நிஜமாகவே கூப்பிடு தூரத்தில் அலையடிக்கும் கடல். செந்நிறப் பூச்சோடு கருங்கல்லில் கட்டப்பட்ட பழமை ஒட்டிய அழகு. நூற்றாண்டைக் கடந்த மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்ததும் குதுகலப்படுகிறார் தமிழருவி மணியன். அவருடைய கல்லூரி நினைவுகளிலும் ஒட்டியிருக்கின்றன கடலோரத்து ஈரமும் பொடி மணலும்.
“பெரம்பூரில் தான் நான் படித்தேன். பிறந்து வளர்ந்தது எல்லாம் அந்தப் பகுதியில்தான். இப்போதுள்ள பெண்களுக்கான காயிதே மில்லத் கல்லூரி அப்போது ஆண்களுக்கான கல்லூரி. அங்கே புதுமுக வகுப்பு படித்தேன். கண்ணதாசன் மூலம் தமிழுணர்வு எனக்குள் ஊறியிருந்த நேரம் அது. அந்தச் சமயத்தில் ஜனவரி மாதத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்தது.
வீட்டில் நான் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்திப் போராட்டத்தில் நான் ஈடுபட்டதால் சரியாகப் படிக்காமல் தட்டுத் தடுமாறித் தான் தேர்ச்சி பெற்றேன். அதனால் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.
அடுத்ததாக ரசாயனம் படிக்க விரும்பினேன். மாநிலக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனக்கு கிடைத்தது புவியியல். பிடித்த கல்லூரி, பிடிக்காத பாடம். இருந்தும் கல்லூரிக்காக புவியியல் வகுப்பில் சேர்ந்தேன்.
உயரமான மணிக்கூண்டு; வெள்ளைக்காரன் காலத்துக் கட்டிடம்; மரங்கள் நிறைந்த தாழ்வாரம்; பசுமையான பைசன் மைதானம்; புத்துணர்ச்சி தரும் கேண்டீன் என்றிருந்த கல்லூரி பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை.
கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜி.ராமச்சந்திரன் அபூர்வமான, அருமையான மனிதர். காலை நேரத்தில் கண்காணித்து கல்லூரியையே சோலையைப் போல மாற்றியிருந்தார். நாங்கள் புல்வெளியின் குறுக்கே கடந்து போனால், “ஒரு குழந்தையின் மார்பைக் கடக்கிற மாதிரி இல்லையா?” என்று கேட்கும் அளவுக்கு மென்மையான மனிதர்.
அப்போதே கோ-எஜுகேஷன் இருந்த கல்லூரி. 6 மாணவிகள், 15 மாணவர்கள். இதுதான் எங்கள் வகுப்பு. முதல் வரிசையில் பெண்கள். இரண்டாம் வரிசையில் நானும் என் நண்பர்களும். அவ்வளவு பசுமையாக இருந்தது அந்த அனுபவம்.
எங்கள் துறையில் வெள்ளிக்கிழமைதோறும் இரண்டு மணி நேரம் வெளியில் சர்வேக்கு போய் விடுவோம். எங்களுடன் யாராவது ஒரு மாணவியை இணைத்து அனுப்புவார்கள். முக்கால் மணி நேரத்தில் சர்வேயை முடித்துவிட்டு மாணவிகளுடன் சேர்ந்து கடலோரத்தில் உட்கார்ந்து விடுவோம்.
மாணவிகள் பெரும்பாலும் பாவாடை, தாவணி தான் உடுத்தி இருப்பார்கள். அவர்கள் தாவணியில் ஏதாவது கடலையை வாங்கியிருப்பார்கள். நாங்கள் விரசம் இல்லாமல் எடுத்துச் சாப்பிடுவோம். பெண்களுடன் சேர்ந்து பேசுவதை யாரும் விகற்பமாக எடுத்துக் கொள்வதில்லை.
படிக்கிற போது எங்கள் வகுப்பறையில் நானும் இன்னும் 5 மாணவர்களும் எப்போதும் சேர்ந்தே திரிவோம். சில சமயங்களில் எல்லோரும் சொல்லி வைத்து ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து வருவோம். துறைத் தலைவர் உட்பட பலரும் எரிச்சலாகப் பார்ப்பார்கள்.
கல்லூரிக்கு எதிரில் கடற்கரையில் புகாரி ஹோட்டல் இருந்தது. எங்க வீட்டில் ஒரு நாளைக்கு இரண்டே முக்கால் ரூபாய் கொடுப்பார்கள். பேருந்துக் கட்டணம் 20 பைசா போக மிச்சம் கூடுதலாகப் பணம் இருக்கும். நேரே புகாரிக்கு நண்பர்களுடன் சேர்ந்து போவேன். ஓட்டலில் பாடல் இசைக்கும் ‘ஜுக்பாக்ஸ்’ இருக்கும். அதில் நாலணா போட்டால் இசைத்தட்டு ஒலிக்கும்.
