வாட் நெக்ஸ்ட்? இந்தக் கேள்வி தான் சிலருக்கு சாதனையாகவும் பலருக்கு வேதனையாகவும் மாறுகிறது.
உங்கள் வாழ்க்கையில் அத்தனைக்கும் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் ஒன்று கிடைத்தவுடன் அதை அனுபவிக்கக் கூட நேரம் கொடுக்காமல் மனம் தன் அடுத்த விருப்பத்திற்குத் தாவுவதை நீங்கள் அறிந்தீர்களா.
ஒன்றைத் தேடி அலைகின்றவரை அதை மதிப்பு மிக்கதாக எடுத்துக் கொண்டு பரபரவென இயங்கும் மனம், அது கிடைத்தவுடனே அதில் இருந்த த்ரில் வடிய உற்சாகமிழந்து, “வாட் நெக்ஸ்ட்” என வேறொன்றை அவசர கதியில் தேடி அடைய முயல்கிறது.
நீங்கள் என்றாவது ஒரு நாள் ஆசுவாசமாக, பரபரப்பு இல்லாமல் உங்கள் அலுவகத்திற்கு செல்லும்போது எத்தனை விஷயங்களை அலசிக் கொண்டே செல்வீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.. இதுவே பரபரப்போடு அலுவலகத்திற்கு செல்லும்போது, நேரத்திற்கு போய்விட முடியுமா எனும் உங்கள் இலக்கைத் தவிர வேறு ஒன்றும் உங்கள் மனதில் எழாது அல்லவா?!
அது போல இந்த அவசர உலகம், பல நேரங்களில், ஓடும் இரயிலில் மாட்டிக் கொண்டு இழுத்து செல்லப்படும் ஒரு பொருளாக உங்கள் மனதை எங்கெங்கோ இழுத்து செல்லுகிறது, அதனால் என்ன நிகழ்கிறது தெரியுமா?
ஒன்றை ரசித்து அனுபவிக்கும் மனநிலைக்கு பதிலாக பறித்து விழுங்கும் அவசரத்தில், தான் என்ன செய்கிறோம், தான் செய்வது சரிதானா என்ற கேள்விக்கு இடமில்லாமல் பதிலை மட்டும் பலவாறு கிறுக்கிச் செல்கிறது.
தான் மகிழ்ச்சி என்று கணிக்கும் ஒன்று கிடைக்கும் வரை போர்க்கால அவசர மனநிலையோடு பரபரக்கும் மனம் அது கிடைத்தவுடன் அதே அவசர கதியில் அடுத்த இலக்கைக் குறித்துக் கொள்கிறது.
தான் எதைத் தேடி ஓடுகிறோம் என்பதில் எதை இழக்கிறோம் என்பதையே மனம் மழுங்கடித்து விடுகிறது. மகிழ்ச்சிக்கான தன் இலக்கு மட்டுமே கண்களில் இருக்க இந்த இலக்கு சரியானதா.. தவறானதா.. என்பதையே அலசாமல் அதற்கான அசுர ஓட்டம் அரம்பித்து விடுகிறது.
விழிகள் திறந்திருந்தும் பார்க்காமல் அந்த வேகமெடுத்த காலடியில் நசுங்குவது சருகுகள் மட்டுமல்ல வண்ணத்துப் பூச்சிகளும்தான் என்பதை உணர மறந்து விடுகின்றது மனம்.
தன் மகிழ்ச்சிக்காக, மன நிம்மதிக்காகத்தான் ஒன்றை நாடினோம் என்பதையே மறந்து விட்டு, அந்த ஒன்றிற்காக தன் மகிழ்ச்சியையே, தன் நிம்மதியையே, ஏன், எந்த நியாயத்தையும் இழக்கத் துணிந்து விடுகிறது மனம்.
தான் விரும்பும் ஒன்றை அடைவதில் காட்டக் கூடிய அந்த அவசரம், தன் விருப்பத்திற்கு ஏதாவது இடைஞ்சலாக வந்து விடுமோ என்ற அச்சம், ‘தான்’ என்ன செய்கிறோம் என்ற எண்ணம் வரவிடாமல் மூளையின் லாஜிக்கல் பகுதியை அப்படியே செயலிழக்கச் செய்து விடுகிறது.
அளவுக்கதிகமான ஆசையோ கோபமோ வந்து ஒன்றின் மீது addiction ஏற்படும்போது மூளையின் லாஜிக்கல் பகுதி block ஆகி எமோஷனல் பகுதி மட்டுமே வேலை செய்ய, உணர்ச்சி வேகத்தில் தன் இலக்கை மட்டுமே மனம் முன்னிறுத்தும்.
