பிப்.5 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

நடப்பாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் உரையாற்றித் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று மீட்புப் பணிகளில் அயராது உழைத்த சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் இத்தருணத்தில் உங்களின் சிறந்த பங்களிப்பிற்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி தொலைக்காட்சி மற்றும் 10 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வாயிலாக, மாணவர்கள் பாடங்களை கற்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

விலையில்லா மடிக்கணினிகள் திட்டத்தின் மூலமும், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமும் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்கள் வாயிலாகவும், பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும், மின்னணு தொகுப்பில் பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘இணையப் பாதுகாப்பு கொள்கை’ மூலம், தரவுகளின் உயர்தரப் பாதுகாப்பையும் தனி உரிமையையும் உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது.

மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள்ளும், எஞ்சிய கிராமங்களில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள்ளும் ‘பாரத்நெட் திட்டம்’ செயல்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிவேக மற்றும் அளவிடத்தக்க அலைவரிசையை வழங்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மாநிலப் பெரும்பரப்பு வலை அமைப்பு, தமிழ்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு உட்கட்டமைப்புடன் பாரத்நெட்டை இணைப்பதன் மூலம், ஒரு ஒருங்கிணைந்த மின்னணு சேவை விநியோக தளமான ‘ஒருங்கிணைந்த மின்னணு உட்கட்டமைப்பு’ ஏற்படுத்தப்படும்.

அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது.

பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று, வெற்றிநடை போடுகிறது தமிழகம். முதல்வரின் தன்னிகரற்ற தலைமையின் கீழ், சிறப்பாக செயல்படும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் கூட்டத் தொடரில், தமிழகத்தில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

02.02.2021 02 : 59 P.M

Comments (0)
Add Comment