வெளிநாட்டவர்களும் அசாமின் சிக்கல்களும்!

தேர்தல் களம்: அசாம் 2

அசாம் இன்றைய காலகட்டத்தில் குழப்பம் சூழ்ந்த மாநிலமாக, பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், உண்மையில் இது மிக அழகான இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதி. இந்த இயற்கை வளத்தில் எண்ணெய் வளமும் அடங்கும்.

ஆசியாவிலேயே இங்குதான் முதன்முதலாக எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டு, துரப்பணப் பணி துவங்கப்பட்டது. டிக்போல் என்ற இடத்தில், 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 100 வருடங்களாக இங்கே எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இது மட்டுமின்றி, இதுதான் உலகத்தின் மிகப் பழமையான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும்கூட.

இயற்கை வளம்

அஸ்ஸாம் மாநிலத்துக்குள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணெய் வயல்கள், அதாவது எண்ணெய் கிடைக்கும் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி இடங்கள் கிட்டத்தட்ட 18 இடங்கள் உள்ளன.

இவற்றுடன் கூட மிக வளமான விளைச்சல் பூமியைக் கொண்டிருப்பதும் அசாம்தான். இதன் காரணம், ஜீவநதியான பிரம்மபுத்ரா, இன்னொரு மாபெரும் நதியான பாரக் ஆகியவற்றின் கரைகளிலும் உட்புறங்கள் அடங்கியதுதான் அசாம் மாநிலம். உலகத்திலேயே மிக அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி என்று பாடத்தில் படித்திருப்போம். அதுவும் இங்குதான் இருக்கிறது.

முக்கியத் தொழில்கள்

இவை தவிர பட்டு உற்பத்திக்குப் பேர் போன இடங்களில் ஒன்றான கௌஹாத்தி அசாமின் புகழ் பெற்ற நகரம். இவற்றுடன்கூட, அசாமின் தேயிலை உலகப் பிரசித்தம். இந்தியாவின் தனிப் பெரும் பெருமைகளில் அசாம் தேயிலையும் ஒன்று.

இந்தத் தேயிலைத் தோட்டங்கள், அசாமின் பொருளாதாரத் தூண்களில் மிக முக்கியமானவை என்றால் மிகையாகாது. இதெல்லாம் போதாதென்று, அசாமின் மிக முக்கியமான வருவாய், சுற்றுலாத் தலங்கள் மூலமாக வருகிறது. மிக அரிய விலங்குகளான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், ஆசிய யானை ஆகியவற்றின் புகலிடமாக, வளர் கேந்திரமாக அசாம் உள்ளது.

கௌஹாத்தியில் பட்டுச் சந்தைகள், உலகப் புகழ்பெற்ற தீர்த்த யாத்திரைத் தலங்களான, ஹாஜோ மற்றும் மன்மதக் கடவுளான காமதேவனின் கோவிலும், பெண்மையைப் போற்றும் காம்காய் தேவதைக் கோவிலும் இங்குதான் இருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், காடுகளும், வளம் மிகுந்த பள்ளத் தாக்குகளும், வளமான பூமியும், சரித்திரப் புகழ்ப் பெற்ற பல இடங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் மாநிலம் அசாம்.

வளம் தரும் வாய்ப்புகளும் பிரச்சினைகளும்

இது என்ன சுற்றுலாக் கையேடா என நினைக்க வேண்டாம். இத்தனை வளங்கள், பல்வேறு விதமான தொழில்கள், வளமான பூமி ஆகியவை இருப்பதால், யார் போனாலும் பிழைக்க வழி இருக்கிறது.

இதுதான் இந்த மாநிலம் ஆரம்பத்திலிருந்தே போராடிவரும் அகதிகள், ஊடுருவல் பிரச்சினைகள், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிகள் போன்றவற்றிற்குக் காரணம். குடியேறிவர்கள் பெரும் பேரோடும் செல்வாக்கோடும் அதிகாரத்தோடும் இருக்கிறார்கள். இது எங்கேயும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எங்கு திரும்பினாலும் வளம், வேலை வாய்ப்புகள், எளிதாகக் குடியேறக்கூடிய நிலை, எல்லைப்புற மாநிலமாக இருப்பது போன்றவை இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

மேலும் இந்த மாநிலத்தின் எல்லைகளைப் பார்த்தாலே, சரியாக மாட்டிக் கொள்கிறாற்போன்ற இடத்தில் இருப்பது தெரியும். வடக்கில் பூட்டான் மற்றும் மணிப்பூர். கிழக்கில் மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோராம். தெற்கில் பங்களாதேஷ். மேற்கில் மேற்கு வங்களம்.

இதைப் பார்த்தாலே ஒரு விஷயம் விளங்கும். அசாமைப் போல இயற்கை வளங்கள், எண்ணெய் வளங்கள், வளமான பூமி, தேயிலைத் தோட்டங்கள் ஆகியவை மற்ற மாநிலங்களில் இல்லை. பங்களாதேஷ் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இந்த ஊடுருவல், அகதிகள் வருகை ஆகியன பிரிட்டிஷ் காலத்திலிருந்தே ஆரம்பித்த ஒன்று. போதாக்குறைக்கு, பாகிஸ்தானோடு, நடந்த மூன்று யுத்தங்களின்போதும் வந்தவர்கள் இங்குதான் நுழைந்து ஆங்காங்கே தங்கிக்கொண்டார்கள்.

