எது அசலான ஆன்மீகம்?

சமூக ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: 2

அழகர் கோவிலைப் பற்றிய உங்களுடைய ஆய்வேடு வந்தபோது அது கவனிப்புக்கு உள்ளானதா?

ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களுமே அதை மிகச் சிறந்தது என்று சொன்னதால் மதுரைப் பல்கலைக் கழகமே அதை நூலாக வெளியிட்டது. ஆனால், வெளியிட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக அண்மைக் காலமாகத்தான் அந்த ஆய்வேடு பலரால் கவனிக்கப்பட்டிருக்கிறது.

கோயிலின் தல புராணத்திற்குப் பின் உள்ளூர்க் கைங்கர்யம் நிறைய இருக்கும். இன்னொரு புறம் அந்தக் கோயிலைப் பற்றிய வாய்மொழிக் கதை மரபும் இருக்கும். அழகர் கள்ளழகராக ஏன் வேஷம் போடுகிறார் என்பதற்குக் கள ஆய்வின்போது நிறைய தகவல்களைச் சேகரித்தேன்.

மக்கள் ஒரு கட்டத்தில் தங்களது கலாச்சாரத்தின் பிரதிநிதியாகக் கடவுளை ஆக்குவார்கள். அப்படி ஆக்கப்பட்ட கோவில்களும் கடவுள்களும் மட்டுமே உயிர்வாழும், மற்றவை பாழடைந்து போய் விடும். பெரும்பாலான தல புராணங்களுக்குள் உண்மையின் துகள்கள்  புதைந்திருக்கும்.

அதைச்சுற்றி ஆசைகள், நம்பிக்கைகள், ஏக்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பௌராணிக மரபுகள் எல்லாம் இருக்கும். தல புராணம் என்பது வேறு, தல வரலாறு என்பது வேறு. கோவிலைப் பற்றி அறிய மக்களின் எழுதப்படாத கதைகள், வெளி உலகம் அதிகம் அறியாத சிறு சிறு சடங்குகள், நியமங்கள் எல்லாவற்றையும் தொகுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்று, அழகர்கோவில் பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டு வேலை செய்வதற்கோ, மாடு மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்குகிற அன்று வேலையை விட்டுச் சொல்லிக் கொள்ளாமலேயே நின்று கொள்ளலாம். அதற்கு முன் நிற்க முடியாது. அதற்கு ‘சித்திரை விடுதி’ என்றே பெயர்.

சித்திரை அன்றைக்கு ஒருவன் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்ளலாம். அப்படி ஒரு எழுதப்படாத சட்டம் மக்கள் வரலாறாக, அதேசமயம் கோவில் சார்ந்ததாகவும் இருக்கிறது.

எழுத்துலக அறிஞர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் புரியாது. அந்த மாதிரி எழுதப்படாத வரலாற்றை நாம் சொல்கிறோம்.

தமிழகம் முழுக்க இருக்கும் தாலாட்டுப் பாடல்களில் அழகருக்கும் மீனாட்சிக்கும் உள்ள அண்ணன் தங்கை உறவு முறையைப் போற்றும் பாடல்கள் அதிகம்.

அண்ணன் தங்கைக்கிடையிலான பாசம் திராவிடக் கலாச்சாரத்தில் அழுத்தம் பெறக்கூடிய உறவு. இது கூட மக்களின் வாய்மொழி வந்த மரபே ஒழிய அரசின் அங்கீகாரம் பெற்ற மரபல்ல.

சட்ட ரீதியாகவோ, சடங்கு ரீதியாகவே இரு தெய்வங்களுக்கும் உறவில்லை. இவை எல்லாமே ஆகமங்களை மீறின செயல்கள்தான். மீனாட்சி- கிறிஸ்துவுக்கெல்லாம் எல்லாம் முற்பட்ட திராவிடப் பெண் தெய்வம். அனேகமாகப் பாண்டியர்களின் குல தெய்வமாக இருக்கலாம்.

