இணைய வழிக் கல்வியில் பெற்றோரின் பங்கு!

நலம் வாழ: தொடர் – 4

இதைப் படிக்கும் பெற்றோர்கள், “இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கலாம். நமது பிள்ளைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் நமது பங்கு எப்போதும் இருக்கிறது அல்லவா?

இணைய வழியிலும் அவர்கள் கல்விதான் கற்கிறார்கள் என்பதால் நமது ஒத்துழைப்பு, வழிகாட்டல்கள், ஆதரவு, ஊக்கப்படுத்தல் ஆகியன பிள்ளைகளுக்குத் தேவைப்படுகிறது. எப்படி என்று பார்க்கலாம்.

இணைய வழிப் பாடத்தில்கட்அடிப்பது

முதலில் இணைய வழிப் பாடத்தின்போது பிற வேலைகளைச் செய்துகொண்டே ‘அட்டெண்டன்ஸ்’ போடுவதற்கு வழிகள் இருக்கின்றன. அதாவது, பள்ளியில், கல்லூரியில் நமது பிள்ளைகள் வகுப்பை ‘கட்’ அடிப்பது தெரிந்தால் என்ன செய்வோம்? “ஆஹா பரவாயில்ல, சாமர்த்தியம்தான்” என்று மெச்சுவோமா? கண்டிப்பாக இல்லை.

இணையவழிக் கல்வி நடக்கும்போது அதில் முழு கவனம் செலுத்தாமல் இருந்தால், அதைக் கவனித்து, அது போல செய்யாமல் இருப்பதைப் பெற்றோர்கள்தாம் உறுதி செய்ய வேண்டும்.

இணைய வழிக் கல்வியில் நிச்சயமாகக் குறைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, புரியாததைச் திரும்பச் சொல்லி கேட்பது நடக்காது. ஆசிரியர் – மாணவர் உரையாடல் மிகக் குறைவாகவே நடக்கும். ஆசிரியருக்கும் இது புதிது. குறித்த கால கட்டத்தில் பாடத்திட்டங்களை முடிக்கும் நெருக்கடியும் இருக்கிறது.

அதனாலேயே, வழக்கமான பாணியில் பாடங்களை நடத்த முடியாத சூழலில் ஆசிரியர் இருக்கிறார். அதைக்கூட கவனிக்காமல் போனால் நஷ்டம் யாருக்கு? இதை பிள்ளைகளிடம் சொல்லிப் புரியவைத்து, பாடங்கள் நடக்கும்போது, வகுப்பில் இருப்பது போன்ற கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள்தான் அறிவுறுத்த வேண்டும்.

அடுத்தது, இப்படி கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு முடிந்த அளவுக்குத் தொந்தரவுகள் இல்லாத வகையில் பார்த்துக்கொள்வது முக்கியம். வீடு சிறியது என்பதிலிருந்து பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றனவே, என்ன செய்ய என்று சிலர் கேட்கலாம். வீட்டையே மாற்ற முடியாது.

ஆனால் அதன் சூழலைச் சிறிதாவது மாற்றலாம். மேலும், வீட்டில் கஷ்டமான சூழ்நிலை இருப்பதாலேயே மாணவர்கள் நிலைமையை உணர்ந்து, பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

பொதுவாகவே பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் மறக்காமல் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவினால் ஆசிரியருக்கோ, கல்லூரிக்கோ தெரியாமல் வகுப்புகளை, ஒதுக்கிவிட முடியும். ஆனால் அதனால் உண்மையான நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லி வகுப்புகளை கவனிக்கச் செய்ய வேண்டும்.

வகுப்புக்கான ஒழுங்குமுறை

மூன்றாவதாக வகுப்புகள் துவங்குவதற்கு முன்னால், சாப்பிடவோ, அருந்துவதற்கான பானங்களையோ கொடுத்து விட வேண்டும். சாப்பிட்டுக் கொண்டோ, பானங்களை அருந்திக்கொண்டோ பாடங்களை கவனிப்பது முறையல்ல. பாடத்தின் மேல் ஒன்றுதல் ஏற்படுவதை இது தடுக்கும். டிவியில், இணைய தளத்தில் படங்களை, தொடர்களைப் பார்க்கும்போது இருக்கக்கூடிய சூழலை வகுப்புகள் நடத்தும்போது ஏற்படுத்தவே கூடாது.

