சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளைக் கண்டுபிடித்து, பாதுகாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், “சென்னையைச் சுற்றி இருந்த பல நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன. நீர்நிலைகள் வாழ்வாதாரத்துக்கு நுரையீரலைப் போல முக்கியமானது என்பதை உணர்ந்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை.
சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அரசு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அரசியல் உள்ளிட்ட எந்தக் காரணங்களுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது. ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்க மனுதாரர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரலாம். உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த உத்தரவை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதேபோல் மற்றொரு பொதுநல வழக்கில், தமிழகத்தில் குவாரிகளை அமைக்க அந்த இடத்தின் மாதிரிகளை ஆய்வு செய்த பின்னரே அனுமதி தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மேலும், ஆய்வு செய்வதற்காக கனிமத்துறையினர் உள்ளிட்டோரை கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளுக்கு அருகே பட்டா நிலங்களில் இருக்கும் மணல் அளவு குறித்து விரிவான ஆய்வு செய்ய குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்து அந்தப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
12.02.2021 04 : 50 P.M