வரலாற்றுப் படங்களில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள்!

சமீபகாலமாக வரலாறு, புராணக் கதைகளின் பக்கம் திரும்பி இருக்கிறது சினிமா இயக்குனர்களின் பார்வை.

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் உருவாகும். திடீரென ஒரு காமெடி படம் ஹிட்டானால், அதே போன்ற படங்களாக அடுத்தடுத்து வெளிவரும். ஹாரார் காமெடி படங்கள் ஹிட்டானால், அதுபோன்ற படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த டிரெண்ட்களுக்குள் சிக்காமல் திடீரென வித்தியாசமான கதைகளுடன் வந்து ஹிட்டாகும் படங்களும் உண்டு.

சமீபத்தில் வரலாற்று, புராணப் படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இயக்குனர்கள். இதற்குப் பிள்ளையார் சுழி, ராஜமவுலியின் பாகுபலி படங்கள்தான்! இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பு இதற்கு முன் ஏற்படாதது.

ஒரு தென்னிந்திய படம், இந்தியா முழுவதும் வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது இதுதான் முதன்முறை. இதனால், மற்ற இயக்குனர்களும் நாமும் அப்படி ஒரு முயற்சி செய்தால் என்ன என்று களத்தில் குதித்தார்கள்/குதித்திருக்கிறார்கள். தெலுங்கில் உருவான ருத்ரமாதேவி அந்த மாதிரியான முயற்சிதான் என்றாலும் பாகுபலி அளவுக்கு பிரமாண்டம் இல்லை என்பதால், பெரிய வெற்றியை எட்டவில்லை.

அடுத்து இந்தியில், பாஜிராவ் மஸ்தானி, பானிபட், ஜான்சி ராணியின் கதையான மணிகர்ணிகா: த குயின் ஆஃப் ஜான்சி, தன்ஹாஜி உட்பட சில வரலாற்றுக் கதைகளைக் கொண்ட படங்கள் உருவாகின.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான இந்தப் படங்கள் அனைத்தும் பாகுபலி மாதிரியான வசூலையும் வரவேற்பையும் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து அதுபோன்ற கதைகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கி வருகிறார். எம்.ஜி.ஆர் முதல் பலர் முயன்றும் தொடர முடியாத இந்தக் கதையை படமாக்குவதே பெரும் சாதனைதான் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். பெரும்பாலான வாசகர்களால் வாசிக்கப்பட்ட கல்கியின் நாவலை, மணிரத்னம் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைப் பார்க்கவே கூட்டம் அள்ளும் என்கிறார்கள்.

இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. வந்தியத்தேவனையும் கரிகாலனையும் அருள்மொழி வர்மனையும் அவர்கள் செல்லும் குதிரைக் குளம்படி சத்தங்களையும் காணவும் கேட்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது ஆதிபுருஷ். இது புராணப் படம். ராமாயண காவியத்தின் ஒரு பகுதி கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை இந்திப் பட இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார். இதில் ராமனாக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.

ராஜமவுலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர். படம் வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டது. சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கின்றனர். எனவே இந்தப் படத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு.

ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் அடுத்து சகுந்தலையின் கதையை சாகுந்தலா என்ற பெயரில் உருவாக்குகிறார். மகாபாரதக் கதைதான். விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள் சகுந்தலை. துஷ்யந்தனை காதலித்து காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரைப் பிரிகிறார் துஷ்யந்தன்.

முனிவர் சாபத்தால், துஷ்யந்தன் அவரை மறக்கும் நிலை ஏற்படுகிறது. பிறகு எப்படி இணைகிறார் என்பது கதை. இதில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார். ஏற்கனவே 1940 ஆம் ஆண்டிலேயே சகுந்தலையின் கதை சினிமாவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களைப் போல மேலும் பல வரலாற்று, புராண படங்கள் உருவாகி வருகின்றன. உருவாக இருக்கின்றன. இயக்குனர் ஷங்கர் கூட ஒரு வரலாற்றுப் படத்தை இயக்க இருப்பதாகக் கூறுகிறார்கள்.

“வரலாற்றுப் படங்களுக்கு பட்ஜெட் அதிகம்தான். இருந்தாலும் பான் இந்தியா முறையில் பல்வேறு மொழிகளில் வெளியிடுவதால், லாபம் ஈட்ட முடியும். சொல்லப்பட வேண்டிய பல வரலாற்றுக் கதைகள் படமானால், அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமையும்” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சிலர்.

  • அலாவுதீன்

01.02.2021   01 : 00 P.M.

Comments (0)
Add Comment