்கின்றன.

ஏனென்றால் அப்படியொரு நிலைமை அதாவது அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், புதிய கலைஞரும், புதிய புரட்சித் தலைவியும் உருவாகிவிடுவார்கள் என்ற மன ஓட்டத்தில் ஒரு மாற்று வந்தாக வேண்டும், அதற்குத்தான் நம் முனைய வேண்டும் என்று சிறிய கட்சிகள் இரண்டு கூட்டணிகளிடமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலை மேலும் கூராக்கி இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் வலுவிழக்கச் செய்து புதுத்திசையை நோக்கி தமிழக அரசியலை திருப்ப தமிழக பாரதிய ஜனதாக் கட்சிக்கு தேவையான அசுர பலத்தை டெல்லியிருந்து தந்து கொண்டுள்ளது தலைமையக பாரதிய ஜனதாக் கட்சி.

தமிழக அரசியல் சூழல் என்பது பாரதிய ஜனதாக் கட்சிக்கு பெரிய சவால்களைத் தரவில்லை. மிக எளிதாக சமாளிக்கும் சூழலுக்கு இரண்டு திராவிடக் கட்சிகளும் இயங்குகின்றன. அதன் காரணமாகத்தான் மேற்கு வங்கத்தில் காட்டும் தீவிரத்தை தமிழகத்தில் காட்டவில்லை பாரதிய ஜனதாக் கட்சி.

பாரதிய ஜனதாக் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சமாளிப்பது மம்தாவைச் சமாளிப்பதுபோல சவால்கள் நிறைந்தது கிடையாது. அதன் கையில் எல்லா ஆயுதங்களும் இருக்கின்றன. அதை எடுத்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வாளைத் தரையில் போட்டு விட்டு சொல்வதை கேட்டு செயல்படும் என்ற நம்பிக்கை பாரதிய ஜனதாக் கட்சியின் டெல்லித் தலைவர்களுக்கு உறுதியாகிவிட்டது.

காரணம், தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன ஓட்டத்தை அறிந்து மிகத் தெளிவாக அவர்கள் வைத்திருக்கின்றனர். இந்த மன ஓட்டம் தான் தி.மு.க.விலும் வித்தியாசமான பார்வைகளை இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் உருவாக்கி இருக்கிறது.

பொதுக்குழு, செயற்குழுவில் நடக்கும் விவாதங்களை அங்கு இருக்கும் முரண்பாடுகளை முணுமுணுப்பின் மூலம் வெளிக் கொணர்கிறது. “தேர்தல் வந்துவிடப் போகிறது களத்தை நோக்கி ஓடுங்கள்” என்ற ஓலத்துடன் கொரோனா பயம் ஏதுமின்றி அலைந்து அவசரத்தில் ‘கிராமசபைக் கூட்டம்’ என்று பெயரிட்டு, அதை நடத்த தடைகள் என வந்த பிறகு தடுமாற்றத்துடன் அடுத்த சொல்லாடலை உருவாக்கி களப்பணியில் ஈடுபடும் தி.மு.க. தலைவர்களும் தொண்டர்களும், மூன்று மாதத்திற்கு உடல் சக்திக்கும், பணச் சக்திக்கும் எங்கே போவார்கள் என்றுகூட சிந்திக்க முடியாமல் தீயாய் பணியாற்றுகின்றனர்.

இப்படியே தொடர்ந்தால் தேர்தலுக்குள் களைத்துப் போவார்கள் பணம் இன்றி நீத்துப்போவார்கள். தி.மு.க வின் தேர்தல் பிரச்சாரம் என்பது சினிமா சூட்டிங் எடுப்பதுபோல் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்படுகிறது. அதற்கான காட்சிகள் உருவாக்கப்பட்டு, பெரும்பணம் செலவு செய்து தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

தி.மு.க.வை பலம் இழக்கச் செய்ய வேண்டும் என்று முனைகிற சக்திகளின் கண்ணாமூச்சி விளையாட்டில் இன்று தி.மு.க. சிக்கிக் கொண்டுள்ளது. தி.மு.க.விற்கு மாபெரும் சவாலாக விளங்குவது எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி.

பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது அ.இ.அ.தி.மு.க. இயல்பாகப் பத்தாண்டு ஆட்சி மக்களிடம் ஒரு எதிர்ப்பலையை ஆட்சிக்கு எதிராக உருவாக்கியிருக்க வேண்டும். அதுதான் இயல்பு. ஜெ.ஜெயலலிதா இருந்தால் கூட அப்படிப்பட்ட சூழல் உருவாகியிருக்கும். ஆனால் ஜெயலலிதா இல்லாமல், நான்கு ஆண்டு கால ஆட்சியில் மக்கள் எதிர்ப்பலை இல்லாமல் இருப்பது தி.மு.க.வுக்கு இருக்கும் மற்றுமொரு சவால்.