இதனால், கவனமின்மை ஏற்படும். கல்வி கற்றுக் கொள்கிறோம் என்ற முக்கியத்துவம் உணர முடியாது., மேலும், வேண்டும்போது குறிப்புகள் எடுத்துக்கொள்ளத் தோன்றாத மனநிலை உருவாகும்.

வகுப்புகளின் இடைவேளையில் உங்களது அன்பை, அக்கறையைக் காட்டுங்கள். இது போலத்தான் இருக்கப்போகிறது என்பதை அவர்களுக்கு முன்னரே சொல்லி விடுங்கள். அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவருந்த வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

மேற்பார்வை தேவையில்லை

அடுத்ததாக, ஆசிரியர் எப்படி பாடம் எடுக்கிறார் என்பதை நீங்கள் பக்கத்தில் இருந்து மேற்பார்வை பார்க்காதீர்கள். வீட்டுக்குள் மாணவர் இருக்கிறார் என்பது ஆசிரியர்களுக்கும் தெரியும். தான் நடத்தும் பாடங்களைப் பதிவுசெய்ய முடியும் என்பதும், அதில் குறை காண முடியும் என்பதும் தெரியும். அதனால் அவர்களும் கூடுதல் அக்கறையோடும் முன்தயாரிப்போடும்தான் வருவார்கள். ஆனாலும் தொடர்ந்து தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்னும் உணர்வு ஆசிரியர்களுக்கு ஏற்படுவது நல்லதல்ல.

அவர்கள் பாடம் நடத்துவது உங்களுக்கு அல்ல. மாணவர்களுக்கு. அவர்களது நிலை என்ன என்பதும் அவர்களது புரிந்துகொள்ளும் திறன் என்ன என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் அதன் அடிப்படையில்தான் பாடம் நடத்துவார்கள். உங்களைப் போல கல்வியை முடித்தவர்களுக்கு, அல்லது அனுபவம் உள்ளவர்களுக்காக, சாதித்தவர்களுக்காகப் பாடம் எடுக்கப்படவில்லை. இதை மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களால் உங்களது பிள்ளைகளின் அறிவு நிலை, புரிதல் நிலை, உள்வாங்கும் திறன் நிலை ஆகியவற்றிலிருந்து பாடங்களை கவனிக்கவே முடியாது. அதனால், பாடங்கள் நடத்தப்படும்போது, ‘நீதிபதி’ ஆகிவிடாதீர்கள்.

உலகச் சூழ்நிலை காரணமாக இணைய வழிக் கல்வியைப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் நடத்திவருகிறார்கள். இதனால் தொழில்நுட்பப் புரிதல், பயன்பாடு, கையாளும் திறன் ஆகியன முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இதுதான் அனைவருக்குமான மிகப் பெரிய லாபம். இதைத் தவிர ஏறக்குறைய அனைத்துமே சவால்தான். கற்பிப்பது, கற்றுக்கொள்வது என்ற இரண்டு விஷயங்களுமே பெரும் சிரமங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருகின்றன என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

ஆசுவாசப்படுத்துவது எப்படி?

அடுத்ததாக, பிள்ளைகள் வகுப்புகளை முடித்தவுடன், சிறிது நேரமாவது, வெளியில், மொட்டை மாடியில், கூட்டமில்லாத பக்கத்துத் தெருக்களில், சிறிது நேரம் உலாத்திவிட்டு வரச் சொல்லுங்கள். சிறுவர், சிறுமியராக இருந்தால், அவர்களது உடலுக்கு வேலை கொடுக்கிறாற்போல சிறு வேலைகளை செய்ய விடுங்கள்.

