என்னால் தப்பித்த ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்!

ஒசாமஅசா தொடர்; 18   எழுத்தும், தொகுப்பும்; மணா

எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்களில் இடம்பெறுகின்றவற்றை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார். அவருடைய படப் பாடல்களை முன்கூட்டியே பிறருக்குப் போட்டுக் காண்பித்து கருத்துக் கேட்பார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை ரிக்கார்டு பண்ணிய பிறகு என்னையும் சேர்த்துச் சிலரிடம் அதைப் போட்டுக் காண்பித்தார். அந்தப் பாட்டைக் கேட்டு முடிந்ததும் நான் சும்மா இருக்கவில்லை. அந்தப் பாடலை என்னுடைய போக்கில் பாட ஆரம்பித்தேன். அதைக் கேட்பதற்கு அபஸ்வரமாக இருந்திருக்கும்.

நான் பாடுவதைக் கேட்ட எம்.ஜி.ஆர். என்ன நினைத்தாரோ என்னிடம் சொன்னார். “அது அப்படி இல்லை”.

“அது அப்படியே இருக்கட்டும் சார்.. நான் எனக்குத் தோன்றபடி பாடுறேன்”.

“இன்னொரு தடவை இந்தப் பாட்டை நீங்க இப்படிப் பாடினீங்கன்னா இந்தப் பாட்டை படத்திலிருந்தே எடுத்துருவேன்!” கண்டிப்புடன் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“சார்… நான் பாடுறதினாலே அப்படியொரு பிரச்சனை வர வேணாம்” என்று சொல்லி நான் பாடுவதை நிறுத்திவிட்டேன். அந்தப் பாடல், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு முதல் பாடல் என்று நினைக்கிறேன்.

நியாயமாகப் பார்த்தால் அந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம் பெற்றதுக்குக் காரணமே நான்தான். நான் அன்றைக்கு எம்.ஜி.ஆர். சொன்னதை மீறி என்னுடைய குரலில் பாடியிருந்தால் மறுபடியும் கேட்ட எரிச்சலில் அந்தப் பாடலையே படத்திலிருந்து தூக்கியிருப்பார் எம்.ஜி.ஆர். எப்படியோ தப்பித்தது அந்தப் பாடல்.

‘முகமது பின் துக்ளக்’ நாடகம் அப்போது எல்.பி. ரிக்கார்டாக வெளிவந்தது. அதற்கான விழா நடந்து எம்.ஜி.ஆர். தான் அதை ரிலீஸ் பண்ணினார்.

எம்.ஜி.ஆர். அதை ரிலீஸ் பண்ணும்போது ரிக்கார்டை ரிக்கார்டு என்று சொல்லாமல் “முகமது பின் துக்ளக் அருமையான நாடகம். அதன் ‘தஸ்தாவேஜு வந்திருக்கிறது’ என்று வார்த்தைக்கு வார்த்தை தஸ்வாவேஜீ” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

இவர் பேசியதும் அடுத்துப் பேசியவர்களும் எம்.ஜி.ஆர். சொன்ன அதே பாணியில் “தஸ்தாவேஜு” என்று ரிக்கார்டைக் குறிப்பிட ஆரம்பித்ததும் எனக்கு சங்கடமாகிப்போய் விட்டது.

நான் பேச வந்தபோது “யாரும் இங்கே பேசினவங்க சொன்ன மாதிரி கடைக்குப் போய் “தஸ்தாவேஜு கொடுங்க”ன்னு கேக்காதீங்க. கேட்டால் சிரிப்பார்கள். சிலர் கோபப்படவும் செய்யலாம். அதனால் பேசாம ரிக்கார்டுன்னே கேளுங்க தப்பில்லை” என்று எம்.ஜி.ஆரின் பேச்சைத் திருத்தி நான் அதே மேடையில் பேசியபோதும் அவர் கோபித்துக் கொள்ளவேயில்லை.

அ.தி.மு.க கட்சியை அவர் துவக்கியதும் நான் தொடர்ந்து பத்திரிகைகளில் விமர்சிக்க ஆரம்பித்த பிறகு அவருடன் நடிப்பதைக் குறைத்துக் கொண்டேன். அதிலே ஒன்றும் தப்பு கிடையாது.

