“அன்பு காட்டுவதில் எம்.ஜி.ஆரை மிஞ்ச ஆள் இல்லை”

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-14

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக அவருடன் நடித்த நடிகர்கள் நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ராஜஸ்ரீ தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் முதன் முதலாக நடித்த படம் ‘கலையரசி’. அதில் எம்.ஜி.ஆர். டபுள் ஆக்ஷன் செய்தார். பானுமதியம்மா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார்னு பெரியப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அந்தப் படத்தில் வேலை பார்த்தாங்க. நான் அப்ப டீன் ஏஜ் பொண்ணு. யூனிட்லயே நான் தான் சின்னவ. எதுவும் புரியாத வயசு.

சந்திர மண்டலம், பறக்கும் தட்டுன்னு அப்பவே சயின்ஸ் ஃபிக்ஷன் படம் பண்ணிட்டாங்க. அதில் நான் சந்திரமண்டலத்தில் இருக்குற எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தேன். முதல் முதலா ஹீரோயினா நான் நடிச்சதே புரட்சி தலைவர் கூடத்தான்.

‘நீ இங்கே… நான் அங்கே…’ன்னு ஒரு அழகான டூயட் ஸாங் கூட இருக்கு. அப்பல்லாம் ஒரு படம் எடுக்க பல வருஷங்கள் ஆகும். ஒரு ஷெட்யூல் போய்ட்டு வந்தா பெரிய கேப்புக்கு அப்புறம் தான் அடுத்த ஷெட்யூல் போவாங்க.

அதுக்குள்ள நாங்க மத்த படமெல்லாம் பண்ணுவோம். நான் 5 மொழியில நடிச்சுட்டு இருந்தேன். ‘கலையரசி’ ஆரம்பிச்சபோது எனக்கு 14 வயசு. முடியும்போது 19 வயசு. 5 வருஷம் அந்தப் படத்தோட ஷூட்டிங் நடந்துச்சு.

முதல் நாள் ஒரு ஸாங் தான் ஷூட் பண்ணினாங்க. அப்ப தான் கால் உடைஞ்சு குணமாகி வந்திருந்தார் எம்.ஜி.ஆர். நான் டான்ஸ் ஆடிக்கிட்டே வந்து டக்குன்னு அவர் மடியில விழணும். அதான் சீன்.

நான் ஆடிட்டே வருவேன்… அவர்கிட்ட வந்ததும் அப்படியே நின்னுடுவேன். மூணு நாலு டேக் போச்சு. என்னால விழ முடியல. எவ்வளவு டேக் போனாலும் அவருக்கு கோபமே வராது. என்னமோ பிரச்சனைனு புரிஞ்சுகிட்டு ஒரு ப்ரேக் சொல்லிட்டு என்னை தனியா கூப்பிட்டு விட்டார்.

“என்னம்மா… என்ன பிரச்சனை. நல்லா ஆடுற, ஆனா மடியில விழுறதுல ஏன் தயக்கம். கூச்சப்படக் கூடாதும்மா”ன்னு பொறுமையா பேசினார்.

நான் சொன்னேன், “சார்… நீங்க இப்ப தான் கால் உடைஞ்சி குணமாகி வந்திருக்கீங்க. நான் வேற நல்ல கொழுகொழுன்னு இருக்கேன். உங்க மடியில விழுந்து கால் திரும்ப ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றது. அதான் பயம்மா இருக்கு”னு சொன்னேன். சத்தமா சிரிச்சிட்டார். “என் கால் நல்லா தான்ம்மா இருக்கு”னு சொல்லி. காலை மடக்கிக் காட்டினார். அப்புறம் தான் அந்த டேக் ஓகே ஆச்சு.

‘கலையரசி’க்கு அப்புறம் ரொம்ப பிசியான நடிகையாகிட்டேன். அப்பல்லாம் எப்படின்னா எந்தப் படம் வந்தாலும் உடனே ஒத்துகிட்டு கால்ஷீட் கொடுத்திடுவோம். அதனால நிறைய பெரிய நடிகர்களோட படங்களில் வந்த சான்ஸை நான் தவற விட்டிருக்கேன்.

