தொண்டர்களை மிகவும் மதித்த எம்.ஜி.ஆர்.!

1972-ல் அ.தி.மு.க. துவக்கப்பட்டபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் தான். அ.தி.மு.க. என்ற பெயரையே உருவாக்கி மக்கள் திலகத்திடம் வழங்கியதும் ஒரு தொண்டர்தான். அ.தி.மு.க. உருவாவதற்கு முன்பே கழகக் கொடியை முதலில் உருவாக்கி ஏற்றி பெருமைப்பட்டவர்களும் தொண்டர்கள்தான்.

திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று தந்து இரட்டை இலைச் சின்னத்தை வெற்றி சின்னமாக்கியவர்களும் அ.தி.மு.க.தொண்டர்கள்தான்.

இதை மனதில் வைத்தோ என்னவோ எம்.ஜி.ஆர். ஒரு கூட்டத்தில் மேடையிலிருந்த தலைவர்களை கைநீட்டி சுட்டிக்காட்டி; இவர்களைவிட எதிரில் இருக்கும் தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம் என்று வெளிப்படையாகச் சொன்னார்.

தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பாரபட்சமில்லாமல் முழுக்க நம்பிக்கையுடன் தன்னை உயர்த்திய தொண்டர்களுக்கு அவர் எப்பொழுதுமே முதல் மரியாதை கொடுத்து வந்தார்.

கடைசிக் காலக் கட்டத்தில் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மாநாட்டில் கூட தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவர் பேசிய பேச்சு சர்ச்சையை உருவாக்கியது என்றாலும், அந்தளவுக்குத் தொண்டர்கள்மேல் பரிவுடன் இருந்தார் மக்கள் திலகம்.

அதே மாநாட்டில் அவருக்கு வெள்ளிச் செங்கோலை வழங்கியதும்கூட கழகத்தின் முன்னணி தொண்டர் ஒருவர்தான்.

இந்தளவுக்கு தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை.

09.02.2021 11 : 10 A.M

Comments (0)
Add Comment