இந்தியாவிலேயே தனித்த தன்மையுடைய பெண் தெய்வம். திருமணம் ஆகாத ஒரு கன்னிப் பெண் முடிசூடி ஆளுகிறாள் என்கிற கதை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. அந்த அளவுக்குத் தொன்மையான தெய்வம். இந்த உறவு முறையையும் நான் ஆய்வு செய்து இருக்கிறேன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர்  அனுமதிக்க மறுக்கப்பட்ட மாதிரியான நிலைமை, அழகர் கோவிலிலும் இருந்ததா?

இருந்தது, ஆனால் ராமானுஜர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போது… நிறையக் கோவில்கள் அதன் பழைய ஆச்சாரங்களிலிருந்து நெகிழ்ந்து கொடுத்தன. அவர்தான் மைசூருக்கு அருகிலுள்ள மேலக்கோட்டையில் அரிஜன ஆலயப் பிரவேசத்தைச் செய்து காட்டியவர்.

ஜாதி வேற்றுமைகள் பாராட்டுவதில் வைணவம் நெகிழ்ந்து கொடுத்தபோது, சைவம் இறுக்கமாக இருந்தது. இதை உணர முடிகிறது.

அப்படி இறுக்கமாக இருந்தபோதும் பெருந்தெய்வங்களுடன் மக்களை நெருக்கமாக்குகிற கதை மரபு, சொல்லாடல் எல்லாம் எப்படி உருவானது?

பெருந்தெய்வக் கோயில்களில் உள்ள மக்களின் கற்பித்த முறைகள் எல்லாமே ஆகம விதிகளுக்கு எதிரானவை. ஆகமங்கள் ஒரு போதும் மக்களின் கற்பித உறவுகளை ஏற்பதில்லை. அழகர் கள்ளழகராக வேடம் போடுவதை எந்த ஆகமவிதி ஏற்கும்?

காரமடை ரங்கநாதர் கோயிலுக்கு இருளர்கள் தண்ணீர்ப் பையுடன் வந்து சுத்தம் செய்கிறார்கள். இதை ஆகமம் ஏற்குமா? ஆனால் அன்றைக்கு இருந்த அரசும், அதிகாரிகளும், கோயில் நிர்வாகமும் மக்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் இவற்றை ஏற்றுக் கொண்டன.

சிறுதெய்வ வழிபாடு என்கிற எளிய மக்களுடன் இணைந்த வழிபாட்டை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

சிறுதெய்வம், பெருந்தெய்வம் என்பதெல்லாம் நாம் சௌகரியத்திற்காகப் பயன்படுத்தும் சொற்கள். பெருந்தெய்வங்கள் ஒரே கடவுள் என்கிற கோட்பாட்டை உருவாக்கும். மக்களுடைய தெய்வங்கள் அப்படி அல்ல.

சிறுதெய்வ வழிபாட்டு முறையைப் பலமாக உள்ளிழுத்துக் கொண்டே பெருந்தெய்வங்களே இங்கு நிற்க முடிகிறது. மீனாட்சியை சிவனின் மனைவி சக்தியாகப் பெருவாரியான மக்கள் பார்க்கவில்லை. அவர்கள் தாயாகத்தான் பார்க்கிறார்கள்.

சிறுதெய்வங்கள் என்று நீங்கள் குறிப்பிடுகிற கோயில்கள் சொத்துடைமை நிறுவனங்களாக மாறுவதில்லை. ஆனால், அரசின் ஆதரவு பெற்ற எல்லாக் கோயில்களும் சொத்துடமை நிறுவனங்களாக மாறிவிடுகின்றன.

சிறுதெய்வங்கள் என்கிற கிராமப்புற தெய்வங்கள் எல்லாமே கைகளில் ஆயுதங்களை ஏந்தி இருக்கும். மக்களோடு மக்களாக சில இடங்களில் கூரை இல்லாதபடி நின்று, அவர்களுடைய உணவை உண்டு, உடுத்துபவற்றை உடுத்தி எளிய மக்களின் வாழ்விலும் கனவிலும் கலந்துவிட்டவை அந்த தெய்வங்கள்.

சாதிய அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் பிறப்பதற்கு முன்பே இந்தத் தெய்வங்கள் பிறந்து விட்டன. இந்த ஆன்மிகம் நாட்டு மக்களின் ஆன்மிகம். அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம். மற்றவர்களையும் , மற்றவற்றையும் ஏற்றுக்கொள்கிற ஆன்மிகம்.

