முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க முடியாது!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை குறைத்து உத்தரவிட முடியாது என அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதுமன்றம், அதுதொடர்பான அனைத்து இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் 130ஆக குறைக்க வேண்டும் என கேரளாவைச சேர்ந்த ரசூல்ராய் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இயற்கை பேரிடர் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக துணைக் குழுவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்பின் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவுக்கு தமிழக அரசுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி ஒரு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநில வெள்ள பாதிப்பிற்கு தமிழக அரசும் ஒரு காரணம் என கேரள அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் எந்தவித முகாந்திரமும் இல்லை. மேலும் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதும் இல்லை.

ஏனெனில் முல்லைப் பெரியாறு உபரி நீர் திறந்து விடுவதற்கு முன்னதாகவே இடுக்கி அணையில் இருந்து கேரள அரசு நீரை திறந்து விட்டது. அதுவே வெள்ள பாதிப்பிற்கு முக்கிய காரணமாகும்.

அதைவிடுத்து தமிழக அரசு மீது பழிபோடுவது சரியானது கிடையாது என குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கு கேரள அரசு மற்றும் அணையின் நீர் மட்டத்தைக் குறைக்கோரிய ரசூல்ராய் ஆகியோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் மற்றும் அனிரூத்தா போஸ் ஆகியோர் அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து உத்தரவிட முடியாது. அதில் எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு இடைக்காலமாக அணையின் நீர்மட்டம் குறைத்தமைக்கு அப்போது கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முக்கிய காரணமாகும். ஆனால் அதைத் தொடர்ந்து இரு குழுக்கள் அமைக்கப்பட்டு அணையை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது.

நீர்மட்டம் குறைப்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களும் தற்போது காலாவதி ஆகிவிட்டதால் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்கிறது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை களைக்கக்கோரி ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவிற்கு மார்ச் 2ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.

12.02.2021 04 : 40 P.M

Comments (0)
Add Comment