புன்னகை என்ன விலை? என்பதாக புன்னகைக்கு மட்டும் ஒரு விலை இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கி அணிந்து கொள்ளலாமே என மகிழ்ச்சியைத் தேடி இன்று பலரும் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதேனும் பிரச்சனைகள் அழுத்தும் போதும், கவலைகள் ஏற்படும் போதும், ஏதாவது மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து விடாதா என மனம் ஏங்கும். யாராவது மகிழ்ச்சியாக ஏதாவது சொல்லி விட மாட்டார்களா என உள்ளம் துடிக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? அந்த மகிழ்ச்சிக்கு ஏதோ ஒன்று நடக்க வேண்டியதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தர வேண்டியதில்லை. நிறைவான புன்னகையை, ஆனந்தத்தை, பரவசத்தை, மகிழ்ச்சியைத் தேடி நீங்கள் எங்கெங்கோ அலைய வேண்டியதில்லை. விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் உங்களிடமே சுரக்கச் செய்யலாம்!
எண்டோர்ஃபின்ஸ்… இந்த வார்த்தையை கேட்டிருக்கிறீர்களா?! ஆஹா.. இது மட்டும் கடையில் இலகுவாக கிடைத்தால், இதை மூட்டை மூட்டையாக வாங்கி வீட்டில் குவித்து வைத்து விடலாம். அப்படி என்ன பொருள் அது?!
இது தான் நமக்குள்ளே மகிழ்ச்சி, உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடிய வலி வேதனையைக் குறைக்க உதவும் ஹார்மோன். இதற்கு மற்றுமொரு பெயரே மகிழ்ச்சி ஹார்மோன் என்பதுதான்.
நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என உங்கள் மனநிலையும், உடல் நிலையும் அதற்குத் தயாரானால் உங்கள் மூளை, ‘மகிழ்ச்சி.. இரண்டு பார்சல்!’ என்பதாக (Pituitary gland) ‘பிட்யுட்டரி கிலாண்ட்’க்கு கட்டளையிட இந்த எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும்.
மகிழ்ச்சி என்ற அந்த ஒற்றைச் சொல்லிற்காகத் தான், அந்த உற்சாக உணர்வுக்காகத் தான், நாம் எங்கெங்கோ போகிறோம். எது எதையோ தேடுகிறோம், என்னென்னவோ செய்கிறோம், எது எதையோ இழக்கிறோம். அந்த உன்னத உணர்வுக்கான மூலம் நமக்குள் தான் இருக்கிறது என்பது தெரியாமலேயே அல்லது அறிந்தும் அறியாமலேயே.
இந்த எண்டோர்ஃபின்ஸ் பற்றி நாம் இன்னும் அறிந்து கொண்டால் அதை சுரக்கச் செய்யும் யுக்தியை நாம் புரிந்து கொண்டால், எந்தச் சூழலும் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் தான்.
நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும்போது, உடலை ஸ்ட்ரெச் பண்ணி யோகா செய்யும் போது, விரும்பி ஒரு செயலை செய்யும் போது, நீங்கள் உண்மையில் ஏதோ ஒன்றால் மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமல்ல… நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக பாசாங்கு செய்யும் போதும், நீங்கள் மகிழ்ச்சிக்குத் தயார் என உங்கள் மூளை அதை உணர்ந்து கட்டளையிட உங்களிடம் எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.
பல நேரங்களில்.. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கும்போது, ஏதாவது மனம் சங்கடப்படும்போது, கடந்த கால எண்ணங்கள் எதையாவது அசை போட்டு மனம் வருந்தும் போது, உங்களையும் அறியாமல் உங்கள் கை உங்கள் கன்னத்தை தாங்கிக் கொள்ளும்.(கன்னத்தில் கை வைக்காதே… எனப் பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா?!) என்னை, என் பிரச்னையை யாராவது தாங்கிக் கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக அது தோன்றும்.
அந்தத் தோற்றத்தில் (posture) கொஞ்சம் சிரிக்க முயன்று பாருங்கள். கண்களில் டன் டன்னாக சோகம் வழியுமே தவிர, உள்ளத்தில் உற்சாகம் பிறக்காது. இன்னும் வருத்தம்.. இன்னும் சோகம்.. என்று உங்களை அது இன்னும் இன்னும் இறுக்கமாக்கி விடும்.
அந்தத் தோற்றத்தில் நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும், நீங்கள் சோகமாக இருக்கிறீர்கள் என்பதாக உங்கள் மூளைக்கு செய்தி போக அதுவும் உங்களை இன்னும் சோகமாக்கக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை சுரக்கச் செய்து மகிழ்ச்சியற்று தவிக்கச் செய்யும்.
ஆனால் நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு, உங்கள் உடல் அசைவுகளை உங்கள் மூளை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது, அதுதான் நீங்கள் விரும்பும் மனநிலை என எண்ணி, அதற்கான சுரப்பிகளை சுரக்கச் செய்கிறது என்பதை அறிந்து கொண்டு, கன்னத்தை தாங்கிக் கொண்டிருக்கும் கையை சட்டென்று எடுத்து விட்டு, உங்கள் உதட்டை ஸ்ட்ரெச் பண்ணி அழகாக புன்னகைப்பது போல செய்யுங்கள். விளையாட்டாக ஒரு பயிற்சியாக செய்து பாருங்கள்.
