இந்திய சினிமாவில் சமீபகாலமாக, பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வெளியான பயோபிக் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கவனிப்பை பெற்றதால், இயக்குனர்கள் தங்கள் கவனத்தை, ஸ்போர்ட் பயோபிக் கதைகள் பக்கம் திருப்பி இருக்கிறார்கள்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை கதையில், பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் படம், பெரும் வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கைக் கதையில் கவனம் செலுத்தினார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பயோபிக், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு தோனி மீதிருந்த ரசிகர்களின் அபிமானமும் காரணம்.
ஆனால், இன்னொரு முன்னாள் கேப்டன், அசாரூதினின் வாழ்க்கை கதை அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அசார் என்ற அந்தப் படத்துக்காக, நடிகர் இம்ரான் ஹாஸ்மி கடுமையாகவே உழைத்திருந்தார். இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் அது ஹிட் ஆகவில்லை.
ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் மகாவீர் போகட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான தங்கல், மெகா ஹிட்டானது. இந்தப் படத்துக்காக நடிகர் அமீர்கான் தனது உடல் எடையை அதிகரித்து, அந்தக் கேரக்டராகவே மாறியிருந்தார். இந்தப் படங்கள் ஹிட்டானதால், தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் பயோபிக் பக்கம் இயக்குனர்களின் கவனம் மேலும் திரும்பியது.
இதற்கு முன்பே பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து பாக் மில்கா பாக், இந்திய ஹாக்கி அணி, முதன்முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை மையமாக வைத்து உருவான கோல்ட், தடகளவீரர் பான் சிங் தோமரின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவான படங்கள் கவனிப்பை பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், இப்போது பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கை கதை ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் படமாகிறது. மித்தாலியாக டாப்ஸி நடிக்கிறார். ஷூட்டிங்கிற்காக, கடுமையான கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.
இதையடுத்து இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையைக் கொண்டு, ‘மைதான்’ என்ற படம் உருவாகி வருகிறது.
பாலிவுட் டாப் ஹீரோ அஜய்தேவ்கன் நடிக்கும் இந்தப் படத்தில் அவர் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். ஷூட்டிங் தொடங்கிய நிலையில், அவர் திடீரென மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பிரியாமணி நடித்திருக்கிறார்.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பயோபிக்கில், பரினீதி சோப்ரா நடித்து வருகிறார். மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் வாழ்க்கைக் கதையும் தற்போது தயாராகி வருகிறது. இதில், தீபிகா படுகோனும், ‘கொரோனா ஹீரோ’ நடிகர் சோனு சூட்டும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்களை தவிர பளு தூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதையும் சினிமாவாகிறது. ஆந்திராவைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, பெண்கள் பளுதூக்குதல் பிரிவில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர். இவர் கேரக்டரில் நடிக்க நடிகைகளைத் தேடி வருகிறார்கள்.
”கற்பனையான கதைகளை விட, நிஜமான வெற்றியாளர்கள் அல்லது போராடி வென்றவர்களின் வாழ்க்கைக் கதைகளை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான், பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் பயோபிக் படங்கள் வெற்றி பெறுகின்றன.
இதை ரசனை மாற்றம் என்று சொல்ல முடியாது. நல்ல கதைகளை ரசிக்க, ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.
-அழகு
12.02.2021 12 : 30 P.M