இன்றைக்கு கிராமங்களில் மற்ற மதத்தினருடன் ஒரு வித உறவுணர்ச்சியே உண்டு. அதை நகர்ப்புறம் சார்ந்த, படித்த, அதிகார மையங்களில் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இங்கு இருப்பது முழுக்க அதிகாரச் சார்புடைய ஆன்மிகம்.

கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் சிலர் குறுக்கே வந்து நிற்கிறார்கள். நாட்டார் தெய்வங்களில் இந்தப் பாகுபாடு இல்லை.

எவ்வளவு தூரம் மக்கள் ஒரு கோயிலுக்கு வந்து கூறுகிறார்களோ, அந்த அளவுக்கு அங்கே அதிகார மையம் உருவாக்கப்படுகிறதா? உதாரணத்திற்கு, பழனி கோயிலுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு பூஜை செய்யும் உரிமை பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து பறிபோனதாகச் சொல்லப்படுவது உண்மைதானா?

மிகப்பெரிய ஆன்மிக மையமாக விளங்குகிற கோயிலை அரசு அதிகாரம் தனக்கென எடுத்துக்கொள்கிறது. பழநி கோயிலில் முன்பு பூஜை செய்தது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் தளவாயாக இருந்த ராமப்பையன் இன்னொரு சமூகத்தினர் கையிலிருந்து திருநீறு வாங்குவதை விரும்பவில்லை.

இதையடுத்து அங்கு பூஜை செய்யும் உரிமை பிராமணர்களுக்கு மாறுகிறது. இதே மாதிரி கதைப் பாடல்களின் படி பார்த்தால் ராமேஸ்வரம் கோயிலிலும் பூஜை செய்திருப்பது பிற்படுத்தப்பட்ட சமூகம்தான்.

பிறகு அங்கும் மாற்றப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரம் உள்ளே நுழைய நுழைய எளிய மக்கள், உணர்வு ரீதியாக அந்தக் கோயிலில் இருந்து விலகி விடுகிறார்கள்.

அதிகாரம் குறுக்கே பாய்ந்தால் மக்கள் விலகி விடுவது காலம் காலமாக நடக்கும் பழக்கம். மக்கள் எங்கே பெருந்திரளாக கூடுகிறார்களோ அந்த ஆன்மிக மையங்களை தனதாக்கிக் கொள்ள எந்த அரசும் முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கும்.

பாண்டிய அரசோ, சோழ அரசோ அல்லது இன்றைக்கு இருக்கிற அரசுகளோ உடனடியாக கோயில்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகிறதே!

கிராமப் புறங்களில் இருக்கிற நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்துடன் தான் பின்னிப் பிணைந்திருக்கின்றனவா?

இன்றைக்கு சில குடும்பங்களுக்கான தெய்வங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சாதியினருக்கான தெய்வங்கள் இருக்கின்றன. சமூகத்தின் மேல் அடுக்குகளில் உள்ள சாதியினர் பெரும்பாலும் இந்தக் கோவில்களுக்கு வருவதில்லை. மூன்று, நான்கு பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு சேர்ந்து சில குல தெய்வங்கள் இருக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் பெரும்பாலானவை மூன்று அல்லது நான்கு சாதிகளுக்கு பொதுவானவையாகவே இருக்கும். திருவிழா அன்று மட்டும் எல்லோரும் கூடுவார்கள்.

ஓராண்டு காலமாக அவர்கள் அந்தத் தெய்வத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவனுக்கு ஒரு சிக்கல் வருகிறபோது கோயில் இருக்கும் திசையை நோக்கி கும்பிடுகிறான். நேர்ந்து கொள்கிறான்.

அவனுடைய கடந்த கால நினைவுகளோடும் மூதாதையர்களின் நினைவுகளோடும் கலந்து செய்யப்பட்ட உணர்வுடன் இருக்கிறது அவனது நாட்டார் தெய்வம்.

இப்படிப் பிணைந்திருக்கிற உறவுகளை வலுவிழக்கச் செய்யும் விதத்தில் சபரிமலை, திருப்பதி, மேல்மருவத்தூர் என்று பொதுவான தெய்வங்களை நோக்கி நகர்த்திச் செல்லும் முயற்சியும் வெவ்வேறு விதத்தில் நடக்கிறதே. இதைத் திசை திருப்பும் காரியமாக நினைக்கிறீர்களா?