அப்போது சிவாஜி நடித்த ‘நெஞ்சிருக்கும் வரை’ படம் வெளிவந்த நேரம். முத்துக்களோ கண்கள் என்று அதில் வரும் பாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
அப்போது டி.எம்.எஸ்-ஸின் பாடல்களை அதன் லயம் மாறாமல் பாடுவேன். வகுப்பில் இடைவேளைகளில் என்னைப் பாடச் சொல்வார்கள். ‘டி.எம்.எஸ். புலவன்’ என்று சில பட்டப் பெயர்களில் சக மாணவர்கள் என்னைக் கூப்பிடுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் இருந்து சுற்றுப்பயணம் போவோம். உடன் படிக்கும் மாணவிகள் வரும்போது அந்தப் பயணம் இன்னும் இனிமையாக இருக்கும். கூடப் படித்த ஒரு மாணவியுடன் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது குளிர் அதிகமாக இருந்தது. அவர் என்னுடன் இணைந்து ஒரு கம்பளியைப் போர்த்தியபடி வருகிற அளவுக்கு நல்ல நட்பாக இருந்தார்.
அப்போது நான் தலைமுடி முன்னால் குருவிக்கூடு மாதிரி விழுகிற மாதிரி சீவி இருப்பேன். அந்த மாணவி தான் அதை மாற்றி என்னுடைய முகவாயை பிடித்து சீப்பினால் தலை வகிடு எடுத்து மாற்றி சீவி விட்டார். அந்தப் பாணி தான் இன்றுவரை தொடர்கிறது. அப்போதே இந்த மாதிரியான ரசக்குறைவில்லாத நட்பும் சாத்தியப் பட்டிருந்தது.
நான் படித்த காலத்தில் கல்லூரியில் படித்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தார். சில வகுப்புகள் சேர்ந்து நடக்கும். அப்போது அவருடன் பழக்கம். சம்பத்தின் மகன் என்பதால் அவர் மீது மதிப்பிருந்தது. அப்போது என்னுடைய ஆசை எப்படியாவது தமிழ்ப் பேராசிரியராக வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன்விலங்கு நாவல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதன் பாதிப்பு எனக்குள் பலமாக விழுந்திருந்தது.
கல்லூரியில் இலக்கியக் கூட்டங்களில் நான் அப்போதே பேச ஆரம்பித்து விட்டேன். துரைமுருகனும், நானும் பேச்சுப் போட்டியில் ஒன்றாகக் கலந்து கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியத்தில் எனக்கு அப்போது நல்ல ஈடுபாடு. அந்தச் சமயத்தில் என் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் சட்டமன்றத் தேர்தலில் தோற்றபோது அந்தச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்பாசாமி என்ற நண்பர் அப்போது காமராஜரைச் சந்திக்க அழைத்துக் கொண்டு போனார். பல மாணவர்களுடன் சேர்ந்து போனேன். ஒரு தாத்தா பேரப்பிள்ளைகளிடம் பேசுவதைப் போல மாணவர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்.
தனியாக அவரிடம் பேசியதில்லை. அப்பாசாமியை போன்று அவருக்குத் தெரிந்தவர்கள் அவரிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டிருப்போம். அவரைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
மாணவர் காங்கிரஸில் பிறகு சேர்ந்தேன். சத்தியமூர்த்தி பவனுக்கு போக ஆரம்பித்து விட்டேன். 71 சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பெரம்பூரில் ஒரு கூட்டம். கலைஞர் அப்போது முதல்வர். நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த நண்பர்கள் என்னையும் மேடையில் பேசச் சொன்னார்கள். தி.மு.க.வைப் பற்றிக் கடுமையாகப் பேசினேன். அதுதான் முதல் அரசியல் மேடை. விநாயகமூர்த்தி தான் காங்கிரஸ் வேட்பாளர். அவருக்கு என்னுடைய பேச்சு பிடித்துப்போனது.
காமராஜர் கடைசியாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம். சென்னையில் 6 இடங்களில் அவர் பேசுவதற்கு முன் என்னைப் பேசச் சொன்னார்கள். நானும் பேசினேன். முதல் பேச்சு வியாசர்பாடியில். நான் பேச வேண்டும் என்பதற்காக பேசிக் கொண்டிருந்தவரை நிறுத்தச் சொல்லிவிட்டு, என்னை பேசச் சொன்னார்கள்.
ஆனால், மேடையில் மைக்கில் “பெருந்தலைவர் வாழ்க” என்று உரத்துக் கோஷம் போட்டுக் கொண்டிருந்த தொண்டரோ அதைக் கேட்காமல் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தார்.
“நிறுத்துன்னேன்” என்றபடி அந்தத் தொண்டரை ஒரு தட்டு தட்டினார் காமராஜர். தட்டியதும் மேடையிலிருந்து கீழே விழுந்தார் அந்தத் தொண்டர். பிறகு காமராஜரே அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
“காமராஜர் வாழ்க” எதுக்குன்னேன். நான் நிறுத்தச் சொன்னேன்லே.. ஏன்… கேட்கலை?” என்று அந்தத் தொண்டரைச் சமாதானப் படுத்திவிட்டு என்னைப் பேசச் சொன்னார்.