அந்தத் தோற்றத்தில் உங்களால் சோகமாகவே இருக்க முடியாது. நீங்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு சிரிக்கவில்லை என்று உங்களுக்குத் தெரியும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு கூடத் தெரியலாம். ஆனால் உங்கள் மனதிற்கு தெரியாது. உங்கள் மனம் நீங்கள் பாசாங்காக செய்தாலும் உண்மை என்றே நம்பும். உடனே அது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மூளைக்கு செய்தி அனுப்ப, உங்கள் மூளையும் அதை அதிகப் படுத்துவதற்காக என்டோர்ஃபின்ஸ்ஸை சுரக்கச் செய்யும்.
சிரிப்பு என்றால் மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்றால் எண்டோர்ஃபின்ஸ் என்ற தகவல் மூளைக்குப் போக உங்களுக்குள் எண்டோர்ஃபின்ஸ் சுரந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் உங்களுக்குள் தொற்றிக் கொள்ளும்.
உடனே உண்மையான உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் பரவும். வேண்டிய அளவு செய்து பாருங்கள். வியப்பாக இருக்கும். அப்போது உங்கள் மனதில் வருத்தமான சோகமான எந்த சிந்தனையுமே ஏற்படாது. சிரிப்பது போன்ற தோற்றமே சிரிப்பை தரும்போது, உங்கள் மனநிலை உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தால், எண்ணிப் பாருங்கள்… உங்கள் வாழ்வே நிச்சயம் மகிழ்ச்சியாக மாறிவிடும்.
தவிர, சில நேரங்களில் பார்த்திருப்பீர்கள். ஏதாவது பிரச்னை மனதை அழுத்தும் போது உங்கள் கைகள் இரண்டும் கண்களை மறைத்து உங்கள் விரல்கள் அப்படியே புருவத்தின் மேல் படரும். இது இயற்கையின் வினோதம். புருவத்தைச் சுற்றி எண்டோர்ஃபின்ஸ் சுரப்பிகள் இருக்கிறது. புருவத்தை அழுத்தும்போது அது நன்கு சுரக்கப்படுகிறது.
இதை நீங்கள் சரியாக செய்து பாருங்கள். புருவத்தை சுற்றி விரலால் சிறிது அழுத்தம் கொடுத்து விட்டு, நெற்றிப் பொட்டில் கொஞ்சம் நேரம் hold பண்ணி விட்டு, பின் புருவ முடிவிலிருந்து அதன் ஆரம்பம் வரை சிறிது தடவிக் கொடுங்கள். ஒரு மஸாஜ் போல் இதை செய்யும் போது எண்டோர்ஃபின்ஸ் உங்களிடம் சுரக்க உங்கள் மன வலிகள் குறைந்து மனம் மகிழ்ச்சி அடையும்.
அன்று.. மேலை நாடு ஒன்றின், புகழ் பெற்ற கல்லூரியின் ஆண்டு தொடக்க நாள். மாணவர்கள் தங்களைப் பற்றி ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் வரிசையில் இருந்த ஒரு 70 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் தன்னைப் பற்றி பேச எழுந்தார். அனைவருக்கும் பெரும் வியப்பு. இவர் மாணவியா?! இந்த வயதில் கல்லூரியில் படிக்க வந்திருக்கிறாரா? என்று ஆச்சரியமாகப் பார்த்தனர்.
ஒரு ரோஜாவின் இதழ்களாக வயது தந்த முகவரி கடந்து, மலர்ந்த முகத்துடன் எல்லோருடைய வியப்புக்கும் பதில் சொல்வதாக அவர் பேசத் தொடங்கினார்.
“அன்பான நண்பர்களே, நான் வயதில் முதிர்ந்தவள் தான். ஆனால் என் மனது உங்களுடன் இயைந்து படிக்க, விளையாடத் துடிக்கும் ஸ்வீட் 18. உண்மையில் நாம் முதுமை அடைவதால் விளையாடுவதை நிறுத்தவில்லை. விளையாடுவதை நிறுத்துவதாலேயே முதுமை நம்மை வந்தடைகிறது.
உங்கள் அன்றாட மனநிலையை நீங்கள் மகிழ்ச்சியாகவும் நகைச்சுவை உணர்வுடனும் வைத்துப் பாருங்கள். முதுமை உங்கள் மனதை நெருங்காது. உற்சாக எண்ணமே இளமையின், மகிழ்ச்சியின் ரகசியம்.
வளர்ச்சியும் வயோதிகமும் ஒன்றல்ல. ஒவ்வொரு மகிழ்ச்சியான நாளும் வளர்ச்சியைத் தரும். ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற மணித்துளிகளும் வயோதிகத்தைத் தருகிறது” என சற்றே தளர்ந்த குரலுடன் எந்தத் தளர்ச்சியுமில்லாமல் வந்த அவர் பேச்சு சக மாணவர்களுக்கிடையே உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு துளி தேன், ஒரு குவளை நீரையே இனிப்பாக மாற்றுகிறது. அந்த வயதிலும் சிரிப்பும் விளையாட்டுமாக கல்வி கற்க வந்த அவரிடம் மற்ற மாணவர்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் படிக்கிறார்கள்.
ஆழ்ந்த அனுபவம் பேசும் இந்தச் சம்பவமும், எண்டோர்ஃபின்ஸ் பற்றிய இன்றைய அறிவியல் ஆய்வும், நமக்குச் சொல்வது ஒன்றுதான். நல்ல மனநிலையும், விளையாட்டும், உற்சாகமுமாக இருந்தால், எந்த வயதிலும் இளமை ததும்பும். மகிழ்ச்சி மலரும்.
11.02.2021 12 : 50 P.M