நண்பர்களும் நல்லாசிரியர்களே!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வெ.இறையன்புவின் பள்ளிப் பிராயம்.

ஓர் ஆசிரியர் எல்லா நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கின்ற நிலவைப்போல, அவருடைய மாணவர்களிடம் அமைதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.  அவரது செயல்பாடுகள்  ஆழ்மனத்தில் சவ்வூடு பரவுவதைப்போல நுழைந்து மாணவனுக்குத் தெரியாமல் வெளிப்படுகின்றன.

முறையாகப் படித்தப் படிப்பிலும், முறைசாராமல் நான் கற்ற கல்வியிலும் என்னைச் செதுக்கியவர்கள் பலர். கற்றுக்கொடுக்கிற சுகத்துக்காகவும், வழிநடத்துகிற பண்புக்காகவுமே அவர்கள், என் முற்றிய சுண்டுவிரலை மென்மையாகப் பிடித்து எழுதக் கற்றுத் தந்தனர்.

நான் ஷேக்ஸ்பியரையும், திருவள்ளுவரையும் ஒப்பிட்டு என் இரண்டாம் ஆய்வை மேற்கொண்டபோது, ஆய்வேட்டை வடிவமைக்க ஆலோசனை பெறும்பொருட்டு மூத்த பேராசிரியர் செல்லப்பன் அவர்களை அணுகினேன்.

அப்போது அவர் காட்டிய அக்கறை அலாதியானது. அவருடைய இருப்பிடம் முழுவதும் வழிந்தோடும் நூல்கள். அவருடைய வாசிப்பு ஆர்வம் பக்கங்களைப் பத்திகள் போலப் படித்துத்  தீர்க்கும் வேகம் கண்டு அசந்து போனேன். வாசிப்பதில் தணியாத தாகம் கொண்டவர்களே தலைசிறந்த ஆசான்கள்.

என் ஆய்வேடுகளை புத்தகமாக்க முயன்றபோது ஊன்றிப் படித்து உதவியவர் கே.எஸ்.சுப்பிரமணியன். இப்போது எழுபத்தைந்து அகவையைத் தாண்டியபோதும் எழுதுவதையும், வாசிப்பதையும், மொழியாக்கம் செய்வதையும் வேள்வியாகச் செய்துவரும் கர்மயோகி. அங்கீகாரத்திற்கு ஆசைப்படாமல் உழைப்பதே உன்னத பண்பு என்பதை அவரிடம் அவ்வப்போது ஒற்றிக் கொள்வதுண்டு.

என்னுடைய ஆய்வு வழிகாட்டிகளாக இருந்த பேராசிரியர் கார்த்திகேயனும், பேராசிரியர் நாகேஸ்வரராவும் காட்டிய ஆர்வம் நான் சற்று தொய்வு அடைந்திருந்தபோதும் துள்ளி எழ வைத்தன.  மதுரையில் பேராசிரியர் ஜெயராமன் ஆய்வு வினாத்தாளை நான் செம்மையாக வடிவமைக்க என்னைத் திரும்பத் திரும்ப உழைக்க வைத்த விதம் இப்போதும் நினைவுக்கு வருகிறது.

என் வாழ்வின் திருப்புமுனை கல்லூரிப் பருவம். கவிதையைப்போல பரந்து விரிந்த எங்கள் வேளாண் பல்கலைக் கழகத்தின் மரகதச் சோலைகளும், மரமல்லிகை மரங்களும், சரக்கொன்றை மலர்களும் எனக்குள் கவிதையை ஊற்றெடுக்க வைத்தன.

‘அண்ணா கலையரங்கம்’ இலக்கிய ரசனையை வளர்க்கும் நாற்றாங்காலாக இருந்தது. இப்போது எங்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் முனைவர் ராமசாமி, அப்போது எங்களுக்கு நுண்ணுயிரியல் வகுப்புகளையெடுப்பார். வகுப்பில் மாணவர்கள் எடுக்கும் குறிப்புகளோடு முடிந்துவிடுகிற தேர்வின் பரிணாமத்தை மாற்றியமைத்தார். எங்களை நிறைய நூல்கள் வாசிக்க வைத்துப் பிழிந்தெடுத்தார்.