நீங்கள் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்… நிதானமான வேகத்தோடு, உடன் பயணிப்பவர்களின் இருப்பு பற்றிய அக்கறையோடு, சுற்று முற்றும் கவனம் வைத்து அந்தக் காரை ஓட்டாமல், இலக்கை மட்டும் மனதில் இருத்தி, எப்போது தேவைப்பட்டாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொண்டு, வேகமெடுத்துச் செல்லும்போது என்ன ஆகும்? நீங்கள் எப்போது சடன் பிரேக் போட்டாலும் அந்தக் கார் ஒரு குலுக்கலோடு தான் நிற்கும், அல்லது உடனே நிற்க முடியாமல் எதிலாவது இடித்து ஏதாவது பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அது இருக்கையில் இருப்பவர்களையும் தேமே என்று ரோட்டில் பயணிப்பவர்ளையும் மட்டுமல்ல ஓட்டுனரான உங்களையும் தான் பாதிக்கும். என்றும் நிதானமான பயணமும் தேடலும் தான் நிரந்தர நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும்.
நீங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஹோமியோஸ்டேஸிஸ் (homeostasis) பற்றியும் வேல்யு சிஸ்டம் (value system) பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? சுருக்கமாகச் சொன்னால் வேல்யூ சிஸ்டம் Accelerator என்றால் ஹோமியோஸ்டேஸிஸ் brake என்று எடுத்துக் கொள்ளலாம்.
இயந்திர கதியில் மாறிவரும் இந்த உலகிற்கேற்ப இயந்திரமாக மனிதன் மாறிவிடக்கூடாது, அவன் தன் மனிதத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக இயற்கை நமக்கு அளித்திருக்கும் வரம் தான் ஹோமியோஸ்டேஸிஸ்.
இது ஒவ்வொரு முறை மனிதன் தான் செய்து கொண்டிருப்பதில் இருந்து விலகி புதிதாக ஒரு மாற்றத்தை செயல்படுத்த முற்படும்போதெல்லாம் அவனுக்குள் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி மாற்றத்தை சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்து, அவன் மாற நினைப்பது சரிதானா என்ற கேள்வியை அவனுக்குள் எழுப்பும்.
அந்தக் கேள்விக்கான பதிலை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து தகுந்த தகவல்களை அவன் தெரிந்து கொள்ளும்போது அவனின் வேல்யு சிஸ்டம் அப்டேட் ஆகும்போது அவன் மனமும் பதட்டம் நீங்கி மாற்றத்தை இலகுவாக ஏற்றுக் கொள்ள்ளும்.
இப்படி நமக்குள் இருக்கும் ஹோமியோஸ்டேஸிஸ் என்னும் பிரேக் எந்த ஒரு மாற்றத்தையும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி சீராக கொண்டு செல்லும்.
ஆனால், இன்றைய கணினி யுகத்தில் அளவுக்கதிகமான தகவல்கள் மொபைல், டி.வி என்று நம்மிடம் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால், Homeostasis என்னும் Brake செயலிழந்து போக, பழையன கழிதலும் புதியன புகுதலும் மட்டுமே சரி, மாற்றம் மட்டுமே முன்னேற்றம் என்று மனம் நினைக்கத் தொடங்கி விடுகிறது.
நீங்களும், புதிதாக எந்த ஒரு பொருள் சந்தைக்கு வந்தவுடன் அது உங்களுக்கு தேவையா, அதன் முந்தைய மாடலில் ஏதேனும் குறை இருக்கிறதா என்ற அடிப்படை அலசலைக் கூட தவிர்த்து விட்டு, வரும் புது மாடலை வாங்க விரைகிறீர்கள்.
நீங்களே விரும்பி ஒரு பொருளைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள நினைத்து சிறிது காலம் தள்ள நினைத்தாலும், அந்தச் சிறிய கால அவகாசத்துக்குள்ளேயே அடுத்தடுத்த மாடல்கள் வந்து உங்களை சிந்திக்க விடாமல் ஏதேனும் ஒன்றை அவசரத்தில் தேர்வு செய்ய வைத்துவிடுகிறது.
அதனால்தான் மாற்றங்கள் வரும் வேகத்தை விட அதிக வேகத்தில் மகிழ்ச்சி உங்கள் மனதை விட்டு வெளியேறி விடுகிறது.
இப்படி எதிலும் நிலை இல்லாமல் பரபரக்கும் மனம், உறவுகளின் உன்னதங்களிலும் நிலை கொள்ள முடியாமல், ஒவ்வொருவரையும் தனித் தீவாக தங்களுக்கென்ற ஆத்மார்த்த உறவுகள் இல்லாமல் தவிக்கச் செய்கிறது.
அதனால் எதிலும் சகிப்புத்தன்மையற்று ‘வாட் நெக்ஸ்ட்’ என பலரும் தனக்கான மாற்றத்தை எல்லாவற்றிலும் தேடுகிறார்கள்.
இதுவே தனக்கான இறுப்பை நிலை நிறுத்திக்கொண்டு தான் போற்ற வேண்டிய அடித்தளத்தையே மாற்ற நினைக்காமல், தான் போற்ற வேண்டிய பாரம்பரியம் கெடாமல் தன் சூழலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரலாம் What’s Next in this என்னும் சுய தேடல், விழிப்புணர்ச்சியையும் வேதனையற்ற சாதனையையும் தரும்.
04.02.2021 02 : 33 P.M