சபரிமலை ஆகட்டும், மேல்மருவத்தூர் ஆகட்டும் அவையெல்லாம் மத்திய தர வர்க்கத்து ஆன்மிகம். அடித்தள, எளிய மக்களின் ஆன்மிகம் அல்ல. எளிய மக்களின் கனவில் ஒருபோதும் சிவபெருமான் வரமாட்டார்.

அவர்களுடைய குலதெய்வம் தான் வரும். அதனால் மூதாதையர்களின் நினைவுகளுடன் பிணைந்திருக்கிற இந்த வழிபாட்டு உறவை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியாது.

கிராமப்புற தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் என்று தூக்கிப் பிடிப்பதன் மூலம் பழைய நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தையும் மதிப்பீடுகளையும் தூக்கிப் பிடித்து, அதை நியாயப்படுத்த மாதிரி தோன்றாதா?

பிரபுத்துவம் என்கிற சொல்லே நாட்டார் தெய்வங்கள் உடன் சேர்க்க முடியாத சொல்தான். இந்தத் தெய்வங்களை வழிபடுபவர்கள் யாரும் நிலப்பிரபுக்கள் அல்ல. நிலமானிய முறை உற்பத்தி செய்த சில மதிப்பீடுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டார் தெய்வங்கள் நேரடியாக உற்பத்தித் தளத்துடன் தொடர்புடையவை.

மாரியம்மன் மழையோடும், அடுத்தப் பருவ பயிருடனும் தொடர்புடைய தெய்வம். இதேமாதிரி கிராமத் தெய்வங்கள் இன்பத்தை மட்டுமே கொடுக்கக் கூடிய தெய்வங்கள் அல்ல.

இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுக்கிற தெய்வங்கள். நிலமானிய மதிப்பீடுகள் நில உடமையாளர்களுக்குச் சாதகமாக இருந்ததே தவிர, அதை எல்லோருமே சேர்ந்து தான் உருவாக்கினார்கள். ஆகவே, நிலப்பிரபுத்துவ ஆன்மிகம் வேறு, இந்த எளிய மக்களின் ஆன்மிகம் வேறு.

இருந்தாலும் இன்றைக்கு நாட்டார் தெய்வங்களுக்கான மரபு, அதற்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது? அதற்கான தேவை இப்போது இருக்கிறதா?

இருக்கிறது. ஒரே தெய்வக் கோட்பாடு என்பது அரசு உருவாக்கத்திற்குத் தேவையானது. “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்பதெல்லாம் மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றே நான் கருதுகிறேன்.

இந்துத்துவவாதிகளைக் கேட்டால் ‘ஒன்றே குலம்; எல்லோரும் இந்தியர்’ என்கிறார்கள். ‘ஒருவனே தேவன் என்றால் ‘ராமன்’ என்கிறார்கள். ஆனால், பன்முகத் தன்மையுள்ள கலாச்சாரத்தைப் பேணிக் காப்பவை இந்த நாட்டார் தெய்வங்கள். இந்தப் பன்முகத் தன்மையை எதிரொலிக்கிறவரை மட்டுமே சமூகம் ஜனநாயகத் தன்மையுடன் இயங்கும்.

ஒரே கடவுளை எப்போது கொண்டுவந்து நிறுத்துகிறீர்களோ அப்போது பலதரப்பட்ட தெய்வங்களை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். இன்றைய தேவை ‘எல்லோரும் நூறு நூறு தெய்வங்களைக் கும்பிடுங்கள்’ என்பது தான்.

ஏனென்றால் நூறு வகைப்பட்ட மனிதர்களை, நூறு வகைப்பட்ட நம்பிக்கைகளை, நூறு வகைப்பட்ட வழிபாட்டு முறைகளை நாம் அங்கீகாரம் செய்தாக வேண்டும். அப்படி இருந்தால்தான் நாம் ஜனநாயக ரீதியாக இயங்குகிறோம் என்று பொருள்.