வழிகிற வியர்வையைத் துடைத்துக்கொண்டு நாங்கள் எல்லைக் கோட்டை அடையும்போது அவர் கோப்பையோடு எங்களுக்கு முன்பே நின்றிருந்தார். பாடம் என்பது மனப்பாடத்தைத் தாண்டிய பயிற்சி. புரிதலில்லாத படிப்பும், கதவுகளில்லாத கட்டடமும் சமாதிக்குச் சமமானவை என்ற படிப்பினையை எங்களிடம் பதிய வைத்தவர். பூச்சியியல் என்பது நிறைய பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய படிப்பு.

புழுக்களைப் பிடித்துப் பட்டாம்பூச்சியாகும் வரை நாங்களும் தவம் இருக்க வேண்டும். எங்களை வயல்களிலும், விளக்குப் பொறிகளிலும் தேடவிட்டு அந்துப் பூச்சிகளின் இயல்புகளையும், பட்டாம்பூச்சிகளின் இறகுகளையும் அத்துபடியாக்கிய பேராசிரியர்கள் சாமியப்பன், குணதிலகராஜ், பழனிச்சாமி போன்றோரை இப்போது கோவைக்கும், மதுரைக்கும் செல்லும்போது பார்த்து மகிழ்கிறேன்.

எங்களுக்கு வீரபத்திரன் என்ற பேராசிரியர் மானாவாரி சாகுபடி பற்றிப் பாடம் எடுத்தார். அது அதிகம் நூல்களில்லாத பொருண்மை. அவர் கொடுத்த விளக்கங்களும், உதாரணங்களும் அத்தனை சிறப்பு. அவற்றை நான் குடிமைத் தேர்வுக்குக்கூடப் பயன்படுத்த முடிந்தது. இன்றும் அவர் கொடுத்த குறிப்புகளை கவனமாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

உழவியல் பாடத்தை நடத்திய பேராசிரியர் பஞ்சநாதன் இப்போது உயிருடனில்லை. அவருடைய வகுப்புகளும், ஆற்றொழுக்குப் போலப் பேசும் அவருடைய அறிவாற்றலும் அவ்வப்போது நெஞ்சில் நிழலாடுகின்றன.

எங்களுக்கு மூன்றாமாண்டு சொல்லிக்கொடுத்த சங்கரன் என்ற பேராசிரியர் நண்பனைப் போலப் பழகும் பண்பாளர். கனிவையும், கண்டிப்பையும் தக்க இடங்களில் பயன்படுத்துபவர்களே தக்கார். அது மயிரிழையின் மேல் நடப்பதைப்போல சிரமமானது. அதைச் செய்தவர் அவர்.

எங்களுக்கு கெம்புச்செட்டி என்ற பேராசிரியர் இருந்தார். ஜனரஞ்சகமானவர். மாணவர்களுடன் சேர்ந்து அவரும் நடனமாடுவார். சில மாணவர்களுக்குப் பணம் கட்டியும் உதவியவர். அவர்  இப்போது ஒரு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றுகிறார். அங்கு வாசித்த ஆண்டறிக்கையில் அவர் பெயரை உச்சரித்தபோதெல்லாம் பத்தாயிரம் பட்டாசாகக் கைத்தட்டல்கள் பறந்தன.  அன்புள்ள ஆசிரியர்களை அனைவரும் நேசிக்கின்றனர்.

பயிர் இனவிருத்தித் துறையில் பேராசிரியராக இருந்தவர் சுப்பாராமன்.  ரஷிய பொதுவுடைமைவாதிகளை நினைவூட்டும் முகமும், மீசையுமான அவர் சித்தாத்தங்களிலும் சிவப்புச் சிந்தனை கொண்டவர். என் இலக்கிய வாசிப்பை அகலப்படுத்த நவீன இலக்கியச் சாரங்களை அறிமுகப்படுத்தியவர்.

விரிவாக்கப் பிரிவில் எங்களுக்குப் பயிற்சி தந்த ராஜமாணிக்கம் என்ற பேராசிரியரும், ரங்கநாதன் என்ற பேராசிரியரும் இப்போதும் நினைவில் நிற்பவர்கள்.

எனக்கு மண்ணியல் பாடத்தை போதித்த முருகையா என்ற பேராசிரியரை அண்மையில் ஒரு நிகழ்வில் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பரிவும், புன்னகையும் அப்படியே இருந்தது!

