நினைவில்லமானது வேதா நிலையம்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய ‘வேதா நிலையம்’ வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

இதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர், வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளைச் செய்யலாம் என்பது குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் அளித்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பொருட்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப் பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

28.01.2021 12 : 44 P.M

Comments (0)
Add Comment