ஒரு பக்கம் அவரை விமர்சித்துக் கொண்டு அவருடன் படங்களில் சேர்ந்து நடித்தால் ஜனங்களுக்குத்தான் குழப்பமாக இருக்கும். இருந்தாலும் என் மீது அவர் கோபமாக இருந்ததில்லை.

எங்களுடைய நட்பு தொடர்ந்தது.

அடிக்கடி போனில் பேசுவார். “நான் தான் பேசுறேன்” என்று அவர் ஆரம்பிக்கும்போது நாமாக அவர் தான் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவருடைய வள்ளல் தன்மையை நான் அடிக்கடி பாராட்டி எழுதியிருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் அதைப் பண்ணவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதெல்லாம் அவருக்குப் பிடித்திருந்தன.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த நேரத்தில் அவருடைய கட்சியில் பதினெட்டு எம்.பி.க்கள் இருந்தனர். மத்தியில் இருந்த ஜனதா கூட்டணி ஆட்சிக்கு ஒரு நெருக்கடி உருவாகியிருந்த நேரம் அது.

அதனால் அ.தி.மு.க.வின் பதினெட்டு எம்.பி.க்களின் ஆதரவு ஜனதா கட்சிக்கு அப்போது தேவையாக இருந்தது. மொரார்ஜிக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். சினிமா நடிகராக இருந்துகொண்டு மதுவிலக்கில் அவர் காட்டிய தீவிரம் மொரார்ஜிக்குப் பிடித்திருந்தது. மொரார்ஜியை எம்.ஜி.ஆர். ‘பெரியவர்’ என்றுதான் சொல்வார்.

அப்படிப்பட்ட மொரார்ஜிக்கு தேசிய அளவில் ஆதரவு தேவைப்பட்டதால் நான் எம்.ஜி.ஆரிடம் பேசினேன். “சரி, நாம பண்ணலாம். ஆனால் டெல்லிக்குப் போய் அங்கிருக்கிற நிலைமையைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வர்றேன்” என்றார். “நீங்களும் வாங்க” என்று என்னையும் டெல்லிக்கு அழைத்தார். போனேன். கூடவே ராஜாராமும் வந்தார். டெல்லியில் செழியன் இருந்தார்.

எம்.ஜி.ஆர். டெல்லிக்குப் போய் பலரையும் சந்தித்தார். சரண்சிங்கையும் சந்தித்தார். ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற ராஜ்நாராயணனையும் சந்தித்தார். அவர்கள் எல்லாம் வேறுவேறு கூட்டணிக் கணக்குகளை எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருந்தார்கள். அதை அவரால் நிராகரிக்க முடியவில்லை. இதெல்லாம் எனக்குத் திகிலை ஏற்படுத்தியது.

இவர் தரப்பில் இருந்த பதினெட்டு எம்.பி.க்களின் ஆதரவு குறித்து எம்.ஜி.ஆர். கொடுக்கவில்லை. அவர் பண்ணிய தாமதத்தால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை.

அதற்குள் மொரார்ஜி பதவியை ராஜினாமா பண்ணி விட்டார். சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனால் மெஜாரிட்டி இல்லாததால் அவருடைய அரசு காபந்து சர்கார் ஆனது.

அதற்குப் பிறகு சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

பிறகு ஜனதா கட்சிக்கு ஜெகஜீவன்ராம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரண்சிங்கிற்குப் பிறகு யார் என்கிற நெருக்கடி. அடுத்தது யார்? அப்போது பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியான சஞ்சீவ ரெட்டி தயாராக இருந்ததாகச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன.

ஜெகஜீவன்ராம் எனக்கு அப்போது போன் பண்ணினார். எம்.ஜி.ஆரின் ஆதரவை அவர் விரும்பினார்.

எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டேன். ஜெகஜீவன்ராம் பேசியதைப் பற்றிச் சொன்னேன். “நீங்க ஆதரவு கொடுத்து மத்தியில் ஆட்சி நின்றது என்றால் டெல்லியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் அமைச்சரவையிலும் பங்கேற்கலாம்” என்றேன். (அப்போது சரண்சிங்கின் காபந்து சர்க்காரில் இரண்டு அ.தி.மு.க அமைச்சர்கள் இருந்தனர்).

விவாதத்துக்குப் பிறகு ஜெகஜீவன்ராம், இரண்டு தலைவர்களிடம் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்துவிடச் சொன்னார். எம்.ஜி.ஆர். சரியென்று ஒப்புக் கொண்டார். வாஜ்பாய், ரவீந்திர வர்மா, சுப்பிரமணியசாமி உட்பட மூன்று பேர் சென்னைக்கு வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனேன்.

அவருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தினோம். ஒரு வழியாக எம்.ஜி.ஆர் ஆதரவு அளிப்பதாகச் சொன்ன விஷயத்தை உடனே மீடியாவிடம் அறிவிக்கச் சொன்னேன். ரவீந்திரவர்மா அதற்குத் தயங்கினார். காத்திருந்தார்கள். ஜனாதிபதி சஞ்சீவரெட்டி மீது எனக்கிருந்த சந்தேகத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லியும் பலனில்லை.

வாஜ்பாய் நேரடியாக ஜெகஜீவன்ராமிடம் பேசியபோது அவர் மாலைவரை காத்திருப்பதாகச் சொன்னார். சிறிது நேரத்திற்குள் பி.டி.ஐ. நிருபர் வந்து எங்களிடம் ஒரு தகவலைச் சொன்னார். “சஞ்சீவ ரெட்டி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.”

எம்.ஜி.ஆர். சரியான நேரத்தில் முடிவெடுத்தும் அதை அறிவிப்பதில் தாமதம் காட்டியதால், அதற்குள் அரசியல் சூழ்நிலை மாறி விட்டது. இந்திரா காந்தி வென்ற பிறகு எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கலைக்கப்பட்டது.

அந்தச் சமயத்தில் தினமும் இரவு எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன். பல தொகுதிகளைப் பற்றிப் பேசினோம். ஆட்சி கலைத்ததற்காக அவர் கொஞ்சமும் கலங்கவில்லை. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 25 ஆயிரம் ரூபாயைக் கூட அவரால் செலவழிக்க முடியவில்லை. அதை எல்லாம் மீறி பிரச்சாரம் செய்தார். மக்களை நம்பினார். அவர்கள் கை கொடுத்தார்கள். மீண்டும் ஜெயித்தார் எம்.ஜி.ஆர்.

வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் என்னை அழைத்து, “பதினைஞ்சு நாட்களுக்கு ஒரு முறை நாம சந்திக்கணும். ஆட்சியில் இருக்கிற குறைகளைச் சுட்டிக்காட்டுங்க” என்றார். அதன்பிறகு அவரும் என்னைக் கூப்பிடவில்லை. நானும் சந்திக்கவில்லை. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை மக்களை அவரை மாதிரி புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. அவர்களுடைய தேவைகள் என்ன என்பது அவருக்கு அத்துப்படியாகி இருந்தது என்று நினைக்கிறேன்.

சத்துணவுத் திட்டத்தை அவர் கொண்டுவந்தபோது அதை நான் விமர்சனம் பண்ணினேன். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தியதாக எழுதியிருந்தேன்.

போகப் போகத்தான் அந்தத் திட்டம் மக்களிடம் எந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதையும், பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதையும் உணர முடிந்தது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெற முடிந்தது. அவரை பெரிய நிர்வாக நிபுணர் என்று சொல்ல முடியாது. அப்படியொருவர் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரிகள் சொல்வதிலிருந்து தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்கிற பொது அறிவு அவரிடம் இருந்தது.

நடிப்பிலும், அரசியலிலும் மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து செயல்பட்டதையே எம்.ஜி.ஆரின் வெற்றிக்கான மூலகாரணமாய்ச் சொல்ல முடியும்.

27.01.2021      01 : 15 P.M

Comments (0)
Add Comment