தமிழ் உயிர்களுக்கு மதிப்பு இவ்வளவு தானா?

மீள்பதிவு.

நமக்கு முன்னால் நிகழ்கிற தற்கொலைகளை எப்படியும் நாம் விமர்சிக்கலாம்.

பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியவில்லை என்றோ, கோழைத்தனம் என்றோ கூடச் சொல்லலாம்.

ஆனால் அனைத்துத் தற்கொலைகளையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடியுமா?

கல்வியைப் பொறுத்தவரை தேர்வில் தோல்விடையந்த மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் மாநிலக் கல்வித்திட்டத்தில் கூடுதலான மதிப்பெண்களைப் பெற்று நீட் தேர்வில் பின்தங்கிப்போன காரணத்திற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப் போடுமளவுக்கு முதிர்ச்சியுள்ள மாணவியான அனிதா, தற்கொலைச் செய்து கொண்டது பலரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் மறுபடியும் தீவிரமடைந்தன.

மாணவர்கள் மீண்டும் பொதுவெளியில் போராட ஆரம்பித்தார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் தீவிரப்பட்ட நிலையில் அரசுகளின் பதில் என்னவாக இருக்கிறது? அல்லது இனி என்னவாக இருக்கப் போகிறது?

நீட் தேர்வு என்னும் பிரமாண்டமான சதுரங்க வேட்டையில் எத்தனையோ காய்கள் வீழ்த்தப்படலாம். பின் தங்கிப் போகலாம்.

அம்மாதிரியான உயிர்களில் ஒன்று தான் அனிதாவின் உயிரும் என்று வெகு சுலபமாக அரசுகள் காரணம் காட்டி ஒதுங்கிப் போய்விடலாம்.

அனிதா

அனிதா என்கிற கிராமப்புறத்து மாணவி உயிரிழக்கும் மனநிலைக்கு வந்தது எதனால்? நீட் தேர்வைக் குறித்த குறைந்தபட்ச மறுபரிசீலனைக்கு மத்திய அரசு முன்வருமா?

ஏற்கனவே இயலாமையின் உச்சத்தைத் தொட்டிருக்கிற மாநில அரசு, இனி இந்தப் பிரச்சினையில் எந்த அளவுக்கு அக்கறை காட்டும்?

அனிதாவின் மரணம் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வு என்ன? ஒரு சில வாரங்களில் ஊடகச் செய்தியாக அடிபட்டு அதோடு நினைவுகளில் பின்தங்கி மறதியில் மறைந்துவிட வேண்டியது தானா?

இதற்கு முன் இதே மண்ணில் நடந்த தற்கொலைகளுக்கு இந்த சமூகம் காட்டிய எதிர்வினை தான் என்ன? இதுவரை என்னென்ன நடந்திருக்கிறது? பார்ப்போம்.

இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிகழ்ந்த தற்கொலைகளைப் பற்றி மட்டும் இங்கே.

காமராஜ் மறைந்தபோது துவங்கி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவு, தி.மு.க.விலிருந்து வைகோ நீக்கம் போன்ற நிகழ்வுகளுக்காக உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் பட்டியலை இந்த வரிசையில் சேர்க்கவில்லை.

சமூக அரசியல் நோக்கங்களுக்காகத் தற்கொலை செய்து கொண்டவர்களின் நோக்கங்கள் எந்த அளவுக்குத் தமிழகச் சூழலில் உரிய கவனம் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்ப்பது மட்டுமே நமது நோக்கம்.

சென்னை மாகாணமாக இருந்த இந்த மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து விருதுநகரில் 76 நாட்கள் போராடி 1956 அக்டோபர் மாதத்தில் உயிரை விட்டார் சங்கரலிங்கனார்.

சங்கரலிங்கனார்

அவருடைய உயிரிழப்பை அன்றைய காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவே இல்லை.

“அறிவுத்திறன் இருந்தால் அரசு திருத்திக் கொள்ளட்டும்’’ என்று அவர் குறிப்பு எழுதிவிட்டு மறைந்துவிட்டார்.

