கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இது தொடா்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்தப் பெண்ணின் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, “படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், தங்கள் விருப்பப்படி இணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்கின்றனர்.
இதன் வாயிலாக ஜாதி, மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சமூகத்தில், தற்போது மிகப்பெரிய மாற்றம் உருவாக துவங்கியுள்ளது.
கலப்புத் திருமணங்கள் அதிகரிப்பதன் வாயிலாக, ஜாதி, மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் வெகுவாகக் குறையும். கலப்புத் திருமணங்கள் செய்யும் இளைய சமூகத்தினருக்கு, மூத்தவர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன.
அதுபோன்ற நேரங்களில், நீதிமன்றம் தலையிட்டு, இளைய தலைமுறையினரை காக்க வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற புகார்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, காவல்துறைக்கு வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்” எனக் கூறினர்.
13.02.2021 11 : 55 A.M