மறுபுறம் இன்றைக்கு ஆன்மிகத்திலும், அரசியலிலும் மையப்படுத்துகிற வேலை நடக்கிறது. அப்படி நடக்கும்போது பல விஷயங்கள் அடிபடுகின்றன. இப்படி அடிபட்டு ஒற்றைக் கலாச்சாரம் ஒன்று உருவாவதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

சுதந்திரப் போராட்டத்தின் இடைப்பகுதியில் விநாயகரைக் கொண்டு வந்தபோது, அது இந்தியத் தேசியத்திற்கு உதவும் என்று நினைத்தார் திலகர். இன்றைக்கு ராமர் தேவை என்று இன்னும் சிலர் நினைக்கிறார்கள். இந்த இரண்டையும் நாம் ஏற்க முடியாது.

இந்தத் திணிப்புக்குப் பின்னால் வலுவான படி அரசியல் இருக்கிறதா?

அது வெளிப்படையாகவே தெரிகிறதே. அதிகாரத்தை குவித்து வைக்கும் நோக்கிலேயே இதெல்லாம் நடக்கின்றன. குவிக்கப்பட்ட அதிகாரங்கள் எப்போதும் பெருவாரியான மக்களுக்கு எதிராகவே இருக்கும். சமூக விடுதலை, அரசியல் விடுதலை என்று நாம் சொல்கிற எல்லா விஷயங்களுக்கும் எதிரான போக்கு இது.

இன்னொரு புறத்தில் கோயிலில் நுழைய அனுமதி இல்லாமல், வழிபாட்டு உரிமை இல்லாமல், சமூகத்தின் பல தளங்களில் ஒதுக்கப்பட்டதால் தானே, ஒருவன் அந்த மதத்தை விட்டே மாறிப் போகும் சூழ்நிலை உருவானது?

மதமாற்றத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பிற மதங்களினால் ஈர்க்கப்பட்டு அவர்கள் சென்றார்கள் என்பதை விட, எந்த இடத்தில் இருந்தார்களோ, அந்த இடத்தில் அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பது தானே உண்மை.

குறிப்பிட்ட கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று அவர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள். எந்தக் கோயிலுக்குள் போக முடியுமோ அந்தக் கோயிலுக்குள் அவர்கள் போய்விட்டார்கள். அவர்கள் போனார்கள் என்று சொல்வதைவிட, விரட்டப்பட்டார்கள் என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்.

கிறிஸ்தவம் இங்குள்ள ஜாதி முறையை அப்படியே பேணிக் கொண்டது. இஸ்லாம் சாதி முறையை ஒதுக்கியது. இதன்மூலம் சாதியில் மேல், கீழ் என்கிற அழுத்தமான பாகுபாடு சற்று விலகி விட்டது இல்லையா?

இந்தச் சூழ்நிலைகளை திராவிட இயக்கங்கள் சரிவர உணர்ந்து செயல்பட்டனவா?

இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கங்கள் வந்தபிறகு மேல்சாதி ஆக்கம் என்பது தோற்றுப் போய்விட்டது. மதத்தின் தத்துவச் சண்டைகளை தனது வருகையின் மூலம் நிறுத்தி வைத்தன இந்த இயக்கங்கள்.

ஆனால் பெரியார் மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடுகள் பாராட்டுவதைக் கண்டித்தார். ‘குடியரசு’ இதழில் எழுதினார். இடதுசாரி ஆராய்ச்சியாளர்கள் மீது எனக்குக் கடுமையான கோபம் உண்டு.

அவர்கள் திராவிட இயக்க எழுத்தை விமர்சித்தார்கள். ஆனால் அதை முழுமையாகப் படிக்கவில்லை. பெரியாரின் எழுத்துக்களைப் படிக்காமலேயே அவரை நிராகரித்தார்கள். இது பெரிய தவறு.

வர்க்கத்துக்கும், சாதிக்குமான உறவை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர் பெரியார். வர்க்கத்தின் மூல வடிவமாகத்தான் சாதியைப் பார்த்து, சாதி ஒழிப்பில் கவனம் செலுத்தினார். இடதுசாரிகள் அப்படிச் செய்தார்களா?

