பயணம் ஒரு அற்புதம் என்று சொல்லும் ‘ட்ராவலோக்’ படங்களைப் போலவே, முன்பின் தெரியாத இடங்களில் ஏற்படும் சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களும் உண்டு. அந்த வரிசையில், அடர்ந்த காட்டுக்குள் காணாமல்போகும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது ‘ட்ரிப்’.
யோகிபாபு, கருணாகரன், சுனைனா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடன் ’கில்லி’ ஜெனிஃபர், பிரவீன் குமார், விஜே சித்து, சத்யா, அதுல்யா சந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
காணாமல்போகும் மனிதர்கள்!
அந்தமான் நிகோபர் தீவுகளில் ஒன்றான சென்டினல் (?!) தீவில் வசிக்கும் பழங்குடியின மக்களில் சிலர், உணவு தேட முடியாத சூழலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் கொன்று தின்னும் அவர்களது வாழ்க்கை, உயிர்களை விழுங்கும் தாவரத்தினால் முடிவுக்கு வருகிறது.
இந்த முன்கதைக்குப் பின்னர், ‘ட்ரிப்’ கதை லிடி (சுனைனா) குழுவினரின் கொடைக்கானல் பயணத்துக்குத் தாவுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குச் செல்லும் சிலர் தொடர்ச்சியாகக் காணாமல்போகின்றனர். அதனைக் கண்டறியத் துடிக்கும் நண்பன் விக்ரமுக்கு (பிரவீன் குமார்) உதவி செய்வதற்காக, லிடியும் அவருடன் வந்தவர்களும் கொடைக்கானல் செல்வதற்குப் பதிலாக அப்பகுதிக்குள் நுழைகின்றனர்.
அப்போது, அழகன் (யோகிபாபு) மற்றும் அமுதன் (கருணாகரன்) இருவரையும் காண்கின்றனர்.
அவர்கள் உடலில் படிந்திருக்கும் சிவப்பு வண்ணம் கொலையாளிகள் எனும் எண்ணத்தை உருவாக்குகிறது. இருவரையும் கண்டு லிடி குழுவினர் மிரண்டு ஓடுகின்றனர்.
ஒருகட்டத்தில் தங்களைக் கண்டு மயங்கிவிழும் லிடியை அழகனும் அமுதனும் காப்பாற்றுகின்றனர். ஆனால், விக்ரமும் மற்றவர்களும் லிடியை அவர்கள் கடத்திச் சென்றதாக எண்ணுகின்றனர்.
காட்டுக்குள் அழகனும் அமுதனும் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். அதன்பின்னர், அக்குழுவில் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகின்றனர்.
அதற்கான காரணத்தை அறியும்போது, புதிதாக ஒரு பெண் (அதுல்யா சந்திரா) அவர்களுக்கு அறிமுகமாகிறார். அவர் மூலமாக, அக்காட்டுக்குள் நுழைபவர்களைக் கொல்வது யார் என்று தெரிய வருகிறது.
அதற்குப் பிறகாவது விக்ரம், லிடி, அழகன், அமுதன் உள்ளிட்டவர்கள் உயிர் பிழைத்தார்களா என்பதைச் சொல்கிறது ‘ட்ரிப்’.
திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டு அல்லாடும் வலியை உணர வைப்பதற்குப் பதிலாக, ஆங்காங்கே சிரிப்பை தூறலாகத் தூவி புன்னகைக்க வைத்திருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.
திசைமாறிய பயணம்!
அழிந்துபோன பழங்குடி மக்களுக்கும், காட்டுக்குள் மனிதர்கள் காணாமல்போவதற்கான காரணத்துக்குமான தொடர்புதான் இக்கதையின் முதன்மையான முடிச்சு. ஆனால், அதனை விளக்கிய விதம் திரைக்கதையில் அழுத்தமாக இல்லை.