நாங்கள் கல்லூரியில் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவியவர் மாணவர் ஆலோசகர் புருஷோத்தமன். அவரை நாங்கள் வீட்டிலும் சென்று அவ்வப்போது சந்திப்போம். அப்போதே குளிர்பானம்  கொடுத்து உபசரிப்பார். மதுரை வேளாண் கல்லூரி முதல்வராக இருந்தபோது என்னைப் பேசுவதற்குப் பலமுறை அழைத்தவர்.

இப்போதும் பெசன்ட் நகர் உணவு விடுதிகளில் அவருடைய புன்னகையோடு உரச நேர்கிறது. நான் சிலப்பதிகாரத்தைப் படிக்க விரும்பியபோது, தமிழறிஞர் சா.கு.கணபதி அவர்களை அணுகினேன். என் தாயாருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தவர். நிறைய தமிழ் நூல்களை எழுதியவர்.

கி.வா.ஜ. அவர்களுடைய சக மாணவர். என் பள்ளி தமிழாசிரியர் க.சாமிநாதன் அவர்களுடைய தகப்பனார். வஞ்சிக் காண்டத்தை எனக்கு எளிமையாகத் கற்றுத்தந்தவர். அவரை நான் அணுகியபோது, பழத்தட்டோடு சென்று வணங்கினேன்.

“செயற்கரிய செய்வார் பெரியர் – சிறியர்
செயற்கரிய செய்கலா தார்”

என்கிற குறள் சரியானதல்ல. திருவள்ளுவர் அப்படி எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. ‘சிறியர் செயற்கரிய செய்கலாதார்’ என்பது கூறியது கூறல் ஆகிவிடும். எனவே, அது ‘செயற்குரிய செய்கலாதார்’. சிறியோர் செய்ய வேண்டியதைக் கூடச் செய்ய திராணியின்றி  இருப்பார் என அவர் புதுவிளக்கங்கள் தருவார்.

‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்பதே சரி. “இதை வேறு யாரிடமும் சொல்ல நேர்ந்தால் நான் சொன்னதாகச் சொல்லி விளக்கு’ என்பார்.

“நீ நிச்சயம் குடிமைத் தேர்வில் வெற்றிபெறுவாய்” என நம்பிக்கையளித்து ஆசி வழங்கினார். நான் ஐ.ஏ.எஸ். ஆகும்போது, அவரிடம் ஆசிவாங்க உயிருடன் இல்லாமல் போனதை இன்றும் எண்ணி வருந்தினேன்.

பள்ளியில் என் கையெழுத்தைத் திருத்த உதவிய திருமலை, இன்பமணி என்ற அறிவியல் ஆசிரியர்களை இப்போது சேலம் சென்றாலும் சந்திக்க நேர்கிறது. குப்புசாமி என்கிற தமிழாசிரியர் தமிழோடு இயற்கையின் இனிமையைப் பற்றியும் புகட்டி மரங்களையும், மலர்களையும், மண்ணையும் நேசிக்கக் கற்றுத் தந்தவர்.

எங்கள் தாவரவியல் ஆசிரியர் வீரப்பன் மலர்களைப் பற்றி விளக்கும்போது காம்புத் தடியூன்றி வண்டுகளுக்காகக் காத்திருக்கும் பூக்களைப் புலன்விசாரணை செய்ய ஆரம்பித்தோம்.

சாந்தாபாய் டீச்சர் எலிகளின் மூளையைப் பற்றி அறுவை சோதனையில் கூறும்போது, அந்த மூளை அளவுக்காவது என் மூளை இருக்குமா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. இப்போது இருக்காது என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டது.

பள்ளியில் என் அம்மாவே எனக்கு வகுப்பாசிரியராகப் பாடம் நடத்தினார். வகுப்பில் “டீச்சர்” என்றுதான் அழைப்பேன். மகன் என்ற சலுகையை மறந்தும் நான் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, மற்றவர்களைக் காட்டிலும் என்னிடம் கண்டிப்பாக நடந்துகொள்வார். அந்த நேர்மையின் சாரமே இன்றும் என் நெஞ்சில் இழையோடுகிறது என எண்ணிக் கொள்வேன்.

