அமெரிக்க ராணுவத்தில் அசத்தல் மாற்றம்!

ஒவ்வொரு நாட்டிலும் ராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு வகையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கூந்தலை நீளமாக வளர்க்கக் கூடாது. வளர்த்தால், அதை சிறிய கொண்டையாக மற்றிக் கொள்ள வேண்டும், நகத்தில் வண்ணம் பூசக்கூடாது. தோடு அணியக் கூடாது, மூக்குக் குத்திக் கொள்ளக் கூடாது என்பது உட்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

அமெரிக்க ராணுவத்திலும் பெண்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதை நீக்கி இப்போது அறிவித்திருக்கிறது பென்டகன். அதன்படி, ராணுவத்தில் இருக்கும் பெண்கள், இனி நகங்களுக்கு பாலீஷ் போட்டுக் கொள்ளலாம், கூந்தலை நீளமாக வளர்த்துக் கொள்ளலாம், தோடு அணியலாம் என மாற்றங்களை அறிவித்திருக்கிறது. ஏன் லிப்ஸ்டிக் கூட போட்டுக்கொள்ளலாம். ஆனால், முகத்தில் அடிப்பது போன்ற வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதாவது நீலம், கருப்பு, தீயணைப்புத் துறை சிவப்பு, புளோரசன்ட் வண்ணங்களில் லிப்ஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்வதைப் போல, வீராங்கனைகளும் இனி மொட்டை அடித்துக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்ச அளவு தலைமுடியை அவர்கள் தொடர்ந்து பரமாரிக்க வேண்டும்.

அதே போல தலைமுடியிலும் விதவிதமான வண்ணங்கள் பயன்படுத்தி தங்களை ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நீலம், பச்சை, பிங்க் போன்ற வண்ணங்களை மட்டும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காதுகளில் தோடு அணிந்து கொள்ளவும் இனி அனுமதி உண்டு என்றாலும் பயிற்சி மற்றும் போர்க் காலங்களில் அதற்கு அனுமதி இல்லை.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர், கடந்த ஆண்டு நடத்திய ஆய்வின் அடிப்படையில் உருவான மாற்றங்கள்தான் இதெல்லாம்.

29.01.2021  11 : 50 A.M
Comments (0)
Add Comment