காலம்
சாய்ந்து கொண்டிருக்கிறது.
விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்.
பேசவில்லை நீ.
ஆனாலும் உன் தொடுதல்
குளிர்ச்சியான நீர்ப்பெருக்காய்
உடலினுள் ஜில்லிட்டு ஓடுகிறது.
எனக்குப் புரிகிறது
பிரியும் வேளையில்
பாஷை சறுக்கிக் கொண்டு
போய்விடுகிறது.
கன்னத்தில் நீர்க்கோடுகள்
இறங்குகின்றன வெதுவெதுப்பாய்.
கனவில் கீறல் விழுந்து
கசிகிற மாதிரி இருக்கிறது.
கொஞ்சம் பின்னால் பார்க்கின்றேன்.
நாம் சந்தித்த பொழுதுகளெல்லாம்
இறைக்கையடித்துப் படபடக்கின்றன.
முன்னொரு இறக்கைக்குள்ளும்
நமது முகங்கள் தூக்கின எத்தனை பிம்பங்கள்?
எப்போதோ
மடியிடையே அழுகையுடன்
கசங்கி வெளிப்பட்டபோதே
உன்னைச் சந்திப்பதை யார் விதித்தது?
எத்தனையோ முகங்கள் கடக்கையில்
உன் முகம் மட்டும்
எப்படி மீந்தது என்னில்?
என்றோ சுற்றினபடி
நான் அவிழ்ந்த
தொப்புள் கொடியை
திரும்ப நீ எடுத்து வந்தது மாதிரி
எப்படி விடிந்தது நம் உறவு?
நாளையே நீ போய் விடலாம்.
போன பின்
இந்த நாள் மட்டும் ஞாபகத்தில்
கத்திக் கொண்டிருக்கும்
வழி தெரியாத காகம் மாதிரி.
உனது விசும்பல்
கூரான ஆணியாய்
இறங்குகிறது எனது மௌனத்தில்.
முகந் துடைக்கின்றாய்.
என்ன செய்ய?
பிரியும் வேளை வந்து விட்டது.
****
(1987-ல் வெளியான லக்ஷ்மா என்ற பெயரில் எழுதிய மணாவின் ‘இன்னொரு விழிப்பு’ கவிதைத் தொகுப்பிலிருந்து)
01.02.2021 11 : 00 A.M