இணையவழிக் கல்வி: ஆசிரியரும், மாணவரும்!

நலம் வாழ: தொடர்பகுதி 5

நாம் இப்போது கடைசியாகப் பார்க்கப் போவது முதன்மையான ஒரு விஷயம். அதாவது இணைய வழிக் கல்வியில் எது இருந்தால், இந்த முறையே ஒரு பிரச்சினையாக யாருக்கும் தோன்றாது? ஆசிரியருக்கும், மாணவருக்கும் புரிதல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தரப்பினருமே தங்களது பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றின் காரணங்களைப் பற்றியும் நன்கு ஆராய்ச்சி செய்து வைத்திருக்கின்றனர். இதில் பெரும்பாலும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், மனக்குறைகள், ஆத்திரங்கள் போன்றவை இருக்கின்றன. இவையெல்லாம் என்ன என்பது பற்றி தனித் தனியே பார்த்தோம். இந்தக் குறைகள் இணையத்திலிருந்து வருபவை அல்ல.

இணையம் என்பது புதிய களம். அவ்வளவுதான். பிரச்சினை அதில் அல்ல. அதைப் பயன்படுத்துபவர்களுக்கு இடையேதான். இதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தொழில் நுட்பம், அதைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்த ஏற்பாடு எல்லாமே ஆசிரியர் கற்பிக்கவும், மாணவர் கற்றுக்கொள்ளவும்தான்.

இந்த இரண்டும் எந்த விதச் சிக்கலும் இல்லாமல் நடந்துவிட்டால் எல்லாமே சரியாகும். பொதுவாகவே, மனித உறவுகள்தாம் எல்லா தொடர்பு வழிகளையும், செம்மைப்படுத்துகிறது அல்லது பிரச்சினைக்குக் காரணமாகிறது. முதலில் ஆசிரியர்களைப் பற்றிப் பார்ப்போம்.

மனத் தயாரிப்பு

எல்லாவற்றிற்கும் முதலாக, முதலில் உங்களது மனதை இணையக் கல்விக்குத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கப்போவது காமிரா, அதன் மூலமாக மாணவர்கள். இதுவரையில் பழக்கம் இல்லாத நிலை. மனதிற்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் நிலை.

நம்மை, மாணவர் தவிர எவ்வளவு பேர் பார்க்கிறார்கள், அவர்கள் நம்மைப் பற்றி, நாம் பேசும் முறையைப் பற்றி, பாடம் நடத்தும் விதத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பே மனதில் எரிச்சலையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும். இப்படி இருக்கும்போது உங்களது இயல்பான திறன் வெளிப்படாது.

இயல்பிலிருந்து மாறாதீர்கள்

வகுப்பில் எப்படி பேசுவீர்களோ, அப்படியே பேசுவது, விளக்கங்கள் தருவது என்று உங்களது இயல்பிலிருந்து மாறாதீர்கள். நாம் காமிராவில் தெரிகிறோம் என்று நினைக்க ஆரம்பித்தால் நம்மை அறியாமலே பாவனைகள் வந்து விடும்.

மேலும், இந்த பாவனை ‘வரவழைக்கப்பட்ட பாவனை’ என்பதால் நீங்கள் அதில் இயல்பாக இருக்க முடியாது. உங்களது வழக்கமான திறனுடன் பாடம் நடத்த முடியாது. அதனால், உங்களது வகுப்பறை முறைகளை விட்டுவிடாதீர்கள். அது மிகுந்த பலனைத் தரும்.

ஆசிரியர் மாணவர் உறவுகளிடையே இருப்பது பரஸ்பர பேச்சு வழித் தொடர்புதான். இருவருக்குமே மற்றவர் மேல் குறை கண்டுபிடிப்பதால் லாபம் இல்லை. இதற்கு பதிலாக பரஸ்பரம் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருந்தால் இரு தரப்பினருக்குமே லாபம். முதலில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆசிரியர்கள் எப்படி தீர்வளிக்கலாம் என்று பார்ப்போம்.

கேள்விபதில்

முதல் பிரச்சினை, புரியவில்லை என்ற புகார் அல்லது குறைபாடு. இதை ஆசிரியர்கள் நினைத்தால் சுலபமாகத் தீர்க்க முடியும். இணையத்தில் பாடம் நடத்தும்போது, கடைசி ஐந்து நிமிடங்கள் கேள்விகள் கேட்க என்று ஒதுக்கலாம்.

அதில் உண்மையான சந்தேகங்கள், அதிலும் எளிதில் தீர்க்கக் கூடிய சந்தேகங்கள் என்று பிரிக்கலாம். எளிமையான சந்தேகங்களுக்கு உடனடி பதில் அல்லது தீர்வு சொல்லிவிட முடியும்.

பதிலளிக்க நேரமாகும் என்கிற நிலை ஏற்பட்டால், உங்களது இ-மெயில் முகவரியைத் தயாராக வைத்திருந்து அதற்கு எழுத சொல்லலாம். உங்களால் அதற்கு எவ்வளவு நாட்களில் பதிலளிக்க முடியும் என்பதைத் தெரிவித்துவிடுங்கள். இல்லையானால் வாட்ஸப் குழு தொடங்கி அதில் சந்தேகங்களைப் பதிந்தால் அதற்கான விடைகள், தீர்வுகளைத் தெரியப்படுத்தலாம்.

தாமதம், கவனிப்பு இன்மை

அடுத்தது வகுப்பில் ஆர்வம் இல்லாதவர்களை என்ன செய்வது? இந்தப் பிரச்சினை நேரடியாக வகுப்புகள் நடத்தும்போதும் கட்டாயம் இருக்கும். அப்போது நீங்கள் உடனடியாகக் குறிப்பிட்டு எழுப்பி கவனிக்க செய்வீர்கள் அல்லது விருப்பம் இல்லையானால் வெளியே போகச் சொல்வீர்கள். ஆனால் அது இரண்டும் இந்தச் சமயத்தில் நடக்காது.

