இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல பணிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி தற்போது வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்.
கடந்த வாரத்தில் தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.
இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பி.டி.எஃப் பார்மேட்டில் பெற்றுக்கொள்ள முடியும். இதனை எடிட் செய்ய முடியாது. இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பதிவு செய்யும் வாக்காளர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பெற முடிந்தது.
புதிய வாக்காளர்களுக்கு மட்டும் அதிலும் வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் நம்பரை அப்டேட் செய்திருந்தவர்கள் மட்டுமே, மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யலாம்.
அப்படி அப்டேட் செய்யாதவர்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்து, பின்னர் டிஜிட்டல் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே, இந்த டிஜிட்டல் சேவை கிடைத்து வந்தது.
இந்த நிலையில் தங்களது செல்போன் நம்பரை பதிவிட்ட பழைய வாக்காளர்கள், இன்று முதல் (பிப்ரவரி-1) டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பெற முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதோடு கியூ ஆர் கோடு பயன்பாட்டை கொண்டதாக இந்த அடையாள அட்டை இருக்கும். பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரைக் கொண்டு, உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதே மொபைல் நம்பரை பதிவு செய்யாத வாக்காளர்கள், இதனை பதிவு செய்த பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதியதாக மின்னணு வடிவில் வாக்காளர் அட்டை டிஜிட்டல் முறையில் பெறும் வாக்காளர், அதனை ஆவண அட்டையாகவும் பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் தாமதம் இருக்காது.
இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று முதல் பழைய கார்டு வைத்திருப்பவர்களும், டிஜிட்டல் முறையில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்கான முன் ஏற்பாடுகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
01.02.2021 04 : 45 P.M.