பூனையை அனுமதிக்காதே!

இறக்கும் தருவாயில் இருந்த குரு ஒருவர், தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.

“இது என்ன? எதற்காக அவர் என்னைக் கூப்பிட்டு வீட்டிற்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று அந்தத் தலைமை சீடருக்குப் புரியவில்லை.

இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய்விட்டார்.

ஒரு வயதான மனிதரிடம் இதற்கு விளக்கம் கேட்டார் அந்த சீடர்.

விளக்கம் அளித்தார் அந்த முதியவர்.

“எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன. ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை.

ஆனால், அவரிடம் இருந்த இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்சனை என்னவென்றால், அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன.

எனவே அந்தக் கிராமத்தில் உள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தைக் கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார்.

ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்” என்றார்.

குருவும், சரி, இது ஒரு எளிய வழிதான் என்று ஒத்துக் கொண்டார். பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாகச் செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்துவிட்டது. இப்போது பிரச்சனை துவங்கி விட்டது.

எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது.

“நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது” என்று சொல்லாமல் சொல்லியது.

அந்த குரு திரும்பவும் கிராமத்திற்கு வந்து அந்த நபரிடம், “இப்போது என்ன செய்வது? அந்தப் பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னைப் பார்க்கிறது. “எனக்கு உணவு கொடு; இல்லாவிடில் நான் போகிறேன்; நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்துவிடும்” என்பதுபோல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும்” என்று கேட்டார்.

அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றைக் கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

அந்த குரு பசுவை வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவைப்பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார்.

அந்த கிராம மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்சனை பிரச்சனை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது? அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர்.

அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்சனை வந்தது. இப்போது அந்தப் பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய தெரியாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்குச் சென்றார்.

“பயிர் அறுவடைக்குத் தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார்.

மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள்.” என்றனர்.

“ஆனால்…!” என்ற துறவி, “நான் ஒரு துறவி…” என்றார்.

அவர்கள், இந்தத் துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்! உங்களிடம் பசு, பூனை, நிலம், பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.

மேலும் இந்தத் திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்தப் பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர்.

அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்தச் சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை.

நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்தப் பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்தக் கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான்.

நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்ய வேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்ய வேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார்.

அவர் அந்தப் பெண்ணுடன் பேசினார். அவள், “எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறேன். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள்.

அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு பணிவிடைகள் செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்தப் பெண்ணை விரும்ப ஆரம்பித்தார்.

பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர்.

இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள் என்று கூறி விட்டு இறந்தார்.

வயதான மனிதன் அந்த தலைமைச் சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது.

பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும். வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.

இங்கே பூனை என்பது ஒரு குறியீடு தான். தேவையற்ற எண்ணங்களையும், கற்பனைகளையும் நாம் உருவாக்கிக் கொண்டால் (நம் மனதிற்குள் நுழையவிட்டால்) தொடர் சங்கிலிபோல அது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டே போகும். அதிலிருந்து விடுபடுவது சிரமம் என்பதை உணர்ந்து செயல்பட்டால், வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

– நன்றி: முகநூல் பதிவு

04.02.2021  03 : 03 P.M

Comments (0)
Add Comment