அடுத்து அ.இ.அ.தி.மு.கழகத்திற்கு எதிர்ப்பலை வராமல் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் மக்களுடன் இணக்கமாக மக்களுடன் பயணிக்கக் கற்றுக்கொண்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது.

எந்த இடத்திலும் தமிழக அமைச்சர்கள் மக்களை மிரட்டவில்லை. அதேபோல் அ.இ.அ.தி.மு.கழக கட்சிக்காரர்கள் மக்களை மிரட்டும் செயல்களில் ஈடுபடவில்லை. இந்த இடத்தில் இன்று தி.மு.கவுக்கு வலுச் சேர்க்க களத்தில் பணியாற்றும் கழக உடன்பிறப்புக்கள் பேசுகின்ற பேச்சுக்களை சமூக ஊடகங்களில் மூலமாக மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

“இன்னும் ஆட்சிக்கு வராமலேயே இப்படிப் பேசுகிறவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்களோ?” என்று விமர்சனம் செய்யும் குறும்படங்கள் மக்களிடம் குறிப்பாக நடுத்தர மக்களிடம் சென்றால், அது தி.மு.கவிற்கு எதிரான ஒரு மனநிலையைத்தான் ஏற்படுத்தும். அது ஒரு மிகப்பெரிய சவால் தி.மு.க.விற்கு.

அடுத்து இந்த ஆட்சியில் ஆளும் கட்சிக்காரர்கள் மட்டுமே பயனடைந்தார்கள் என்று கருதமுடியாது. அத்துடன் அலுவலர்களும் அந்தப் பயன்களைச் சுவைத்துள்ளார்கள். எனவே அவர்களும் தி.மு.க.வுக்கு சவாலாகவே இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

அடுத்த நிலையில் இரண்டு மாபெரும் ஆளுமைகள் என்று சொன்னாலும், இருபெரும் முதலாளிகள் போல்தான் ஆட்சிப் பீடத்தில் இருந்து கோலோச்சினார்கள் மு.கருணாநிதியும், ஜெ.ஜெயலலிதாவும்.

அவர்களின் ஆட்சியில் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு இடமற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் சுதந்திரக் காற்றை சுவாசித்து, அதிகாரிகளின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் சூழல் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் இதுபோன்ற ஒரு தலைமை தமிழகத்திற்கு வந்தால் நாமும் சுதந்திரமாக செயல்பட முடியுமே என்று எண்ணும் உயரதிகாரிகளின் மனோபாவம் யாருக்குச் சாதகமாக செயல்படும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

அடுத்து தமிழ் தேசியம் பேசும் கட்சிகள், அதுவும் குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வைக்கும் விவாதங்கள் தி.மு.க.வுக்கு முன்பாகவே வைக்கப்படுகின்றன. அவற்றைக் கருத்து ரீதியாக எதிர்கொள்ள அந்தக் கட்சிக்கு கருத்தாளர்கள் பலம் இல்லை என்பதைத்தான் கள நிலவரம் காட்டுகிறது.

இவைகளையும் தாண்டி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது போராட்டக் களத்தில் இருந்த இளைஞர்கள் வைத்த கருத்தாடல்களையும் புறந்தள்ள முடியாது. அவர்கள் இன்று தனி இயக்கமாக உருவாகாமல் போய் இருக்கலாம், இருந்தபோதும் அவர்களும் இந்தச் சமூகத்தில் பல குழுக்களாக களத்தில் நின்று பல்வேறு சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைத் தெளிவாகப் பல கட்சிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. சீமான் பக்கம் இளைஞர்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதும் ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளுக்குச் சூழலை சிக்கலாக்கி வைத்திருக்கிறது.

மேற்கூறியவைகள் அனைத்தும் தி.மு.க.விற்கு சாதகமாக இல்லை என்றாலும் அ.இ.அ.தி.மு.க. ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல் தற்போது ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது.

அடுத்து துணை முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியே அந்தக் கட்சி பிளவுடன்தான் செயல்படுகிறது என்ற செய்தியை தொண்டர்களுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் சசிகலா வெளியில் வருவதும், டி.டி.வி.தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைத்ததும் பெரும் சவால்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு உருவாக்கியிருக்கிறது.

பொதுவாக தலைவர்கள் சாதாரண சூழல்களில் உருவாவது கிடையாது. சவால்களைச் சமாளித்து வெற்றி பெற்று மீண்டெழும்போது தான் யார் தலைவர் என்பது தெரியவரும். அப்படித்தான் கு.காமராஜ், மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா என்று அனைவரும் தலைவர்களாக மக்கள் மத்தியில் மதிக்கப்பட்டனர். இன்று அந்தச் சூழல் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் அனைவரின் திறனுக்கும் தேர்வு வைத்திருக்கிறது.