அப்படித்தான் எம்.ஜி.ஆர். கூட வந்த பெரிய வாய்ப்பு நழுவிப்போச்சு. ‘அடிமைப் பெண்’ படத்தின் ஒரு ஷெட்யூல் முடிச்சிட்டு, கே.பாலசந்தரின் ‘பூவா தலையா’ படத்துக்காக குற்றாலம், மதுரை, கொடைக்கானல்னு தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகிட்டு இருந்தேன்.

அந்த நேரத்துல திடீர்னு ‘அடிமைப் பெண்’ யூனிட்ல இருந்து அழைப்பு. உடனே ஜெய்ப்பூர் போகணும் வாங்கணு கூப்பிடறாங்க. அந்தக் காலத்துல எல்லாம், பெரிய ப்ரொட்யூஸர், சின்ன ப்ரொட்யூஸர் வித்தியாசமெல்லாம் பார்க்க மாட்டோம். கால்ஷீட் கொடுத்துட்டா அந்தக் கமிட்மெண்ட்டை காப்பாத்தியே ஆகணும்.

அவ்வளவு சின்சியாரிட்டி எல்லார் கிட்டயும் இருக்கும். அதிக பேமெண்ட் தர்றாங்கனு சின்ன ப்ரொட்யூசரை பாதியில விட்டுட்டு போக மாட்டோம். அதனால ஜெய்ப்பூர் ஷெட்யூலுக்கு என்னால போக முடியல. எம்.ஜி.ஆரும் அதை புரிஞ்சுகிட்டார். அதனால பெரிசா எழுதப்பட்ட என் கேரக்டர் கடைசியில சின்னதா மாற்றப்பட்டது. அது ஒரு பெரிய இழப்பு தான்.

அதுக்கப்புறம் ‘பட்டிக்காட்டு பொன்னையா’. முதல்ல கன்னடத்துல ‘பலே பஸூவா’ என்ற பெயர்ல வந்து சூப்பர் ஹிட் ஆன படம். உதயகுமார் ஹீரோ. நானும் ஜெயந்தியும் நடிச்சிருந்தோம். தமிழ்ல அதே ப்ரொட்யூஸர் தான் தயாரிச்சார். கன்னடத்துல படத்த பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு பிடிச்சு போச்சு. தமிழ்லயும் நானே நடிக்கணும்னு ப்ரொட்யூசர் விரும்பினார். அதை எம்.ஜி.ஆர். கிட்டயும் சொல்லி இருக்கார்.

“நல்லா தான் நடிச்சிருக்கு… ஆனா அந்தப் பொண்ணு கால்ஷீட் கிடைக்குறது ரொம்ப கஷ்டமாச்சே. அந்தப் பொண்ணு ஒரு இடத்துல நிக்காதே. பாம்பே, ஹைதராபாத், பெங்களூர்னு சுத்திட்டே இருக்குமே”ன்னு எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கார். “இப்படி சொல்றார்மா. அவர் சரினு சொன்னா தான் உன்ன கமிட் பண்ண முடியும்”ன்னு ப்ரொட்யூஸர் என்கிட்ட சொன்னார்.

அப்ப எம்.ஜி.ஆர். மேக்கப் ரூம்ல தான் இருந்தார். தைரியத்தை வரவழைச்சுகிட்டு நேரா அவர் அறைக்கு போனேன். நான் கதவை தட்டிட்டு உள்ளே போனதும், புருவத்தை உயர்த்தி ஒரு ஆச்சர்யப் பார்வை பார்த்தார். அதுல கிண்டலும் கலந்து இருந்தது.

“அண்ணா… ‘அடிமைப் பெண்’ படத்துல நான் செஞ்சது தப்புதான் அக்கா தான் கால்ஷீட் கொடுத்துட்டாங்க. இந்தப் படத்துல அப்படி ஆகாது. வேற படம் வந்தாலும் ஒப்புக்க மாட்டேன். உங்க படத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். கன்னடத்துல நான் செஞ்ச கேரக்டர தமிழ்லயும் நானே தான் செய்யணும். உங்ககூட நடிக்கணும்ணா…” என்றேன்.