ஆரம்பப் பள்ளியில் எங்களுக்குக் கற்றுத்தந்த சாவித்திரி டீச்சர் உயிருடன் இன்று இல்லை. அவர் மகன்களை அவ்வப்போது பார்த்து ஆறுதல் அடைகிறோம். கமலாட்சி டீச்சரைப் பார்க்கவும், வணங்கவும் முடிகிறது. என் எழுத்து எந்த இதழில் வந்தாலும் படித்து வாய்நிறைய வார்த்தைகளைப் பொழிந்து உற்சாகப்படுத்துபவர் அவர்.

மூன்றாம் வகுப்பில் ஜோதி டீச்சர் எங்களுக்கு ஆங்கில அட்சரங்களை அறிமுகப்படுத்தியவர். என் முதலாம் ஆண்டு கைப்பிடித்து எழுதக் கற்றுத்தந்தவர் சரஸ்வதி டீச்சர். மாணவர்களுக்கு அவர் புன்னகையுடன் புரியவைப்பவர்.

கணக்கை இட்லியோடும், தோசையோடும் உருவகப்படுத்தி எண்களின்மீது இணக்கம் ஏற்பட வைப்பவர். அவரைப் பற்றிப் பல இதழ்களில் எழுதியிருக்கிறேன். அவை அவருடைய கவனத்திற்குச் சென்றுசேர, என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி மகிழுவார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் சென்றபோது, சரஸ்வதி டீச்சரைச் சென்று பார்த்தேன். உடம்பு முடியாமல் இருந்தார். அக்கறையோடு விசாரித்தார். நினைவு கூர்மையாக இருந்தது. விழுந்து வணங்கினேன். உச்சி முகர்ந்து ஊக்குவித்தார். அதன்பிறகு அவருடைய இழப்புச் செய்தி என் செவிகளையடைந்போது, கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணி மிகவும் சவாலானது. குழந்தையைப் போல உள்ளத்தை ஆக்கிக் கொள்ள முடிந்தவர்கள் மட்டுமே அந்த மொட்டுக்கள் மலரத் தென்றலாக இருக்க முடியும். ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்களே ஆதர்சங்கள். அவர்கள் வாக்குகளே வேத வாசகங்கள். அவர்களே அறிவு உலகத்தின் அறங்காவலர்கள். கத்தரிக்காயை சாப்பிட வேண்டும் என்பதை சாவித்திரி டீச்சர் சொன்ன பிறகே செய்யத் தொடங்கினோம்.

நகங்களைக் கடிப்பதை பத்மாவதி டீச்சரே நிறுத்தக் காரணமாயிருந்தார். என்னுடன் பழகிய பலரிடமிருந்தும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.

பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தன். சேக்கிழார் விழா நடத்தும்போது ஆண்டுதோறும் என்னைப் பேச அழைப்பார். எனக்குப் பெரிய புராணம் தெரியும் என அவர் கணிப்பு. அவர் வைத்த நம்பிக்கைக்காகவே அதை ஆண்டுதோறும் வாசித்துப் பேசச் செல்வேன்.

‘மனதில்’ என்பது தவறு, ‘மனத்தில்’ என்பதே சரி என்று உணர்த்தியவர். அவருடைய தொடர்பு எனக்குப் பேரனுபவமாக இருந்தது. ‘மனத்தில்’ நிற்பவர் அவர்.

என் நண்பர்கள் பலர் சிறந்த நூல்களை வாசிக்கவும், நல்ல திறன்களை வளர்க்கவும், உலகத் திரைப்படங்களைப் பார்க்கவும் எனக்குப் பழக்கி வைத்தனர். அவர்கள் அனைவரும் என்னை மேன்மைப்படுத்த உதவியவர்கள். அவர்களின்றி நான் நீர்க்குமிழியாகவே இருந்திருப்பேன். அவர்களும் ஆசான்களே!

இப்போது என் உலகில் ஆசான்கள் அதிகம். மலர்களிடமிருந்தும், மரங்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறேன். மண்ணிடமிருந்து பொறுமையையும், தென்றலிடமிருந்து குளுமையையும், நீரிடமிருந்து மென்மையையும் கற்றுக்கொள்ள முயன்று தோற்றுத் தோற்றுத் தவிக்கிறேன்.

05.02.2021 01 : 15 P.M

Comments (0)
Add Comment