அதிக வேகம் அதிக போதையா? உயிர்ப்பலி வாங்கும் வாகனங்கள்!

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பெருநகரங்களில் அதிக குதிரைசக்தி உள்ள இருசக்கர வாகனங்களில் மிக அதிக வேகத்துடன் அதிக இரைச்சலுடன் சாலையைக் கடந்து போகிறவர்களைப் பார்க்க முடியும்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். சிலர் அப்போது தான் டீன் ஏஜைத் தொட்டிருப்பவர்கள். சிலர் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள்.

சமீபத்தில் நடந்த விபத்தும் அப்படித்தான். சென்னை அண்ணாசாலையில் காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் நிலை தடுமாறிக் கீழே விழுகிறார்கள்.

அந்த நேரத்தில் வந்த மாநகரப் பேருந்து அவர்களின் மீது ஏறி இறங்கிறது.

பின் இருக்கையில் நெருக்கியடித்து அமர்ந்திருந்த இரு இளம் பெண்கள் அந்த இடத்திலேயே உயிரிழக்கிறார்கள். மிக வேகமாக வாகனத்தை ஓட்டி வந்தவர் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சையில்.

கண்காணிப்புக் காமிராவில் பதிவான காட்சிகளின்படி அவர் தொடர்ந்து பல்வேறு சிக்னல்களைக் கடந்து மிக வேகமாகக் கடந்து வந்திருப்பது புலப்படுகிறது.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்கள் அவ்வளவு வேகத்தில் அவர் வேகம் காட்டியபோது ஏன் தடுக்காமல் அமர்ந்திருந்திருந்தார்கள்?

அந்த நபர் ஏன் நெரிசல் மிகுந்த சாலையில் அத்தனை வேகமாக வாகனத்தை  ஓட்டினார்? ஏன் இப்படிப் பலியானார்கள் அந்தப் பெண்கள்? நேரில் பார்த்தவர்களைக் கலங்க வைத்தன அந்தக் குருதி தோய்ந்த பலிகள்.

இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண்கள் ஹெல்மெட் அணியாமல், அதுவும் இருவராக வாகனத்தில் பயணித்திருக்கக்  கூடாது என்பது ஒருபுறம்.

இவ்வளவு வேகமும், சட்டென்று கட் பண்ணி சாலையில் உடன் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளையும் பதற வைத்து ஏன் வாகனம் ஓட்டுவதை சாகசத்தைப் போல ஆக்குகிறார்கள்?

சனிக்கிழமைகளில் அதிக வேகத்தோடு, குதிரைசக்தி அதிகமுள்ள வாகனங்களில் பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பந்தயம் கட்டி அதி வேகத்தோடு இதே சென்னையில் விரைந்து போனபோது இடையில் நிதானமாகப் போன தம்பதிகள் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரை விட்டிருக்கிறார்கள்.

வித்தை காட்டிய உணர்வோடு சென்ற இளைஞர்களும் உயிரை விட்டிருக்கிறார்கள்.

நெடுஞ்சாலையிலேயே இருசக்கர வாகனத்தில் படுத்தபடியே அவ்வளவு வேகமாகப் போகிறார்கள். சிலர் நிறைபோதையில் அதி வேகமாகப் போகிறார்கள்.

பின்னிருக்கையில் பெரும்பாலும் இளம் பெண்களோ, இளைஞர்களோ அந்த வேகத்தை அனுபவித்து ஊக்கப்படுத்தியபடி செல்ல குதிரைகளைப் போல வேகம் பிடிக்கின்றன அந்த வாகனங்கள்.

பல பெரு நகரங்களில் சர்வ சாதாரணமாகி விட்ட இந்த வாகன ஓட்டிகள் விபத்துக்கும், மரணத்திற்கும் மிகவும் அருகில் நெருங்கியபடி இந்தச் சாகசங்களில் ஈடுபடுகிறார்கள்.

காவல்துறையும் அண்மையில் சிலரைப் பிடித்த நிகழ்வுகள் நடந்தாலும் கூட, உயிரிழப்புகளுக்கு முன்னால் இந்த நடவடிக்கைகள் மந்தம் தான்.

ஒரு அமைச்சரின் மகனே அதிக வேகத்தில் ஒரு மருத்துவமனைக்கு முன்னிருந்த ஸ்பீட் பிரேக்கரில் தடுமாறி அந்த இடத்திலேயே உயிரிழந்திருப்பது ஒரு உதாரணம்.

சில லட்சங்கள் வரை விலையுள்ள அதிக ‘பவர்’ உள்ள இருசக்கர வாகனங்களை வைத்திருக்கும் இளைஞர்களில் பலர் செல்வாக்கும், அதிகாரமும் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் மிக எளிதாக காவல்துறை நடவடிக்கைகளிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

ஆனால் செல்வாக்கு மிகுந்த இவர்களின் சாகசங்களுக்குச் சாதாரண ஆட்டோ ஓட்டுநர்களும், சாலையோரத்தில் படுத்திருப்பவர்களும் ஏன் பலியாக வேண்டும்? இப்படி பெரு நகரங்களில் அடுத்தடுத்து எத்தனை பலிகள்?

விதவிதமான மது, கஞ்சா போன்றவை மட்டும் போதையல்ல. மித மிஞ்சிய வேகமும் அதிக போதை தான்.

ஆனால் அதிக வேகமான இந்தப் போதை தலைக்கேறும்போது அவர்கள் உயிரோடு இருப்பதில்லை என்பது தான் சோகம்.

அதிக விலையுள்ள இருசக்கர வாகனங்களைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து ‘அப்பா அம்மாவின் கிஃப்ட்’ என்று வானங்களில் பாசமாகப் பின் பதிவிட்டு அவர்கள் வாகனத்தில் விரையும் அழகை வேடிக்கை பார்க்கும் பெற்றோர்களுக்கு இந்த எளிய கட்டுரை சமர்ப்பணம்!

– அகில் அரவிந்தன்

13.02.2021 05 : 40 P.M

Comments (0)
Add Comment