பத்து செகண்ட் தீர்க்கமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தவர் “சரிம்மா…” என்று ஒரே வார்த்தை சொன்னார். எப்பவும் நாம செய்த தப்பை அவர் முன்னாடி போய் சொல்லி மன்னிப்பு கேட்டா, மன்னிக்குற குணம் அவரிடம் உண்டு.

அந்தப் படத்தோட க்ளைமாக்ஸ்ல ஒரு குளறுபடி நடந்தது. அந்தப் ப்ரொட்யூஸர் சம்பள விஷயத்துல படுமோசம். பேமெண்ட் செக்கை ஏதோவொரு வெளியூர் ப்ராஞ்ச் பேருல கொடுப்பாரு, அந்தச் செக் போய்ட்டு வரதுக்குள்ள நம்ம ஷெட்யூலே முடிஞ்சிடும். அப்புறமா பார்த்தா அந்தச் செக் ரிட்டர்ன் ஆகி இருக்கும்.

அந்தப் படம் ஆரம்பிச்சதிலிருந்து இப்படி நிறைய செக் ரிட்டர்ன் ஆகி இருந்தது. இப்ப க்ளைமாக்ஸ் வரை வந்தாச்சு. இதையும் ஷூட் பண்ணி முடிச்சுட்டா அவ்வளவு தான் பணத்தை வாங்க முடியாது. ஆனா எம்.ஜி.ஆர். படமாச்சே… ஷூட்டிங் வரமுடியாதுன்னு சொல்ல முடியுமா? போய் எம்.ஜி.ஆர். கிட்டயே பேசுன்னு எங்க அக்கா சொன்னாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல அவர்கிட்ட விஷயத்தை சொன்னேன்.

“அண்ணா… க்ளைமாக்சும் முடிஞ்சிடுச்சின்னா மெல்ல என்னை கழட்டி விட்ருவாங்க. அப்புறமா நான் வர்லனு சொல்லி டூப் போட்டு, பேட்ச் வொர்க் பண்ணிடுவாங்கண்ணா. ஏற்கெனவே வர வேண்டிய சம்பளமே நிறைய இருக்கு. நீங்க சொன்னா நான் நடிக்குறேன்” என்றேன்.

அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து நின்று… “ஷூட்டிங் கேன்சல்!” என்று உரக்கச் சொன்னார்.

பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்த செட் ஸ்தம்பித்தது. தயாரிப்பு தரப்பு ஆட்கள் வெலவெலத்துப் போனார்கள். அடுத்த நிமிஷமே ப்ரொட்யூஸர் ஓடி வந்தார். “ஏன்யா… இந்தப் பொண்ணுக்கு சம்பள பாக்கி வச்சிருக்கீங்களாமே? மொதல்ல மொத்தத்தையும் இப்பவே இங்கயே செட்டில் பண்ணுங்க. இல்லனா ஷூட்டிங் கேன்சல்” என்றதும், அரை மணிநேரத்தில் மொத்த பணமும் என் கைகளில் இருந்தது.

தன் படங்களில் வரும் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப நுணுக்கமாக கவனித்து அதை செய்வார் அவர். உடன் நடிக்கும் நடிகர்களின் வசனங்கள், உடைகள், ஹேர்ஸ்டைல் உட்பட எல்லாவற்றிலும் அவர் கவனம் செலுத்துவார். ஹீரோயின்கள் அணியும் காஸ்ட்யூம்ஸ் முதற்கொண்டு அவரது அனுமதி பெற்ற பின்பே செட்டுக்கு வரும்.

‘குடியிருந்த கோயில்’ படத்தில் வரும் “துள்ளுவதோ இளமை…” பாடலுக்காக தைக்கப்பட்டிருந்த எனது காஸ்ட்யூமை செட்டுக்கு வந்து பார்த்தவருக்கு திருப்தி இல்லை. உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டார். அவர் சொன்னபடி ஆடை மாற்றப்பட்டு, அடுத்த நாள் தான் படப்பிடிப்பை நடத்தினோம்.