அடுத்து ரஜினிகாந்த் வருகை ஏன் எதிர்க்கப்பட்டது என்பதில்தான் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. ரஜினிகாந்த் முதல்வர் ஆவாரா, ஆகமாட்டாரா என்பதைவிட, யாரை எல்லாம் முதல்வராக வரவிடமாட்டார் என்பதை வைத்துத்தான் அந்த அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றன.

கமலஹாசனும், ரஜினிகாந்தும் களத்துக்கு வருவேன் என்றதுமே ஒரு செய்தி அனைவரிடமும் பரப்பப்பட்டு விட்டது. அதாவது தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என்ற கருத்து. இந்த செயல்பாடுகள் அனைத்தும் முறைமையுடன் தமிழக அரசியலில் நிகழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.

இந்த நிலையில் தமிழகத் தேர்தல் முடிவுகள் மூலம் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைத்துவிடக் கூடாது என்ற கருதுகோளில் நகரும் அரசியல், ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு வித்திடுமேயானால் அதை நடத்தி வைப்பது பாரதிய ஜனதாக் கட்சியாகத் தான் இருக்கும். அது சுலபமாக நடந்தேறும் சூழலைத்தான் இன்று பல கட்சிகள் செய்து வருகின்றன.

இன்று மக்களின் மன ஓட்டம் என்பது மாறுபட்டிருக்கிறது. அத்துடன் கொரோனா காலச் செயல்பாடுகள் மக்களின் சிந்தனைப்போக்கில் பல மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளன. இந்தச் சூழலை பயன்படுத்தி இன்று மறைமுகமாக பாரதிய ஜனதாக் கட்சி, அதிகாரிகள் மூலம் தாங்கள் செய்ய நினைப்பதை நடத்திக் கொண்டுள்ளது தமிழகத்தில்.

தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் பாரதிய ஜனதாக் கட்சி நேரடியாக தங்கள் அரசியல் செல்வாக்கை ஆட்சியின் மீது செலுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இந்தச் சூழலை மாற்றும் வாய்ப்பு தி.மு.க.விற்கு மட்டுமே இருக்கிறது.

ஆனால் இந்தச் சூழலைப் பயன்படுத்த தி.மு.கவிற்குத் தேவையான சிந்தனை பலம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அதற்கான கதையாடலை உருவாக்கத் தேவையான தலைமைத்துவம் அங்கிருப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுப்பார்வை மத்திய அரசை சரி செய்வதில்தான் இருக்கிறதே தவிர, தமிழக அரசியலில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தத் தேவையான யுக்திகளில் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாகத்தான் கட்சிக்காரர்கள் செய்ய முடியாத பணியைச் செய்திட ஐபேக் போன்ற நிறுவனம் வந்துள்ளது அரசியல் வணிகமும் விளம்பரமும் செய்திட.

இந்த அரசியல் கட்சிகளிலேயே தீவிரமாய்ப் பணியாற்ற செயல்படும் தொண்டர் பலம் பாரதிய ஜனதாக் கட்சிக்குத்தான் இருக்கிறது. புதிய தலைவர் எல்.முருகன் வந்தபிறகு ஊடக அரசியலிலிருந்து கள அரசியலுக்கு அந்தக் கட்சியின் தலைவர்கள் இறங்கியிருக்கின்றார்கள்.

பாரதிய ஜனதாக் கட்சியின் தொண்டர்கள் கொள்கைப் பிடிப்பில் வளர்ந்தவர்கள். அவர்கள் எதிர்பார்ப்பின்றிக் களத்தில் நிற்கின்றனர். இதே மனோபாவம் இடதுசாரிகளைத் தவிர்த்து வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. நாம் தமிழர் இதற்கு விதிவிலக்கு.

மற்ற கட்சிகளுக்கு – அதுவும் இரண்டு மாபெரும் கட்சிகளுக்கு பணம் இருந்தால் பணி, இல்லையேல் பணத்திற்காகப் பேரம் பேசும் தரகு அரசியல் செய்யும் மனோபாவத்தைத் தான் பெற்றிருக்கிறார்கள் கட்சிக்காரர்கள். ஊழலை ஒரு கருத்தியலாக வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. அந்த அளவிற்கு பொதுமக்கள் ஊழலில் பங்குதாரராக இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கதையாடல்கள் இல்லை, மக்களை வசீகரிக்கும் புதிய தலைமை இல்லை, மாற்று அணுகுமுறை இல்லை, மாற்றுத் திட்டம் கொண்ட கட்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை மக்களிடம் தரவில்லை.

இந்தச் சூழலில், தங்களுக்குப் பெரும் சக்தியும் வாய்ப்பும் இல்லையென்றாலும், யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போவது பாரதிய ஜனதாக் கட்சி என்ற புரிதலோடுதான் அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து கொண்டுள்ளன.

அடுத்துத் தமிழக அரசியலுக்கு புதுத்திசை கிடைக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

13.02.2021  12 : 12 P.M

Comments (0)
Add Comment