இருந்தும் அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்படவே பல காலம் ஆனது. 11 ஆண்டுகள் கடந்தன.

தமிழகத்தில் ஆட்சி மாறியது. 1967 ஜூலை மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு தான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது.

தற்கொலை நோக்கத்திற்கும், அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டதற்கும் இடையில் நேர்ந்த கால இடைவெளி இது.

அடுத்து மொழப் பிரச்சினைக்கு வருவோம். தி.மு.க முதல்முறையாக ஆட்சிக்கு வருவதற்குக் காரணமான இந்தி எதிர்ப்பு, 1930 களிலிருந்தே எழுந்தாலும், 1939 ஜனவரி 15-ம் தேதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நடராஜன் விஷம் அருந்திப் பலியானது தான் மொழிப் போராட்டத்தின் முதல்பலி.

அப்போது சென்னை மாகாணத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான ராஜாஜி எப்படி எதிர்கொண்டார்?

“நடராஜனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கன்னம் வீங்கி ஜுரத்தால் இறந்துவிட்டார்’’ என்று சட்டசபையில் அவர் சொன்னபோது அதைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதியவர் பெரியார்.

அதையடுத்து தாளமுத்து இறந்த பின் 1965-ல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மறுபடியும் உயிர்ப்பலிகள். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் துவங்கிய காலம் அது.

1964 ஜனவரி மாதம். சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சென்னை மாகாண முதல்வராக இருந்த பக்தவச்சலம் ரயில் நிலையத்திலிருந்து வரும்போது தமிழுணர்வு கொண்ட சின்னச்சாமி அவர் காலில் விழுந்து “இந்தியை நுழைய விடாதீர்கள். தமிழைக் காப்பாற்றுங்கள். நீங்களும் தமிழர் தானே?’’ என்று மன்றாடியிருக்கிறார். யாரும் செவிசாய்க்கவிலை.

அடுத்த சில தினங்களுக்குள் தன்னுடைய உடம்பில் நெருப்பை வைத்துக் கொண்டு சின்னச்சாமி மறைந்த ஜனவரி 25-ம் தேதியைத் தான் இப்போதும் மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்கடுத்து சிவலிங்கம், அரங்கநாதன், முத்து, சாரங்கபாணி, விராலிமலை சண்முகம் என்று பலர் விஷம் அருந்தியும், உடலில் நெருப்பை வைத்துக் கொண்டும் இறந்தார்கள்.

தொடர்ந்து நடந்த மொழிப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க துப்பாக்கிச் சூட்டிற்கும், கலவரத்திற்கும் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 158.

மொழிப் போராட்டத்தின் காரணமாக இவ்வளவு எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிற செய்தி அன்று ஐ.நா.சபை வரை விவாதிக்கப்பட்டது.

1967-ல் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மாணவர் போராட்டம் மிக முக்கியப் பிரச்சினையாக இருந்தாலும், அதனுடைய தீவிரத்தை அன்றைய ஆளும்கட்சியான காங்கிரஸ் உணரவே இல்லை.

மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களைச் சொந்தப் பிரச்சினையின் காரணமாக உயிரிழந்தார்கள் என்கிற வழக்கமான காரணத்தையே சொல்லிக் கொண்டிருந்தது.

“உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’’ என்கிற முழக்கத்தோடு மறைந்தவர்களின் உடல்கள் மண்ணில் கறைந்து விட்டன.

ஆனால் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க இறுதிவரை அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டனவா? இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தைக் கொண்டுவந்த மாநில அரசு தமிழை முன்னிறுத்தச் செய்த உருப்படியான செயல்பாடுகள் என்ன?

அன்று மாணவர்களின் போராட்டத்தால் பதவிக்கு வந்த இயக்கத்தினர் ஆட்சிக்கு வந்ததும் அதிகார இயல்புக்கு ஏற்றபடி தற்போது மாணவர்களின் போராட்டங்களை நசுக்குகிறார்கள். அறிவுரை கூறுகிறார்கள்.

