அ.தி.மு.க. கூட்டணி: லாபம் யாருக்கு?

அ.தி.மு.க. துவங்கியதிலிருந்து அதற்கென்று தனி வாக்கு வங்கி உண்டு. அது தான் அடுத்தடுத்து அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறது.

கூட்டணி இல்லாமல் தனித்து ஜெயலலிதா போட்டியிட்டபோது கூட, 40 சதவிகித அளவுக்கு மேல் அதனால் வாக்குகளைப் பெற முடிந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் அதே அ.தி.மு.க பெற்ற வாக்குச் சதவிகிதம் எவ்வளவு?

சுமார் 18 சதவிகித அளவுக்கு  அதன் வாக்கு வங்கி எப்படி சரிந்தது?

அதே சமயத்தில் அ.ம.மு.க பெற்ற வாக்கு சதவிகிதம் 5.25 துவங்கி 7 சதவிகிதம் வரை. உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் அதிகம்.

அ.தி.மு.க ஆட்சி குறித்த விளம்பரங்கள் கூடுதலாக வெளிவந்து கொண்டிருந்தாலும் – பிரிந்திருந்த அ.தி.மு.க வாக்கு வங்கியை மறுபடியும் பெற வாய்ப்பிருக்கிறதா?

இதுவரை பா.ஜ.க.வின் பெருந்தலைகள் அ.தி.முக மற்றும் அ.ம.மு.க அணிகள் ஒன்றுசேர்ந்து அ.தி.மு.க பலப்பட வேண்டும் என்று சொன்னாலும், ஆளுக்காள் ஒன்று பேசிக் கொண்டிருக்கிற நிலையில் சிதறிக்கிடக்கிறது அ.தி.மு.க வாக்குச் சதவிகிதம்.

முதல்வர், துணை முதல்வர் இருவருமே தனித்தனியாக விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பது முடிவான பிறகும் இந்த விளம்பர இடைவெளி நீடிக்கிறது.

அதை இணைப்பதற்கான வழிமுறைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அதோடு அ.தி.மு.க கூட்டணியில் இதுவரை அங்கம் வகித்த கட்சிகளில் பா.ஜ.க.வைத் தவிர, பா.ம.க, தே.மு.தி.க இன்னும் சில உதிரிக் கட்சிகளும் உறுதியான முடிவில் இல்லை. கூடுதலான தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் அவை காத்திருக்கின்றன அல்லது வேறு வாய்ப்புகளைத் தேடுகின்றன.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக் கொண்டால், தனிப்பெரும்பான்மை பலம் பற்றிய பிரமைகள் விலகிவிடும்.

அப்படி தி.மு.க கூட்டணியை விடக் கூடுதலான வாக்கு வங்கியைப் பெறுவதற்கான ஆயத்த நிலையில் தன்னையும், தன்னுடைய கூட்டணிக் கட்சிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறதா அ.தி.மு.க?

நாம் தமிழர் இயக்கமும், மக்கள் நீதி மய்யமும் தனித்து நின்று ஒருவேளை போட்டியிட்டாலும் கூட, வாக்குகள் ஓரளவு பிரியும் என்றாலும், அது தி.மு.க வெற்றி பெறுவதைத் தடுக்கும் அளவுக்கு வலுவுள்ளதாக இருக்காது.

அ.தி.மு.க.வும், அதன் கூட்டணியும் எந்த அளவுக்குப் பலவீனப்பட்டிருக்கிறதோ, அது தான் எதிர் தரப்புக்குப் பலம்.

இந்த எளிய சூத்திரத்தை உணராவிட்டால், தேர்தல் முடிவுக்குப் பிறகு சாவகாசமாக அவரவர் தனித்து நிதானமாக உணர வேண்டிய சந்தர்ப்பம் தான் வாய்க்கும்.

-யூகி

13.02.2021 01 : 10 P.M

Comments (0)
Add Comment