மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக டுவிட்டர் நிறுவனம் சுமார் 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்கியது.
சமீபகாலமாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால், மேலும் பல கணக்குகள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் சமூக ஊடகத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் லிங்க்டுஇன் போன்ற சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
நீங்கள் (சமூக ஊடகங்கள்) வியாபாரம் செய்யவும் பணம் சம்பாதிக்கவும் சுதந்திரமாக செயல்படுகின்றீர்கள். ஆனால், நீங்கள் இந்திய அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம், அது மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. இருப்பினும், போலி செய்திகளைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
11.02.2021 12 : 50 P.M