காயத்ரி சுவாமிநாதன்: வளரும் புகைப்படக் கலைஞர்!

திருவண்ணாமலையில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நாடக அரங்கேற்றம் நடந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியை வைத்திருந்தார் வளரும் புகைப்படக் கலைஞர் காயத்ரி சுவாமிநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், புகைப்படக்கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார்.

“நான் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரியைப் படமாக்குங்கள் என்று ஒரு போட்டி வைத்தார்கள்‌. வித்தியாசமான கோணத்தில் படமாக்க நினைத்து கல்லூரியின் உயரமான மேல்நிலைத் தண்ணீர் தொட்டி ஒன்றின் மீதேறி தைரியமாக நின்று ஒரு பறவையின் கோணத்தில் எடுத்தேன்.

இன்றும் என் புகைப்படத்தைக் கல்லூரியில் காட்சிக்கு வைத்துள்ளனர்” என்று உற்சாகமாகக் கூறும் காயத்ரிக்கு பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ படத்தில் வரும் “கண்ணே கலைமானே” பாடல்தான் ஒளிப்பதிவின் பக்கம் கவனம் குவிக்கக் காரணமாக இருந்திருக்கிறது.

“புகைப்படத்தின் மீதான ஆர்வம் என்னுள் பெருகியபடி இருந்தது‌. எத்தனையோ காட்சிகள் கண்ணில் பட்டாலும் மனதைத் தைக்கும் காட்சியைப் படமாக்க நினைத்தேன். புகைப்படம் எடுத்தலில் பயணமும் சேர்வதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. எனவே புகைப்படக் கலையைத் தேர்வு செய்தேன்” என்கிறார் காயத்ரி.

தொடர்ந்து உற்சாகத்தோடு பேசும் அவர், “கிராமப்புற சாலைகளே அமைதியும் இயற்கையும் ததும்பி வழியும் இடம். அதுபோன்ற ஒரு பயணத்தில், திண்ணையில் அமர்ந்து தன்னை மறந்த ஒரு சிறுமி‌யின் இயல்பைத் தூரத்தில் நின்று பதிவு செய்தேன். தனிமையைப் படமாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்நாள் முழுவதும் உழைத்து கண்பார்வை குன்றி தனித்திருக்கும் முதியவர். எதனையோ எதிர்பார்த்துக் காத்திருந்து தனித்திருக்கும் பறவை. தப்பித்து ஓடத்துடிக்கும் தவளை, ‌தனித்து ஓய்வெடுக்கும் நாய்… இப்படி எதிலும் தனிமையே என் மனதிற்குள் தென்பட்டது” என்று கவித்துவமாகப் புகைப்படங்கள் எடுத்த கணங்களை மீட்டிப்பார்க்கிறார்.

புகைப்படக் காட்சி வைக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி?

“ஒரு நாள் நாடகக் கலைஞர் சந்திரமோகன், அவரது நாடகத்தை  ஆவணமாக்க முடியுமா எனக் கேட்டார். உடனே சம்மதித்தேன்‌. அடுத்து நாடகம் அரங்கேறும் அன்று புகைப்படக் கண்காட்சி ஒன்று வைக்கலாமே என்றார். அந்தளவுக்கு அதில் கலை உள்ளதா என சந்தேகமாக இருந்தது.

ஆனால் என்னைத் தொல்.திருமாவளவன் அவர்கள் பாராட்டியதோடு புகைப்படம் ஒன்றையும் வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் மக்கள் அனைவரும் பாராட்டியது நிறைவாக இருந்தது. நான் செல்லவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

இந்தப் பயணத்தில் எப்போதும் என்னுடன் இருக்கும் எனது க்ரிஷ் அண்ணா, அதிரூபன் அண்ணா, மதன் அண்ணா, கீகீ அக்கா, சாந்தனு அண்ணா ஆகியோருக்கும், எனது குடும்பத்திற்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதேபோல், என் வளர்ச்சியில் மகிழும் தமுஎகச குடும்பத்தினரையும் மறக்க முடியாது” என்று நெகிழ்கிறார் காயத்ரி சுவாமிநாதன்.

– தான்யா

25.01.2021    11 : 30 A.M

Comments (0)
Add Comment