கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
அதன்பின், மே 25 முதல் குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன. குறைந்த பயணிகளுடன் இயங்குவதால், விமான நிறுவனங்கள், டிக்கெட் கட்டணத்தை அளவிற்கதிகமாக உயர்த்துவதைத் தடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதன்படி, “40 நிமிட விமான பயணத்திற்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 6,000 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்” என விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது.
துாரத்திற்கு ஏற்ப பல நிலைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்பு வரும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்நாட்டு விமான பயண கட்டணங்களுக்கான வரம்பை உயர்த்தி மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் விமான பயண கட்டணங்கள் 30% வரை உயர்கிறது.
அதனால் விமான டிக்கெட்டிற்கான கட்டண வரம்பை, மத்திய அரசு 10-30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 2,000 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாகவும் அதிகபட்சமாக கட்டணம் 6,000 ரூபாயிலிருந்து 7,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல 150 முதல் 180 நிமிட பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 6,100 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 20,400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
3 மணி முதல் 3.30 மணி நேர பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 7,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் 18,600 லிருந்து 5,600 ரூபாய் அதிகரித்து 24,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் தேதி வரையோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையோ இந்தக் கட்டண உயர்வு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களும் உயரும் என கூறப்படுகிறது.
12.02.2021 02 : 10 P.M