லிடியும் அவரது நண்பர்களும் ‘ஜஸ்ட் லைக் தட்’ வேறொரு காட்டுப்பாதையில் பயணிப்பதும், அங்கு நடக்கும் கொடுமைகளை வெளியுலகத்துக்குச் சொல்ல முடியாமல் தவிப்பதும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.
‘பிளாக் ஹ்யூமர்’ எனப்படும் இருண்மை நிறைந்த நகைச்சுவையை வெறுமனே உருவக் கேலி, கிண்டல் மூலமாக உருவாக்க முடியாது. சிக்கலான சூழலில் மாட்டிக்கொள்ளும்போது உருவாகும் அப்பாவித்தனமும் அசட்டுத்தனமும்தான் அதனை சரியாக வெளிக்காட்டும்.
ஆனால், இக்கதையில் யோகிபாபுவும் கருணாகரனும் கொலைகள் நிகழும்போது மாறி மாறி ‘கவுண்டர்’ கொடுத்து கலாய்க்கின்றனர். அது, கதையில் ஒருவர் உயிரிழந்ததும் ஏற்பட வேண்டிய பதைபதைப்பை உருவாக்கத் தவறுகிறது.
சுடப்பட்ட வன அலுவலர் (மொட்டை ராஜேந்திரன்) என்னவானார்? காட்டுக்குள் வேறு கொலையாளிகள் இருக்கின்றனரா? கொலையாளிகளாக அந்த நபர்கள் மாறியதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில் இல்லை.
சுனைனாவும் அவருடன் வருபவர்களும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் அழகாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. அதில் இன்னும் கொஞ்சம் உற்சாகத்தைக் கலந்திருந்தால், பிற்பாதியில் வரும் திகில் காட்சிகள் சிறப்பாக இருந்திருக்கும்.
திரைக்கதையில் சுனைனாவுக்கு தனியாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், யோகிபாபு மற்றும் கருணாகரன் கிண்டலடிப்பதற்குத் தோதாக ஆங்காங்கே திரைக்கதை மவுனமாக இருக்கிறது.
சித்துகுமாரின் பாடல்கள் உடனடியாக மனதில் ஒட்டாவிட்டாலும், பின்னணி இசை திகில் கூட்டுகிறது. உதயசங்கர் ஜியின் ஒளிப்பதிவு, நாமும் காட்டுக்குள் பயணிப்பது போன்ற உணர்வை ஊட்டுகிறது.
தீபக் துவாரகநாத்தின் ஒளிப்பதிவு அடுத்தடுத்த காட்சி நோக்கிய எதிர்பார்ப்பை தக்க வைக்கிறது. பாக்யராஜின் கலைத்திறன், காட்டுக்குள் போடப்பட்ட வீட்டின் உட்பகுதியைக் காட்டிய விதத்தில் ‘ஓகே’ சொல்ல வைக்கிறது.
பேய் படங்களில் காமெடி கலந்தது போல, ஒரு ட்ராகுலா கதையிலோ அல்லது மனிதர்களைக் கொடூரமாகக் கொல்லும் ‘கேனிபல்’ கதையிலோ நகைச்சுவையை தூவினால் எப்படிருக்கும் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். அதற்காக யோகிபாபுவையும் கருணாகரனையும் முதன்மையாக உலவ விட்டிருக்கிறார்.
அதற்குப்பதிலாக, அவர்களை நடுநடுங்க வைத்து அதன் மூலமாக ‘பிளாக் ஹ்யூமர்’ உருவாக வழி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதனைச் செய்யாமல் விட்டதனால், ‘ஓ, கொலை நடந்துபோச்சா’ என்று யோகிபாபுவும் கருணாகரனும் வசனம் பேசும் உணர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
பெரிதாக போரடிக்காவிட்டாலும், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘ட்ரிப்’ கலகலப்பான திகில் பயணமாக இருந்திருக்கும்.
-உதய் பா
07.02.2021 09 : 50 A.M