காமெடி சீன்கள் எல்லாம் பிரமாதமா இருக்கு!

ஒசாமஅசா தொடர்; 19   எழுத்தும், தொகுப்பும்; மணா

“நான் பார்த்தவரையில் சினிமா உலகில் முக்தா சீனிவாசனையும், அவருடைய சகோதரர் முக்தா பிலிம்ஸ் ராமசாமியையும் அபூர்வ சகோதரர்கள் என்று சொல்வேன்… அப்படி ஒரு ஒற்றுமை அவர்களிடம்.

ஒரு படத்தின் தயாரிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் முக்தா ராமசாமி கவனித்துக் கொள்வார். படத்திற்காக கதையைத் தேர்வு செய்வது, அதற்கான திரைக்கதை அமைப்பது, நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வது எல்லாவற்றையும் முக்தா சீனிவாசன் பார்த்துக்கொள்வார்.

நடிகர்கள், இயக்குநர்களிடம் சம்பள விஷயங்களை மிகவும் கறாராகப் பேசுவார் ராமசாமி. பேசின பணத்தை மிகச்சரியாக கொடுத்து விடுவார். அதேசமயம் சிக்கனத்தையும் கடைபிடிப்பார்.

ஷூட்டிங் நடக்கும் போது நானும், நாகேஷும் அவர்கள் இரண்டு பேரையும் அப்படிக் கிண்டல் பண்ணுவோம். அவர்களையும் வைத்துக் கொண்டு சகோதரர்களைப் போல நடித்துக் காட்டுவோம்.

ஷூட்டிங்கின்போது மாலை வேளையில் டிபன் கொடுப்பார்கள். எல்லோரும் வடை, போண்டா, தோசை இப்படி நிறையக் கேட்டுவிடக் கூடாது என்பதை கிண்டல் பண்ணிக் காட்டுவோம்.

“இன்னொரு போண்டா ஆர்டர் பண்ணலாம்டா” – இப்படி நான் முக்தா சீனிவாசனைப் போல பேசுவேன்.

“அப்பாடா… வயிறு ரொம்பிப் போயிருச்சு.. இதுக்குமேல மனுஷனால சாப்பிட முடியுமா” இனிமேல் சாப்பிடவே முடியாது. எங்கேடா வாங்கினே இந்த போண்டாவை? ஒரு போண்டாவே ரொம்பவும் அதிகம்டா!” – இப்படி நாகேஷ் ராமசாமியைப் போல நடித்துக் காட்டுவான்.

முக்தா சகோதரர்கள் இருவரும் சாப்பாட்டில் காட்டுகிற சிக்கனத்தை இப்படி கேலி பண்ணுவோம். நாங்கள் கிண்டல் பண்ணுவதை முக்தா சகோதரர்கள் இருவருமே மௌனமாக ரசிப்பார்கள். அதற்காக தாங்கள் இயங்கும் விதத்தை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் எதுவுமே வீணாவதைத் தவிர்ப்பார்கள்.

முக்தா சீனிவாசனுக்குத் தன்னுடைய அண்ணன் ராமசாமி மீது அளவு கடந்த மரியாதை. ராமசாமி சினிமா செட்டுக்குள்ளேயே வரமாட்டார். புரொடக்சன் கம்பெனியை அவ்வளவு அருமையாக கவனிப்பது தான் அவருடைய வேலை.

காமெடியாக ஒரு படம் எடுப்பது பற்றி முக்தா பிலிம்ஸில் யோசித்துக் கொண்டிருந்தபோது டாக்டர் ஜெகதீசன் என்ற என்னுடைய நண்பர் என்னுடைய பெயரை அவர்களிடம் சொல்லி இருக்கிறார்.

‘தேன்மழை’ படம் எடுக்க முடிவு செய்திருந்தார்கள். அதில் திரைக்கதை, வசனத்தை நான் எழுதி நடிக்கவும் செய்தேன். நான், நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன் என்று எல்லோரும் சேர்ந்து நடித்தோம்.

மந்தைவெளியில் இருந்த முக்தா பிலிம்ஸ் அலுவலகத்தில் உட்கார்ந்து நானும் நாகேஷும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளுக்கான வசனத்தை முதலில் எழுதி விட்டேன். கதையோ சீரியசாக இருந்தது. அதில் ஹீரோவாக நடித்த ஜெமினியின் கால்ஷீட் உடனே கிடைக்காததால் நானும் நாகேஷும் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளை முதலில் எடுத்து விடுவது என்று முடிவானது.

