தேர்தல் களம்: அசாம்-4
பாஜக எதையும் நீண்டகாலத்துக்குத் திட்டமிடும் வழக்கத்தைக் கொண்டது. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு’ என்பது பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் முழுமையாகப் பொருந்தாது. இந்தப் பொறுமைதான் இன்றைக்கு பாஜகவிடம் வடகிழக்கு மாநிலங்களின் நிர்வாகத்தை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
அசாமில் ஆரம்பத்திலிருந்தே அகதிகள் பிரச்சினை, இனவாதப் பிரச்சினை, வெளி மாநில ஆட்கள் பெருமளவில் குடியேறி இருந்ததன் பிரச்சினை என்று பல்வேறு விதமான பிரச்சினைகள் இருந்து வருகின்றன.
இவற்றின் பொதுவான அம்சமான, ‘வெளி இடங்களில் இருந்து வந்தவர்களால் பிரச்சினை’ என்பதை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தது. இதில் எதை நாம் எடுத்தால் நமக்கு மக்கள் ஆதரவு வரும் என்பதை யோசித்து முடிவுகளை எடுத்தார்கள்.
பிற மாநில மக்கள் பிரச்சினை என்பதை தேசியவாதத்தால் எதிர்கொள்ள முடியும். இனவாதத்தை அந்தந்த இனங்களைச் சேர்ந்தவர்களோடு சேர்ந்து பணி செய்வதன் மூலம் சமாளிக்க முடியும். ஆனால் அனைவரையும் ஓரணியில் திரட்ட வைக்கக்கூடிய ஒரே விஷயம் அந்நிய நாடுகளில் இருந்து வந்த அகதிகள் பிரச்சினைதான் என்று பாஜக கணித்தது.
பாஜகவின் தனிக்குரல்
இந்தக் கணிப்புக்கேற்பக் காய்களை நகர்த்தியது. அதே சமயம் உள்ளூர் பிரச்சினைகளை அலட்சியம் செய்யவில்லை, அவர்களோடு இணைந்து செயல்பட்டது. வெளிநாட்டவர் ஊடுருவலை எதிர்த்த அசாம் கண பரிஷத்தோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது.
காங்கிரஸ் அரசாங்கம் போடோலாண்ட், டிவா உள்ளிட்ட ஒன்பது உள்ளூர் சுயாட்சி கவுன்சில்களை ஏற்படுத்தியபோது எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர்களோடு அரசியல் தொடர்புகளை உருவாக்கி வந்தது.
அசாம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தது. உள்ளூர் கவுன்சில்கள் பிரச்சினைகளை காங்கிரஸ் கவனிக்கட்டும் என்று முடிவு செய்து அதில் தலையிடவில்லை. காங்கிரஸ் அவர்களைத் தனித்தனிக் குழுக்களாக பாவித்து அரசியல் செய்துவந்த போது, பாஜக அனைவரும் அசாமியர் என்ற செய்தியை வெளிப்படையாகச் சொல்லி வந்தது.
‘தாங்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்த இனக் குழுக்கள் அதனால் சுயாட்சி வேண்டும்’ என்று போராடியவர்களுக்கு அனைவரும் அசாமியர் என்ற பாஜகவின் குரல் பிடிக்கவில்லை.
ஆனாலும் தாங்கள் விரும்பிய சுயாட்சியை இந்திய அரசாண்மையின் கீழ் அளிப்பதற்கு ஒப்புக்கொண்ட பின் அதற்கடுத்த நிலையாக, நாமெல்லாம் அசாமியர் என்ற வாதத்திற்கு அவ்வளவாக எதிர்ப்பு எழவில்லை. ஆரம்பத்தில் அவர்களுக்குப் பிடிக்காத ஒன்றுபட்ட அசாம் என்ற விஷயம் அதிகாரத்திற்கு வந்ததும் ஏற்புடையதாக ஆனது.
உள்ளூர் பண்பாடு, உள்ளூர் நாயகர்கள்
இது மட்டுமின்றி தனது இந்துத்துவக் கொள்கையில் அசாமுக்கு ஏற்றபடி சிறு மாற்றம் செய்தது பாஜக. அசாமைச் சார்ந்த புராண நாயகர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்த சங்கரதேவ் ஆகியோரைத் தன்வயமாக்கிக் கொண்டது.
சங்கரதேவ் கேரள சமூக சீர்திருத்தவாதியான நாராயண குரு போன்றவர். 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பிராமண ஆதிக்க எதிர்ப்புச் சிந்தனையாளராக, சமூக சேவகராக மக்களை வழிநடத்தியவர். பெரும் புகழ் பெற்றவர்.
அசாமில் ஆரம்பத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வந்தது. வனவாசிக் கேந்திரம் என்ற இயக்கத்தின் மூலம் பழங்குடியினத்தவர் மத்தியில் பணிபுரிந்து வந்தனர்.
மதமாற்றத்தைத் தடுப்பதுதான் அதன் மூல காரணம் என்றாலும் சேவைகள் மூலம் அதைச் செய்ததால் நல்ல பெயரை எடுத்தனர். அவர்கள் நடத்திய பள்ளிகளுக்குப் பெயர் சங்கர்தேவ் மழலையர் பள்ளி. இது அசாம் முழுவதும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இவரது பெயரில் பல சேவைகளும் நடந்து வருகின்றன.
