எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று.

“த சன்டே இந்தியன்’ பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.

‘ரசிகன்’ என்றொரு சிறப்பிதழைக் கொண்டு வந்தோம். யாரிடம் கட்டுரைகள் வாங்கலாம் என்று பேசினோம். தங்களுக்குப் பிடித்த நடிகைகள் பற்றி பிரபலங்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம்.

அந்த வரிசையில் எனக்கு அளிக்கப்பட்ட பணி பாலு மகேந்திராவிடம் நடிகை ஷோபாவைப் பற்றி எழுதி வாங்குவது. எளிதான வேலையாகத்தான் தெரிந்தது. ஒப்புக்கொண்டேன்.

காலை எட்டு மணி அளவுக்கு அவருடைய அலுவலகம் சென்று விட்டேன். சில நிமிட இடைவெளியில் பாலுமகேந்திரா வந்தார். அலுவலக உதவியாளரிடம் என் பெயரைச் சொன்னதும் வரச் சொன்னார். கட்டுரையைப் பற்றியும் சிறப்பிதழ் பற்றியும் விவரித்தேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். லெமன் டீயும் வந்தது.

தமிழில் வெளிவந்த நூல்கள் குறித்து விசாரித்தார். “என் பையன்களை முதலில் சிறுகதை, நாவல்தான் படிக்க வைக்கிறேன். பிறகுதான் சினிமா, டைரக்சன், ஒளிப்பதிவு” என்றார். அலமாரியைக் காட்டி அதற்காகத்தான் இத்தனை புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன் என்றும் சொன்னார்.

அய்யா… ஷோபாவைப் பற்றி நீங்க எழுதணும் என்று மெல்ல ஆரம்பித்தேன். “சுந்தர்… நேரமேயில்லை. முடியுமான்னு தெரியலை” என்றார். அய்யா… நீங்க எழுதணும்.. என்று தணிந்த குரலில் கேட்டுக் கொண்டேன். இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்றார்.

அதேபோல காலை நேரம். “வாங்க சுந்தர்…” என்றழைத்தார். தேநீர் வந்தது. அவரைக் கவர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர்களைப் பற்றிப் பேசினார். அண்மையில் வெளிவந்த தமிழ் சினிமாக்கள் குறித்து விசாரித்தார். அருகில் அவருடைய உதவி இயக்குநரும் இருந்தார். “என்னை விட்டுடுங்க சுந்தர்… எழுத முடியலை…” என்றார். இல்லை அய்யா… எழுதுனா நல்லா இருக்கும் என்றேன். அடுத்த வாரம் வாருங்கள் என்றார்.

அடுத்த வாரம்.

அவருக்கு முன்னால் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். என்னுடைய ‘நஞ்சையில நாலு மா…’ என்ற நூலைப் பாராட்டினார். நல்லா எழுதுறீங்க சுந்தர் என்றார். அவருடைய ஈழத்து ஞாபகங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

பேச்சிற்கிடையில் ஷோபா கட்டுரைப் பற்றி நினைவு படுத்தினேன். விட்டுடுங்க… சுந்தர்… என்றவர், எழுத உட்கார்ந்தால் அழுது விடுகிறேன்… என்னால் எழுத முடியவில்லை என்றார். எனக்கு பாவமாக இருந்தது. நாம் பத்திரிகைக்காக அவரை கஷ்டப்படுத்துகிறோமோ என்று நினைத்தேன்.

இத்துடன் விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒரு பக்கம் போதும் அய்யா.. என்றேன். நீங்க டைம் எடுத்துக்கங்க… என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.

இரண்டொரு நாள்கள் கழித்து மீண்டும் சந்திப்பு. எதிரில் உட்கார்ந்ததும் டேபிளில் இருந்து இரண்டு பேப்பர்களை எடுத்துப் படித்தார். எழுதிவிட்டேன் சுந்தர்… என்று கையில் கொடுத்தார். இரண்டரை பக்கம்.

மீட்டெடுக்க முடியாத இழப்பின் நினைவுகளையும் மெல்லிய உணர்வுகளையும் கவித்துவமான வார்த்தைகளில் கொட்டி வைத்திருந்தார்.

-சுந்தரபுத்தன்

13.02.2021 05 : 15 P.M

Comments (0)
Add Comment