அசாமியர்கள் யார் என்பதைக் கணக்கெடுக்கும் தேசிய பதிவுப் பணிக்கான மூல காரணம் பாஜக அல்ல. அசாமில் முதல் தேர்தல் நடந்தது 1952. ஆனால் 1951லேயே கணக்கெடுக்கும் (என்ஆர்சி) பணி துவங்கிவிட்டது. பல்வேறு காரணங்களால் அது முடித்து வைக்கப்படவில்லை. இப்போது பாஜக அதைக் கையிலெடுத்திருக்கிறது.

அசாமில் குடியேறிய அகதிகள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு ராஜ்ஜியத்தையே உருவாக்கிக் கொண்டு விட்டனர் என்பது பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு. அசாமின் முதல் பெண் முதலமைச்சர் திருமதி சையது அன்வாரா, சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறி அங்கேயே தங்கி விட்டவர். சமீபக் கணக்கெடுப்பில் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது.

முப்பத்து மூன்று மாவட்டங்களும் 126 சட்டமன்ற தொகுதிகளும் கொண்டது அசாம் மாநிலம். சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி 19 லட்சம் பேர் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியுள்ளனர் எனக் கண்டறியப்பட்டு அவர்களை இந்த நாட்டின் குடிமக்கள் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் சரிதான், இவ்வளவு பேர் குடியேறும்போதும், தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும்போதும் அசாமியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வந்தவர்கள் மிகத் திறமையாகவும் அன்றைய ஆட்சியாளர்களின் ஆதரவோடும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஓட்டு வங்கி என்ற பலமான ஆயுதத்தைப் பயன்படுத்தினர். அகதியாக வந்த ஒருவர், இன்றைக்கு உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர். இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர். ஒரு கட்டத்தில் மாநில அரசில் அவரது கட்சிதான் பிரதான எதிர்க் கட்சி.

அசாம் இனப் பெருமை

அசாம் மக்கள் அந்த அளவுக்குத் தங்களது அடையாளங்களை மறந்தவர்களா என்ற கேள்வி எழலாம். ஆனால் விசித்திரமான உண்மை என்றால், அங்கே இனப் பெருமை மிக ஆழமாக இருக்கிறது. பல்வேறு இனங்கள் இருக்கின்றன. தங்களுக்கான அடையாளங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று போராடி உரிமைகளையும் பெற்றுள்ளார்கள்.

இதன் அடையாளமாக அவர்கள் இருக்கும் பகுதிகள் தன்னாட்சி பெற்ற கவுன்சில்களாக இன்றும் இருந்து வருகின்றன. அவற்றில் மூன்றைப் பற்றி பெரும்பாலோர் அறிந்திருக்கலாம்.

போடோலாண்ட் தன்னாட்சி எல்லைப்புற கவுன்சில், கர்பி தன்னாட்சி கவுன்சில், மற்றும் டிமா சுயாட்சிக் கவுன்சில் என்று இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆறு தன்னாட்சி கவுன்சிகள் இருக்கின்றன.

அந்த அளவுக்கு அசாமிய மக்கள் தங்களது அடையாளத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்தாம். அப்படியானால் இந்த அளவுக்கு வெளிநாட்டுக்காரர்கள் ஊடுருவியது எப்படி, தங்களை ஸ்தாபித்துக் கொண்டது எப்படி, தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்தது எப்படி என்று கேட்கலாம். அதைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லையா என்ற நியாயமான கேள்விகள் எழலாம்.

வெளியிலிருந்து வந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினையை அந்த மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த அசாமியர்கள் தங்களுக்கென்று சுயாட்சிக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். யார் மிக அதிகமாகப் போராடுகிறார்களோ அவர்களுக்கான சுயாட்சி உரிமையை அரசாங்கம் கொடுத்து வந்தது.

இது தனியாக நடந்தது. அதே சமயத்தில், சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்களைப் பற்றி அரசு பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்னும் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது இருக்கிறது.

ஆனால் இதையே முன்வைத்து மிகப் பெரிய இயக்கங்கள் சாத்வீகமாகவும் வன்முறையின் வழியிலும் போராடிக் கொண்டுதான் வந்திருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தனக்கே உரிய பாணியில் இதைக் கையாண்டது.

அதாவது, உள்ளூர் பிரச்சினைகளோடு கலந்து இதைத் திசைத் திருப்பியது. அந்நியர் ஊடுருவலை முன்வைத்துப் பல காலம் போராடிய அசாம் கண பரிஷத், காங்கிரசை தேர்தல்களில் தோற்கடித்து இரண்டு முறைகள் ஆட்சியும் அமைத்தது.

இந்த நிலையில் பாஜக என்ன செய்து நிலைமையை மாற்றியது என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)

27.01.2021 05 : 25 P.M

Comments (0)
Add Comment