வெகு நேரம் உட்கார்ந்திருந்தவர்களுக்கு உடலுக்கு வேலை அவசியமானது. முதலாவது, அதிக நேரம் உட்காருவதால் சோம்பிப்போயிருக்கும் உடலைப் பழையபடி நடமாடவிடுவது நல்லது. இரண்டாவது. எந்த ஒரு பணியை முடித்த பின்னரும், மனதுக்கு, அறிவுக்கு உடனடியாக வேலை கொடுக்காமல், சிறிது நேரம் உலாவினால், மனம் தானாகவே சற்று முன்பு முடிந்த விஷயத்தை அசைபோடும். இப்படி உலாவும்போது பிள்ளைகள் தங்களையும் அறியாமலே நடந்த பாடங்களைப் பற்றி நினைப்பார்கள்.

இரண்டாவது இன்னும் முக்கியமானது. இப்போது என்ன நடக்கிறது? வகுப்புகள் முடிந்ததும், பிள்ளைகள் உடனடியாக வாட்ஸ் ஆப், முக நூல் என்று உலவத் தொடங்கி விடுகின்றனர். இல்லாவிட்டால், வலைத் தொடர்கள். கேட்டால், “இப்பதான கிளாஸ் முடிஞ்சுது, கொஞ்சம் ரிலாக்ஸ்” என்று சொல்லும்போது, “நியாயம்தானே?” என்று தோன்றலாம்.

ஆனால், வகுப்புப் பாடங்கள், அதில் சொன்னவை ஆகியனவற்றை திரும்பவும் நினைத்துப்பார்க்க மூளைக்கு அவகாசம் கொடுக்காமல், உடனடியாக வேறு வேலை கொடுக்கிறார்கள்.

இதனால், மூளை களைப்படைகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல், புதிய விஷயங்களை உள்வாங்கத் தயாராகிறது.. அதனால் ஏற்படும் பக்க விளைவாக, கற்ற பாடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் புதிய விஷயங்களுக்கு இடம் உருவாக்கப்படுகிறது.

இதை எடுத்துச் சொல்லிப் புரியவையுங்கள். இல்லாவிட்டால், இணைய உலாவலைத் தள்ளிப்போட வையுங்கள். அதேபோல வகுப்புகள் முடிந்ததும், தூங்குவது தவறு. களைப்படைந்த கண்கள், முகத் தசைகள் ஆகியவற்றைக் குளிர்ந்த நீரினால் கழுவச் சொல்லுங்கள். அதன்பின் ஐந்து நிமிடமாவது நடந்துவிட்டு, அதன் பின் வேண்டுமானால், தூங்கலாம்.

அதேபோல வகுப்புகள் முடிந்ததும் அவர்களுக்குப் புரிந்ததா என்பதை சற்று நேரம் கழித்து இயல்பாகக் கேளுங்கள். ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க ஊக்குவியுங்கள். நீங்கள் அதை செய்யாதீர்கள். அவர்கள் ஆசிரியரைப் பற்றிக் குறை சொன்னால், அவர்களுடன் சேர்ந்து நீங்களும் ஆத்திரப்படாதீர்கள். அதே சமயம், “அதெல்லாம் இல்ல, நீ சரியா கவனிக்கலன்னா அவர் என்ன செய்வார்” என்றும் அவர்கள் சொல்வதை ஒரேயடியாக மறுத்துப் பேசாதீர்கள். உண்மையான குறை என்றால், அவரைத் தொடர்புகொள்ளச் செய்யுங்கள். அப்போதும் முடியாவிட்டால் நீங்களே அவரோடு தொடர்புகொண்டு நிலைமையை விளக்குங்கள். நிச்சயம் பலன் இருக்கும்.

**

கட்டுரையாசிரியர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர் மனவள ஆலோசகராகப் பணிபுரிகிறார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவரைத் தொடர்புகொள்ள மின்னஞ்சல்: rawindran@gmail.com, செல்: 98404 14389

**

  • டி..ரவீந்திரன்

30.01.2021   12 : 20 P.M.

Comments (0)
Add Comment