நானும் நாகேஷும் சேர்ந்து நடித்த காட்சிகளை முதல் மூன்று நாட்களில் ஷூட்டிங் சமயத்தில் பார்த்தவர்கள் செட்டிலேயே ரொம்பவும் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடனே இயக்குனரான முக்தா சீனிவாசன் என்னிடம் “காமெடி சீன்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. செட்டிலேயே இந்த அளவுக்கு ரசிக்கிறாங்க. எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. பேசாம முழுக் கதையையும் காமெடியா மாத்திடுறியா?” என்று கேட்டார்.

நான் “எதற்கும் ஜெமினியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, மாற்றத்தைச் செய்து விடலாம்” என்று சொன்னேன். ஜெமினியிடம் சீனிவாசன் போய் கேட்டதற்கு “தாராளமா காமெடியா மாத்துங்க. நல்லா வருதுன்னா சோவை  மாத்தி எழுதச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டார்.

சற்று இடைவெளிவிட்டு படத்தின் திரைக்கதையையே தலைகீழாக மாற்றி விட்டோம். சீரியஸ் கதையில் காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. காமெடி வசனங்களை அதில் ஷார்ப்பாக எழுதி இருப்பேன்.

நாகேஷிடமும் மனோரமாவிடம் ஒரு ஸ்கிரிப்டை கொடுத்துவிட்டால் போதும். அதில் கூடுதல் 50% சேர்ந்த மாதிரி நடித்துப் பரிமளிக்க வைத்து விடுவார்கள். ‘தேன்மழை’ படத்திலும் அதைப் பார்க்கலாம். அப்படிக் கதையோடு இணைந்து இருந்தது காமெடி.

திரைக்கதை சீனிவாசனுக்கு கைவந்த கலை என்பதால் திரைக்கதை மாற்றத்தை எல்லாம் அவருடைய மேற்பார்வையில்தான் பண்ணினோம். அந்த மாற்றத்தில் ஜெமினி, கே.ஆர்.விஜயா எல்லோருக்கும் திருப்தி. தேன்மழை சூட்டிங் முடிந்து படம் வெளிவந்து பெரிய ஹிட்.

அடுத்தும் காமெடி இணைந்த கதையாக பண்ணலாம் என்று சீனிவாசன் முடிவெடுத்து தயாரித்த படம் ‘நினைவில் நின்றவள்’. அதிலும் திரைக்கதை, வசனம் எழுதினேன். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா உடன் நானும் நாகேஷும் சேர்ந்து நடித்தோம். எங்கள் இருவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

அதற்கு அடுத்து ஒரு கதையை வாங்கி என்னிடம் கொடுத்தார் சீனிவாசன்.. காமெடிக்கு வாய்ப்பு இல்லாத படி இருந்தது கதை. திருப்பதிக்கு பட பூஜைக்குக் கிளம்புவதற்கு முன்னால் படத்திற்கு ஒரு டைட்டிலை எழுதிக் கொடு என்று கேட்டார் சீனிவாசன். நான் ஒரு காகிதத்தில் ‘பொம்மலாட்டம்’ என்று எழுதிக் கொடுத்தேன். பெயரை முதலில் வைத்து விட்டு பிறகு கதையை ரெடி பண்ணி படம் வெளிவந்து அதுவும் ஹிட்டானது.

அதற்குப் பிறகு ‘ஆயிரம் பொய்’ என்று ஒரு படம். வேணு செட்டியார் என்பவர் என்னுடைய டைரக்ஷனில் படத்தைத் தயாரிக்கிறேன் என்று ஆரம்பித்தார். இரண்டு நாட்கள் கூட நகராமல் நின்றுவிட்டது படம். எனக்கு அதில் வருத்தம். முக்தா சகோதரர்களிடம் பேசினேன். “படம் நின்னு போச்சு. நீங்க ஏதாவது பண்ணினா அவர் பிழைச்சுக்குவார்” என்று சொன்னேன். உடனே சகோதரர்கள் இருவரும் ஒரு கண்டிஷன் போட்டார்கள்.

