வாக்குப் பதிவு நேரம் அதிகரிக்கப்படும்!

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் தொடர்பாக, இங்குள்ள அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுனில் அரோரா, “மே 24-ம் தேதியுடன் தற்போதைய தமிழக சட்டப் பேரவையின் ஆட்சிக் காலம் முடிகிறது.

கொரோனா விதிகளைப் பின்பற்றி தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் எப்போதும் போல் வாக்கு சதவிகிதம் அதிகமாகப் பதிவாகும் என எதிர்பாக்கிறோம்.

தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் தேர்தலை திட்டமிட்டுள்ளோம்.

ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வாக்குப்பதிவு முடிந்த 2 நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும், தேர்தல் பாதுகாப்புப் பணிக்குக் கூடுதலாக துணை ராணுவம் அனுப்ப வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வாக்குப் பதிவு கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்குத் தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

வாக்குப்பதிவு மையங்கள் 68,000-லிருந்து 93,000 உயர்த்தப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்.

சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தேர்தலின் போது பண விநியோகத்தில் ஈடுபட்டு வழக்கு பதியப்பட்டோர் விவரம் ஆணையத்திடம் உள்ளது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பான தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும். தேதி அறிவித்தவுடன் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது வீடியோ பதிவு செய்யப்படும்.

மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையை உயரதிகாரிகள் கண்காணிப்பார்கள். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும்.

11.02.2021 04 : 20 P.M

Comments (0)
Add Comment