மக்களைப் பொறுத்தவரை காங்கிரஸை நம்பி நினைத்தது நடக்கவில்லை. மாணவர்களின் அரசியல் இயக்கங்களும் நினைத்த அளவில் பலன்களைத் தரவில்லை. மீதி இருப்பது பாஜக மட்டும்தான். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்ற அனைத்து அமைப்புகளுடன் பாஜகவோ நட்பாகவே இருந்து வந்தது.
அதனால்தான் அசாம் கண பரிஷத்திலிருந்து ஆரம்பித்து பிற இயக்கங்களில் இருந்து வெளியேறிய பலர் பாஜகவிடம் வந்தனர். இப்போதைய முதல்வர் சோனாவல்லும் அசாம் கண பரிஷத்திலிருந்து வந்தவர்தான்.
இப்படியாக மண்ணின் மைந்தர் விஷயத்தை அந்த அளவுக்கு முக்கியமில்லாததாக்கி விட்டது பாஜக. அதனால்தான் சமீபத்திய தேர்தல்களில், அதுவும் உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. இப்போதைக்கு அசாமின் ஒரே பிரச்சினை வெளிநாட்டவர் பிரச்சினை என்பதை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது.
குடியுரிமைச் சட்டமும் அதற்குப் பின்னும்
அதே சமயம் எதிர்க்கட்சிகளும் சும்மா இருக்கவில்லை. கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டம், பூர்வகுடி அசாமியர்களை பாதிக்கும் என்று பிரச்சாரம் செய்தன. அதற்குப் பலனும் இருந்தது. நாடு தழுவிய எதிர்ப்பில், அசாம் மாநிலம் மிக முக்கியப் பங்கு வகித்தது.
ஆனாலும் பாஜக இந்தச் சட்டம் வெளிநாட்டினருக்கு எதிரானது; இந்தியர்களுக்கு எதிரானது அல்ல என்பதை அழுத்தமாகச் சொல்லி வருகிறது. மக்கள் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகவே கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த உள்ளூர்த் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றிகளைக் கூற வேண்டும்.
மேலும் அசாம் கண பரிஷத், போடோலாண்ட் எல்லைப்புற உரிமைப் பாதுகாப்பு இயக்கம், டிவா பகுதிக்கான பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல உள்ளூர் இனங்கள் சார்ந்த பல இயக்கங்கள் பாஜக கூட்டணியில் இருந்தன. இதனாலும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனது.
இது மட்டுமின்றி அசாமின் கலாச்சாரம், மொழி ஆகியவற்றைப் பாதுகாப்பது, போற்றுவது ஆகியவற்றில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என பாஜக பலவிதங்களில் காட்டிக் கொண்டது.
அசாம் மாநிலக் கவிஞரான பூபன் ஹசாரிகாவிற்கு, மத்திய அரசு பாரத ரத்னா கொடுத்து கௌரவித்தது. இவர் இன ஒற்றுமை, அசாமியப் பெருமை, மொழியின் மகத்துவம் குறித்த கவிதைகளை எழுதியவர். உலகப் புகழ் பெற்ற கவிஞர், இசையமைப்பாளர்.
தாதாசாகேப் பல்கே உட்படப் பல விருதுகளை பெற்றவர். காங்கிரஸ் அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது. மோடி அரசு பாரத ரத்னா அளித்து கௌரவித்தது.
இதற்கு முன்னால், வாஜ்பாய் அரசு, சிறந்த காந்தியவாதியும் அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சருமான கோபிநாத் பர்டோலோய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. இவர்தான் அசாம் கிழக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாகாமல் காப்பாற்றியவர். அந்த மாநிலம் முழுதும் இஸ்லாம் மயமாகாமல் தடுத்து நிறுத்தியவரும் இவரே என்று சொல்லப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய அரசின் உதவிகள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் மாநில மக்களுக்குப் போய்ச் சேர்வதை மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டது. இலவச எரிவாயுத் திட்டமான உஜ்வாலா மிக வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பல மாநிலங்களில் அசாமும் ஒன்று.
போடோலாண்ட் ஒப்பந்தத்தை உருவாக்கியது மோடி அரசுதான். இது அசாமில் அமைதி திரும்ப வழி வகை செய்திருக்கிறது. அண்மையில் பழங்குடியினத்தவர்க்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நில உரிமைப் பத்திரங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
பாஜக வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதை எதிர்க்கட்சிகள் அதிகமாகவே நம்புகின்றன. இதற்கு உதாரணமாக பிற கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர் பாஜகவில் வேகமாக இணைந்து வருகிறார்கள்.
எந்த அளவுக்கு இது போனதென்றால், அந்த மாநில பாஜக தலைவர் ரஞ்சித்குமார் தாஸ், “மற்ற கட்சிகளிலிருந்து எம்எல்ஏக்கள் போன்றவர்கள் தயவுசெய்து பாஜகவிற்கு வராதீர்கள்; தொண்டர்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வரலாம்” என்று அறிக்கையே விட்டிருக்கிறார்.
இதுதான் இன்று அசாமின் நிலை.
04.02.2021 01 : 13 P.M