அதனால் ஆரம்பத்திலேயே தாமதமாக வருபவர்கள், கவனிக்காதவர்கள் ஆகியோர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். ஏனென்றால் தாமதம், கவனிக்காமை ஆகியவற்றுக்கு ஒரே காரணமாக, தொடர்பு இல்லாமை அல்லது சரியாக தொடர்புப்படுத்த முடியாமை என்பவைகளையே காரணமாக சொல்வார்கள். இதைப் பற்றி உங்களால் எதுவும் செய்ய முடியாது.

ஆரம்பத்திலேயே, தாமதமாக வந்தவர்களுக்கு கடைசி சில நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று சொல்லி, அதே போல சுருக்கமாகச் சொல்லிவிடுங்கள். சந்தேகங்களை அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

இணையதளத்தில் பாடம் நடத்த முடியாத அளவுக்குக் குறுக்கீடுகள், கூச்சல்கள் இருப்பது அரிதுதான். அதனால் தயார் செய்த உங்களது உரையை முடித்துவிடுவதில் கவனம் செலுத்துங்கள். அதன்பின் அவர்களது சந்தேகங்களுக்குப் பதில் சொல்லுங்கள் அல்லது இ மெயில் மூலமாக, வாட்ஸப் போன்றவற்றின் மூலம் தொடர்புகொள்ளலாம்.

இரண்டாவது அவர்களது பங்கேற்பு இல்லாத நிலை, உடை, நடத்தைகள் போன்றவை எரிச்சல் தரலாம். அதைப்பற்றி ஆரம்பத்திலேயே சொல்லிவிடுங்கள். அதற்கும் மீறி விட்டேற்றியாக இருந்தால், கண்டுகொள்ளாதீர்கள் ஏனெனில் நம்மால் எதுவும் செய்ய முடியாதபோது அதைப் பற்றிக் குறை சொல்லி என்ன பயன்.

அது போல, மற்றவர்களின் கவனத்தை எதிர்மறையாக ஈர்க்க முயற்சிக்கும் மாணவ / மாணவியைக் குறித்து வைத்துக்கொண்டு, நிர்வாகம் மூலமாகப் பெற்றோர்களிடத்தில் தொடர்புகொள்ளச் செய்யலாம். இதற்கு மேல் நீங்கள் எதுவும் செய்ய முடியாது.

மாணவர்களின் பொறுப்பு

மாணவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதுவும் இணைய வழிக் கல்வியில் கூடுதல் பொறுப்பு. முதலாவது, ஆழ்ந்து கவனிப்பது. வகுப்பறையைக் காட்டிலும் கூடுதலாகக் கவனம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குறைந்த பட்சப் புரிதலாவது இருக்கும்.

வகுப்பிற்கு தாமதமாக பதிவிடுவது, கவனிக்காமல் சும்மா பார்த்துக்கொண்டிருப்பது, வருகையை மட்டும் பதிவு செய்துவிட்டுச் சட்டென்று ‘காணாமல்’ போவது. கேட்டால் தொடர்புப் பிரச்சினை என்று சொல்வது, சத்தத்தைக் குறைப்பது அல்லது நீக்குவது, போன்றவற்றைச் செய்வது மிக சுலபம். ஆனால் உண்மையான பாதிப்பு உங்களுக்குதான்.

இது போன்ற நடவடிக்கைகள் எதையும் சாதிக்க உதவாது, பாதிப்பு மட்டுமே மிஞ்சும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள். பாடம் எடுக்கப்படும்போது மறக்காமல், குறிப்புகள் எடுத்துக்கொள்ளுங்கள், கூடவே சந்தேகங்களையும் குறித்துக் கொள்ளுங்கள். அவற்றை மறக்காமல் இ-மெயில் மூலமாகவோ, அல்லது உங்களது ஆசிரியர் சொல்லும் வழியிலோ தீர்த்துக்கொள்ளுங்கள்.

ஆசிரியர்கள் பாடங்களை, புதிய முறையில் அதாவது இணைய தளத்தில் நடத்துவது அவர்களுக்குப் புதியது என்பதை மறக்காதீர்கள். அதனால் அப்படி வகுப்புகள் எடுக்கப்படும்போது, பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது உங்களுக்கு மட்டுமே லாபமான விஷயம் என்பதை மறக்காதீர்கள்.

கல்வி கற்பிப்பதும், கற்பதும் ஒரே நோக்கத்திற்காகத்தான். மாணவர்களுக்கு இத்தகைய சூழ்நிலையில் ஒரு வருடம் வீணாக்கக் கூடாது, கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக மட்டும்தான். மாணவர்களுக்காக, அரசாங்கம், கல்வி நிலையங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து உதவ முடிவெடுத்திருக்கிறார்கள்.

மாணவர்களின் எதிர்காலத்தில் இந்தக் கொரோனா நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மிகப்பல சிரமங்களிடையே இந்த முடிவைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த சமுதாயமே, மாணவர்களுக்காக ஒன்றிணைந்து செயல்படும்போது, அதற்கு மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? அதை முழுமையாக, பலனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

செய்வீர்களா?

**

கட்டுரையாசிரியர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர் மனவள ஆலோசகராகப் பணிபுரிகிறார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவரைத் தொடர்புகொள்ள மின்னஞ்சல்: rawindran@gmail.com, செல்: 98404 14389

05.02.2021 10 : 53 A.M

Comments (0)
Add Comment