அவர் படங்களில் வரும் உடைகள் ஆபாசமாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ஆனால் கவர்ச்சியாக இருக்கும். உடல் முழுவதும் மூடும் ஆடை தான் அணியச் சொல்வார். ஆனால் யாருக்கு எந்த ஆடை பொருந்தும், எவ்வளவு மேக்கப் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் அவர் எக்ஸ்பெர்ட்.

‘துள்ளுவதோ இளமை…’ பாடலில் நான் அவருடன் கத்திச் சண்டை போட வேண்டும். எனக்கு கத்தியை எப்படி பிடிக்கணும் என்பதுகூட தெரியாது. அவர்தான் சொல்லிக் கொடுத்தார். அந்த அளவுக்கு கோ-ஆர்டிஸ்ட்களுடன் நட்பாக பழகுவார் தலைவர்.

மேக்கப் போட்டு செட்டுல நின்னார்னா அவரை மிஞ்சினவங்க யாருமே இல்ல. திடீரென்று ஒரு நாள் அவரிடம் இருந்து போன். எப்போதும் அவரிடம் ஒரு பழக்கம். போனில் பெயர் சொல்ல மாட்டார். ‘நான் தான்’ என்பார். குரலைக் கேட்டதுமே நமக்கு கை கால் உதறத் தொடங்கிவிடும்.

“உலகம் சுற்றும் வாலிபன்னு ஒரு படம் பண்றேன். நல்ல கேரக்டர் இருக்கு நீ தான் பண்ணனும். அடுத்த மாசம் அமெரிக்காவுல ஷூட்டிங். ரெடியா இரு” என்றார்.

வீட்டுல பேசிட்டு சொல்றேன்ணே என்றேன். அரைமணி நேரத்துல சொல்லு என்றார். அப்போது என் அம்மா பக்கவாதம் வந்து படுக்கையில் இருந்தார்கள். அமெரிக்கா என்றதும் அவங்களுக்கு பயம். ஷூட்டிங் நேரத்துல அவங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா, முகத்தைக் கூட பார்க்க முடியாதே என்று கவலை. வேண்டாம்னு மறுத்துட்டாங்க.

எம்.ஜி.ஆர். படம் என்பதால் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். டாக்டர் கூட எதுவும் சொல்றதுக்கில்ல என்றதால் வேறு வழி இல்லாமல் அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனது. அதை எம்.ஜி.ஆரிடம் எப்படி சொல்வது என்று தயக்கம்.

ஏற்கெனவே இவ பாதியில ஓடிடுவான்னு கெட்ட பேரு. இந்த அழகுல, அவரே வாய்ப்பு கொடுத்து வர்லேனு சொன்னா… என்ன நினைப்பாரோனு தயங்கித் தயங்கி போன் செஞ்சேன். “அண்ணே… நான் வர்ல” என்றேன். “ஏன்?” என்றார் லேசான கோபத்துடன்.

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல” என்று விஷயத்தை விளக்கினேன். அம்மா… என்றதும் அவர் குரலில் மாற்றம்.

“நீ மொதல்ல அம்மாவை கவனிச்சுக்கோ. அதான் முக்கியம். இந்த சான்ஸ் அப்புறம் கூட வரும். ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம கேளு” என்றார். இந்த மனசுதாங்க அவரை இவ்வளவு உயரத்தில் உட்கார வைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆர். உடன் ‘கலையரசி’ படத்தில் தொடங்கிய என் சினிமா வாழ்க்கை அவரது ‘நாளை நமதே’ படத்துடன் நிறைவுபெற்றது. அதற்கு பிறகு நான் நடிக்கவில்லை. என் முதல் படமும் கடைசி படமும் அவருடன் அமைந்தது தற்செயல் தான். ஆனால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி.

29.01.2021    02 : 44 P.M

Comments (0)
Add Comment