“படத்தில் ஏதாவது துண்டு விழுந்தா முதலில் உன் ஸ்கிரிப்டுக்கான சம்பளம் கட்டாகிவிடும். இரண்டாவதா மேலும் துண்டு விழுந்தா உன் நடிப்புக்கான சம்பளம் கட். மூன்றாவதாக எல்லாம் பண்ணியும் அதையும் மீறி படத்தில் துண்டு விழுந்தா நாங்க அந்த நஷ்டத்தில் பங்கெடுப்போம்! இதுக்கு நீ தயாரா? சொல்லு” என்று சொன்னார்கள். நான் சம்மதித்தேன்.

படமெடுத்து வெளிவந்து வேணு செட்டியாருக்கும் லாபம் கிடைத்தது. முக்தா ஃபிலிம்ஸ்க்கும் லாபம் கிடைத்தது.

அவர்களுடன் எந்த அளவுக்கு நெருக்கம் உருவாகி இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்..

எமர்ஜென்சி காலத்தில் நான் கைதாகப் போவதாக ஒரு வதந்தி அப்போது பரவியிருந்தது. அந்தச் சமயத்தில் நான் பம்பாயில் ஒரு நாடகத்தை நடித்துவிட்டு ரயிலில் சென்னைக்குத் திரும்பினேன். முக்தா சகோதரர்கள் இருவரும் இந்த வதந்தியை கேள்விப்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள்.

நான் இறங்கியதும் தகவலைச் சொல்லிவிட்டு “உன் வீட்டில் என்ன ஏற்பாடு பண்ணி இருக்கியோ தெரியலை. அப்படி உன்னைக் கைது பண்ணினா உன் வீட்டுக்கு என்ன செலவாகிறதோ அதை நாங்கள் கொடுக்கிறோம்” என்று சொன்னார்கள். நான் மறுத்துச் சொன்னேன். அந்த அளவுக்கு அவர்களுக்கு என் மீது அக்கறை இருந்தது. மற்றவர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் உடனே தயக்கமில்லாமல் உதவும் பண்பாடும் இருந்தது.

வார்த்தை நாணயத்தை இறுதிவரை கடைப்பிடித்தவர்கள் இரு சகோதரர்களும். சிவாஜியை வைத்து நிறையப் படங்களைத் தயாரித்தார்கள். மூத்தவரான ராமசாமி தன்னுடைய வாழ்க்கையை ஒரு டைபிஸ்ட்டாக ஆரம்பித்தார். தம்பியான சீனிவாசன் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் ஒரு கிளாப் பாயாக தன்னுடைய வாழ்வைத் துவக்கினார்.

மிகச் சாதாரண நிலையில் இருந்து தங்களுடைய உழைப்பினாலும், தாங்கள் சார்ந்திருந்த தொழில் மீது வைத்திருந்த ஈடுபாட்டினாலும் முன்னுக்கு வந்தவர்கள் அவர்கள். பல படங்களை இயக்கிய சீனிவாசனுக்குப் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. சினிமா நுணுக்கங்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி.

எஸ்.பாலசந்தர், டி.ஆர்.ரகுநாத் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி இருக்கிறார் சீனிவாசன். பிறகு 60 படங்களை அவரே இயக்கியிருக்கிறார். முதலில் கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சீனிவாசன், பிறகு மூப்பனாருடன் இணைந்து காங்கிரஸிலும் இருந்தார். எப்போதும் கதர்தான் அணிவார். பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

எங்க குடும்பத்தில் எங்க அப்பா, என் தம்பி உட்பட பலருடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். நான் பல நாடகங்களை முக்தா பிலிம்ஸின் ஆபீஸில் உட்கார்ந்து எழுதியிருக்கிறேன். பிரபலமான ‘முகமது பின் துக்ளக்’ நாடகமும் அங்கு எழுதப்பட்டதுதான். மனம் ஒன்றி எழுதுவதற்கான அமைதி அங்கு கிடைத்தது.

40 ஆண்டுகளுக்கு மேல் என்னுடன் நெருங்கிப் பழகிய அக்கறை காட்டியிருக்கிற முக்தா சீனிவாசன் போன்றவர்களின் நட்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.”

(தொடரும்…)

08.02.2021    01 : 59 P.M

Comments (0)
Add Comment