வழக்கமான கமர்ஷியல் படத்தில் இரண்டு ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருந்தால் என்னென்ன அம்சங்களை எல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ. அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா, பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’.
டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் நேரெதிராக முட்டிக்கொள்வார்கள் அல்லது ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு திரிவார்கள். ஒன்றாக கைகோர்த்து திரியும் இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் அடிக்கடி முரண்படுவதுதான் இப்படத்தின் கதை.
நட்புக்களம்!
அசோக்கும் (ஜீவா) ஆனந்தும் (அருள்நிதி) ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத நண்பர்கள். சிறுவயது முதலே நட்புடன் பிணைந்திருக்கும் இருவரும் நிதி நிறுவனம் நடத்தும் அப்பச்சியிடம் (ராதாரவி) வேலை செய்கின்றனர்.
தனக்காகக் களத்தில் இறங்கி பிரச்சனையைச் சமாளிக்கும் ஆனந்தை ஒரு கெட்டவனாக சித்தரித்து கிண்டலடிப்பது அசோக்கின் வழக்கம். ஒருமுறை அவ்வாறு கேலி செய்ய, அதன் விளைவு ஆனந்தின் மாமா வீட்டில் எதிரொலிக்கிறது.
தன்னால் நின்றுபோன திருமண பேச்சை சரி செய்ய முயல்கிறார் அசோக். அதற்காக காவ்யாவை ஆனந்த் காதலிப்பதாக ஒரு பொய்யை அவிழ்த்து விடுகிறார்.
அதை நம்பும் காவ்யா, திருமண மண்டபத்தில் இருந்து ஆனந்தை தேடி வருகிறார். அதற்கு, அசோக் உதவுகிறார். ஆனால், காவ்யாவை திருமணம் செய்ய ஆனந்த் மறுக்கிறார்.
அதே நேரத்தில், அசோக் குடும்பத்தினருக்குச் சொந்தமான பூர்வீக வீடு ஏலத்துக்குப் போகிறது. பணத்துக்கு ஏற்பாடு செய்தும், வீடு வேறொருவர் கைக்குச் சென்றதால் அசோக்கின் தந்தை (இளவரசு) கோபமடைகிறார்.
அசோக், ஆனந்த் இருவரது வீட்டாரும் கோபத்தில் இருந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுப்பதில்லை. அதையும் மீறி இருவரும் நேரெதிராக நிற்கும் சூழல் திடீரென்று உருவாகிறது.
அதனை இருவரும் சமாளிக்கின்றனர் என்பதைச் சொல்கிறது மீதிக்கதை.
ஆனந்த் ஏன் காவ்யாவை திருமணம் செய்ய மறுத்தார்? அசோக்கின் பூர்வீக வீடு மீண்டும் கிடைத்ததா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு வழக்கமான ‘கமர்ஷியல் சினிமா’ பாணியில் பதில் தருகிறார் இயக்குனர் நா.ராஜசேகர்.
புதுமை கிடையாது!
ஜீவா, அருள்நிதி இருவரும் நண்பர்களாக நடித்தாலும், பெரும்பாலான பிரேம்களை அருள்நிதியே ஆக்கிரமிக்கிறார். அதற்குச் சேர்த்துவைத்து, ஜீவா ‘ஸ்கோர்’ செய்யும் காட்சிகளை ஆங்காங்கே அமைத்திருக்கிறார்.
சீரியசான முகத்துடன் அருள்நிதி திரிய, அதற்கு நேரெதிராக சிரித்த முகமாக உலவுகிறார் ஜீவா. அதற்கான காரணத்தை திரைக்கதையில் சொல்லியிருப்பது அசத்தல்.
மஞ்சிமாவை விட பிரியாபவானி சங்கருக்கு தியேட்டரில் அதிக கைத்தட்டல்கள் கிடைக்கின்றன. மஞ்சிமா தொடர்ந்து நடிப்பது மட்டுமே இதற்கொரு தீர்வை அளிக்கும்.
இளவரசு, ஸ்ரீரஞ்சனி, நரேன், ரேணுகா, வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
ரோபோசங்கர், பால சரவணனுடன் இணைந்து அப்பச்சியாக வரும் ராதாரவியும் காமெடி செய்கிறார். ‘கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்’ என்று ரோபோசங்கர் கிண்டலடிக்கும் காட்சி அவற்றுள் ஒன்று.
ஆரம்ப காட்சியில் மறைந்த கலைஞர் தவசி வந்து போவது, படம் தயாராகி நீண்டநாளானதை மறைக்காமல் சொல்கிறது.
படத்தின் பெரிய பலம் அசோக்.ஆர் தந்துள்ள வசனங்கள். மதமாற்றம் செய்ய விரும்பும் காதல் ஜோடி பேசுவது போல அமைந்துள்ள வசனம், தியேட்டரில் கைத்தட்டலை உருவாக்குகிறது.
யுவன் இசையில் பாடல்கள் தனித்து தெரியவில்லை என்றாலும், சீட்டை விட்டு எழவிடாமல் செய்கிறது. அதே நேரத்தில், நகைச்சுவை காட்சிகளில் பின்னணி இசை மூலமாக உற்சாகமூட்டுகிறார் யுவன்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லான ஒரு சிறுநகர உலகைக் கண் முன்னே காட்டுகிறது. அதற்கேற்றவாறு, கலையமைப்பை தந்திருக்கிறார் எம்.ஜி.முருகன்.
தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு, எந்தவிதக் குழப்பமும் இன்றி ஒரு கமர்ஷியல் படைப்பை முன்வைக்கிறது.
இரண்டு ஹீரோக்களுக்கும் சரிசமமான காட்சிகள் தருவதைவிட, இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் இருப்பதாக ரசிகர்களை உணரவைப்பது தனிக்கலை. இயக்குனர் அந்த விஷயத்தை சரியாகக் கையாண்டிருக்கிறார்.
90களில் வெளியான டபுள் ஹீரோ திரைப்படங்களை நினைவூட்டுகிறது. எந்தக் காட்சியும் புதுமையாகத் தெரியாவிட்டாலும், அலுப்பை உண்டாக்கவில்லை.
பழைய பீரோவை வாங்க மாட்டேன் என்று ரேணுகா மறுக்கும் காட்சியை, பிற்பாதியில் அருள்நிதியின் காதலோடு தொடர்புபடுத்திய விதத்தில் ஈர்க்கிறது திரைக்கதை.
படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் கபடி காட்சி உற்சாகத்தை மேலும் கூட்டுகிறது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே யதார்த்தம் துறந்து செயற்கையாக தென்படுகிறது.
இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள், கொஞ்சம் பாட்டு கொஞ்சம் பைட்டு, ஆங்காங்கே காமெடி, இடையிடையே பாசத்தையும் நட்பையும் வற்புறுத்தும் காட்சிகள் என்று கலந்து கட்டி அடிக்கிறது ’களத்தில் சந்திப்போம்’. மசாலா சினிமாவுக்கான லாஜிக் மீறல் பெரிய விஷயமில்லை என்று கொண்டால், எல்லா அம்சத்திலும் சராசரியைத் தாண்டி நிற்கிறது இதன் உள்ளடக்கம்.
களம் புதிததல்ல என்றாலும், களமாடிய உத்வேகத்தை தந்ததற்காக இயக்குனர் ராஜசேகர் குழுவினரைப் பாராட்டலாம்!
-உதய் பாடகலிங்கம்
08.02.2021 09 : 50 A.M