கடைசிக் காலத்தில் சொல்லாமல் விட்டுவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது. அருமை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எனக்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு – ஞாபகமாக எனக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
நான் வட்டார, வழக்குச்சொல்லி அகராதிகளோடு ‘மன்னாடிக்’ கொண்டிருந்த போது “ஏங்கொரங்கே” என்று கேட்பாரில்லைதான். எதிர்பார்த்த நண்பர்களிடமிருந்து ஒன்றுமில்லை. எதிர்பாராத அன்பர்களிடமிருந்து, “ஆதிமூலம்” என்று கூவாமல், “வந்தேன்” என்று வந்தார்கள் உண்டு.
சென்னையிலிருந்த வக்கீல் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவருடைய மேசை மேல் ஒரு புத்தகக்கட்டு இருந்தது. ‘ஏதோ இருக்கு சரி’ என்று நினைத்து இருந்து விட்டேன்.
அதற்குப் பிறகு ஒரு அன்பர் வந்தார். அவர் அந்தக் கட்டைப் பார்த்ததுமே, “ஆஹா தமிழ் லெக்ஸிகன் என்று சொல்லி கிடைக்காது என்று சொன்னார்களே எப்படி வந்தது?” என்று வக்கீல் நண்பர் கே.எஸ்.ஆரிடம் கேட்டார். “நான்தான் வாங்கிக்கொண்டு வந்தேன், எழுத்தாளர் கி.ரா.வுக்குத் தர” என்றார். ‘தேன் பாயுது காதினிலே’ என்றிருந்தது எனக்கு.
எழுந்திருந்து அதை அவிழ்க்கப்போனபோது, “ஊருக்குக் கொண்டு போங்கள்; இங்கே ஆளுக்கு ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரிக்க ஆரம்பித்தால், இப்போ நீங்கள் ஊருக்குப் போக முடியாதே” என்றார்.
இப்படி ஒன்றை எனக்குத் தர வேற யாருக்குத் தோன்றியது? உடனே பிரித்துப் பார்க்கக் கை துறுதுறுத்தது.
இந்தத் தமிழ் லெக்ஸிகன் எனக்கு ஒரு நிழலாக அமைந்தது. கே.எஸ்.ஆரை எப்படிப் போற்ற?
ஒரு சொல்லுக்குப் பொருள் தந்து எடுத்துக்காட்டுக்கு ஒரு தமிழ்க் கவிதை வரியைச் சொன்னது. கவிதை வரிகளையே எடுத்துக் காட்டியதால், இதை தமிழ் உரை நடைக்காகச் செய்யப்படவில்லை; எல்லாம் கவிதைகளுக்கே என்று என் மனசுக்குப்பட்டது.
அதில் முகவீணைக்கு என்ன பொருள் போட்டிருக்கு பார்ப்போம் என்று தேடினேன். முகவீணை இல்லை. இப்படித் தவறுவதும் வழக்கம்தான் என்று எனது வழக்குச்சொல் அகராதியின் முன்னுரையில் சொல்லியிருந்தேன்.
என்னவள் கணவதி மறைந்த பின் தோட்டத்தில் அவள் நினைவாக வீட்டின் பின் தோட்டத்தில் ஒரு பலா மரம் உண்டு பண்ணணும் என்று மனசுக்குத் தோன்றியது. அருமை நண்பர் கே.எஸ்.ஆரின் கையால் நடச் செய்தேன். அந்த மரத்தில் ஒரு பலாச் சுளையைத் தின்னும் வரை நானும் கே.எஸ்.ஆரும் இருப்போம்.
க்ரியாவின் தற்கால அகராதி இரண்டாம் பாகம் வெளிவந்ததும் எனக்கு ஒரு பிரதியை கே.எஸ்.ஆர் வாங்கி அனுப்பி வைத்தார். அதில் முகவீணைக்கு என்ன பொருள் போட்டிருக்கு பார்ப்போம் என்று தேடினேன். முகவீணை இல்லை.
அதை நிறைவு செய்யும் வகையில் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் மூன்றாம் பதிப்பு இப்போது வந்ததில் கே.எஸ்.ஆர் ஒரு பிரதி எனக்கு அனுப்பினார். அதில் தேடினேன். பக்கம் 1075-இல் படத்துடன் வெளிவந்திருக்கிறது.
‘முகவீணை’ என்பது மூங்கிலில் செய்த புல்லாங்குழலில் செய்யப்பட்ட சீவாளியோடு இருப்பது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இதில் அப்படி இல்லை!
அனுசு சொருகிய திமிரி நாயனம் போல் இருக்கிறது. இதை நினைத்த என் பிழையா, யார் பிழை என்று தெரியவில்லை.
திருவிழா தேர் புறப்படுவதற்கு முன் மல்லாரி வாசிப்பதற்கு முன்னால்தான் முகவீணை வாசிப்பார்கள்.
வீணை வாத்தியத் தோற்றத்துக்கும் முகவீணைக்கும் தோற்றத்தில் சம்பந்தமில்லை. வாய் வைத்து ஊதுவது முகவீணை.
நாயனம் (நாதஸ்வரம்) வாசிக்கப்படும் சிரமத்தைக் குறைக்க முகவீணையைத் திருத்திச் செய்யலாமா என்று ஒரு விவாதம் நடந்தது, எங்கள் காலத்தில். அப்போது கு.அழகிரிசாமியும் இருந்தான்.
– 2021, ஜனவரியில் வெளிவந்த ‘கதைசொல்லி’ இதழில் கி.ரா…
29.01.2021 03 : 44 P.M