அவருக்கு முன்னால் பேசினேன். அதுதான் அவருக்கு முன்னால் பேசிய முதல் பேச்சு. நான் பேச்சை முடித்ததும் என் கையைப் பிடித்து, “இவ்வளவு நேரம் இந்தப் பையன் தமிழருவியா பேசினானேன். இந்தச் சின்னப் பையனுக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியாதான்னேன்…” என்று சுருக்கமாகப் பேசிவிட்டு கிளம்பிவிட்டார். இது தான் மணியன் தமிழருவி மணியனான கதை. இதுவும் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் நடந்த ஒன்றுதான்.
பெரியார் மீதும் எனக்கு ஈர்ப்பு இருந்தது. நாவலர், கலைஞர், சிற்றரசு, ராஜாஜி உட்படப் பலருடைய மேடைப் பேச்சுக்களை நான் கேட்டாலும் அப்போது எனக்குப் பிடித்த மேடைப் பேச்சாளர்கள் ஈ.வி.கே.சம்பத்தும் நாஞ்சில் மனோகரனும் தான். மொழி ஆளுமையுடன் அவர்கள் பேசும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும். மேடைகள் கண்ணியமாக இருந்த காலகட்டம் அது.
காமராஜரின் பக்தனாகவும் அப்போதே திமுக எதிர்ப்பாளனாகவும் இருந்தேன். 1969 வரை மாநிலக் கல்லூரியில் மூன்றாம் வகுப்பில் தேறினேன். என்னுடைய ரசனை இலக்கியம் சார்ந்து இருந்ததால் தேர்வுக்குச் சில நாட்களுக்கு முன்னால் படிப்பது வழக்கமாக இருந்தது. அங்கேயே எம்.எஸ்.சி புவியியல் வகுப்புக்கு முயற்சித்தேன். எம்.ஏ., புவியியல், எம்எஸ்சி புவியியல் இரண்டும் இருந்தன. ஆனால், நானும் நண்பன் ராமநாதனும் எம்.எஸ்.சி புவியியலுக்கு மட்டும் விண்ணப்பித்து விட்டு, எம்.ஏ.க்கு விண்ணப்பிக்கிற ஐந்து ரூபாயை வைத்து சாந்தி தியேட்டரில் படம் பார்க்க போய்விட்டோம்.
கடைசியில் எம்.எஸ்.சி. கிடைக்கவில்லை. எம்.ஏ.வுக்கு விண்ணப்பிக்காததால் அதுவும் கிடைக்கவில்லை. அன்றைக்கு ஐந்து ரூபாய் கொடுத்து எம்.ஏ-வுக்கு விண்ணப்பிக்காமல் திரைப்படம் பார்க்கப் போன சம்பவம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
பிறகு, ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படிக்க சைதாப்பேட்டையில் சேர்ந்தேன். ஒரு வழியாக பி.எஸ்.சி. பி.டி ஆகிவிட்டேன். ஆனாலும், மாநிலக் கல்லூரியில் படித்த புவியியல் படிப்பை வைத்து தான் எனக்கு வேலை கிடைத்தது.
அதற்குப் பிறகு சட்டக் கல்லூரிக்குப் போய்ப் படித்தேன். இருந்தாலும், என்னுடைய வாழ்க்கையின் வசந்த காலமாக நான் இங்கு படித்த காலகட்டத்தைத் தான் சொல்வேன்” என்றபடி கல்லூரிக்கு முன்னால் வந்தார் தமிழருவி.
முன்னால் கடற்கரை. வாகன நெரிசல். “இங்கே தான் சிவாஜி நடித்த ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. மெரினாவில் நடந்தப்போ கல்லூரிக்கு கட் அடிச்சிட்டு அங்கே போயிட்டோம். ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பு நடந்துச்சு. வேடிக்கை பார்த்தது இன்னும் நினைவில் இருக்கு…”
கல்லூரியை விட்டு வெளியே வரும்போது ஈரமான நினைவுடன் சொல்கிறார்.
“1969 இல் கடைசி ஆண்டில் நாங்கள் பிரிகிறபோது ஒரு விருந்து நிகழ்ச்சி. சந்திக்கிறோம். அறிகிறோம். அன்பு செய்கிறோம். பின்பு பிரிகிறோம். மிகப்பல மனித இதயங்களின் சோகக் கதையே இதுதான்!” என்று கோல்ட்ரிஜின் மேற்கோளுடன் மிகுந்த நெகிழ்வுடன் பேசி முடித்தபோது, மாணவர்களும் பேராசிரியர்களும் கண் கலங்கிப் போனார்கள்.
எவ்வளவோ ஆயிரக்கணக்கான கூட்டங்களில் அடுத்து நான் பேசி விட்டாலும் என்னால் இப்போதும் மறக்க முடியாத பேச்சு அதுதான்.”
கடலோரத்தில் இருந்து அடிக்கிற காற்று அந்தக் கல்லூரி வளாகத்திற்குள் சிறு வெள்ளம் போல வந்து போகிறது.
–சந்திப்பு: மணா
பிரபல வார இதழில் வெளிவந்த தொடரின் ஒரு பகுதி.
09.02.2021 04 : 50 P.M