கீழ்வெண்மணியில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட போது,  நிலக் கூலிகள், தொழிலாளர்கள் என்பதால் மட்டும் கொளுத்தப்படவில்லை. சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலும் கொளுத்தப்பட்டார்கள்.

பொதுவுடமை எழுத்துக்களில் இது பதிவாகவில்லை. அவர்களுடைய வர்க்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்ட அளவுக்குச் சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தத் தவறை இப்பொழுது உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

97-ல் மதுரையில் பெரியாரைப் பற்றி மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடத்தினோம். பொதுவுடமைச் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகம் முழுக்க இருந்து வந்திருந்தார்கள். அதன் முடிவில் வலியுறுத்தப்பட்ட விஷயம் ‘பெரியாரை மீட்டெடுக்க வேண்டும்’.

1954-ல் ஏ.எஸ்.அய்யங்கார் ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற புத்தகத்தில் “பெரியாரை நமது தோழர்கள் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை…” என்று வருத்தப்படுகிறார். அந்த வருத்தத்திற்கான காரணங்கள் இன்னும் இருக்கின்றன.

இப்படி நீங்கள் சொன்னாலும் இங்கு சாதியக் குரல்கள் தானே வலுவாகக் கேட்கின்றன?

இதுவரைக்கும் குருடர்களும், செவிடர்களுமாக யார் அடக்கி வைக்கப்பட்டிருந்தார்களோ அவர்களுக்கு இப்போது பார்வை கிடைத்திருக்கிறது. காது கேட்கிறது. இதுவரைக்கும் இங்கே அமைதி நிலவுவதாகச் சொல்லப்பட்டதெல்லாம் மயான அமைதி. இதிலிருந்து வெடித்துக் கிளம்பும் குரல்கள் கலகக் குரல்களாகத்தான் இருக்கும்.

ஒடுக்குமுறைகளுக்குள்ளானதை எப்போது உணர்கிறானோ, அப்போது ஒருவன் பெருமூச்சு விடுகிறான்; முணுமுணுக்கிறான். அதற்கடுத்துக் கலகக்குரல் எழுப்புகிறான்; இப்போது எழுந்திருக்கிற கலகக்குரல்கள் நிரந்தர அமைதியை நோக்கிச் செல்லக் கூடியவை. நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

இன்றைக்கு மறுவாசிப்பு, மறுபார்வை, மேல் சிந்தனை என்கிற சொற்றொடர்களை எல்லாம் நீங்கள் கேட்டிருக்கலாம். இதுவரைக்கும் எது வரலாறு என்று சொல்லப்பட்டதோ, அதுவல்ல வரலாறு. எது ஆன்மிகம் என்று சொல்லப்பட்டதோ, அதுவல்ல ஆன்மிகம். ஒரு மாற்றுக் கலாச்சாரம், ஒரு மாற்று வரலாறு பதிவு செய்ய இன்றைக்கு எழுத்துலகம் முன்வருகிறது.

யாருடைய குரல்கள் பதிவு செய்யாமல் விடுபட்டதோ அந்தக் குரல்களைப் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.

“எழுதப்பட்ட வரலாறை எல்லாம் திருத்தி எழுதுவது தான் நமக்கு முன்னுள்ள வேலை” என்றார் வரலாற்று ஆசிரியரான டி.டி.கோஸாம்பி. இதுவரை எழுதப்பட்டதெல்லாம் அரசர்களின் வரலாறு. மேல்சாதியினரின் வரலாறு.

இதுவரை பேசப்பட்டது எல்லாம் மேல்சாதியினரின் இலக்கியம்; மேல் ஜாதியினருக்கான கலைகள்; பெருவாரியான மக்கள் திரளின் வரலாறு, இலக்கியம், கலைகள் எங்கே போயின? இதைச் சொல்வது தான் மாற்றுக் கலாச்சாரம். இதைக் கூட ஒரு வசதிக்காக மாற்றுக் கலாச்சாரம் என்று சொல்கிறோமே தவிர, இதுதான் உண்மையான கலாச்சாரம், உண்மையான வரலாறு.

சந்திப்பு: மணா

(நேர்காணல் தொடரும்)

28.01.2021 3 : 30 P.M

Comments (0)
Add Comment