கடற்கரையில் கூடினால் தாக்குதல் நடத்தி அச்சத்தை விதைக்கிறார்கள். சிலரைச் சிறையில் அடைத்து உளவியல் ரீதியாகப் பயமுறுத்துகிற இதே ஆட்சியாளர்கள் மிகச் சுலபமாக மறந்து போகும் கேள்வி “தாங்கள் எந்த ஏணியில் ஏறி ஆட்சியில் அமர்ந்தோம்?’’

மூன்றாண்டுகளுக்கு முன் மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குறித்த ஆவணப்படம் ஒன்றிற்காக மொழிப் போராட்டத்தில் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்தபோது அனைவருமே பொருளாதார நிலையில் மிகவும் தத்தளித்தபடி இருந்தார்கள்.

சிலருக்கு மட்டுமே மிகக்குறைந்த அளவு உதவித்தொகை கிடைத்துக் கொண்டிருந்தது. அதற்கும் கூடச் சில குடும்பங்கள் படாதபாடு பட வேண்டியிருந்தது.

உயிரை இழந்த அந்தக் குடும்பங்களிலிருந்து ஒருவர் கூட அரசியலில் எந்தப் பொறுப்புக்கும் வரவில்லை.

தமிழை முன்னிறுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட தங்களுடைய உறவினர்கள் நினைத்தபடி எதுவும் நிறைவேறாத தவிப்பை மனச்சங்கடத்துடன் அவர்கள் பகிர்ந்து கொண்ட விதம் முகத்தில் அறைகிற விதத்தில் இருந்தது.

“தமிழுக்காக இவங்க உயிரை விட்டாங்க. அதை வைச்சு ஆட்சிக்கு வந்தவங்க தமிழுக்கு என்ன பண்ணினாங்க? இன்னைக்கு தமிழை துவக்கப்பள்ளிகளில் கூடக் கட்டாயமாக்க இவர்களால் முடியலையே? நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட முடியலை.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிங்கிறது கூட சரியான அர்த்தத்தில் இல்லையே’’–என்கிற புலம்பல் தான் மொழிக்காக உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் ஆதங்கமாக இருந்தது.

இந்த யதார்த்தம் நம்மைச் சுட்டாலும் இது தான் உண்மை.

மொழி மீது கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டினால் இறந்தவர்களின் பெயர்களைச் சில கட்டிடங்களுக்கும், பாலங்களுக்கும் வைத்ததைத் தவிர, சில ‘செம்மொழி’ ஆரவாரத்தைத் தவிர. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு என்ன நடந்திருக்கிறது?

அடுத்து ஈழப்பிரச்சினை உக்கிரமாகிக் கொண்டிருந்த நேரத்தில் பொறி பறந்ததைப் போல சென்னை சாஸ்திரிபவனுக்கு முன்னால் 26 வயதான முத்துக்குமார் பிரசுரங்களை வீசியபடி நெருப்பு வைத்துக் கொண்டு மறைந்தார்.

“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்’’ என்றெழுதி வைத்துவிட்டு மறைந்துபோன முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டும் பல்லாயிரம் பேர்.

அவரைத் தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி தன்னைப் பலியாகக் கொடுத்தவர்கள் மட்டும் 17 பேர்.

ஆனால் அன்றைக்கிருந்த தமிழக அரசும், மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசும் அதற்குத் தந்த எதிர்வினை தான் என்ன?

இலங்கையில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை தமிழுலகம் அறியும். தங்கள் உயிர்களைக் கொடுத்துப் பெரும் இன அழிப்பைத் தடுக்க நினைத்தவர்களின் மனங்களில் இருந்த விருப்பங்களும் பொசுங்கிப் போய்விட்டன.

இன்று வரை இன ஒழிப்பின் தாக்கத்திலிருந்து ஈழ மக்களால் மீள முடியவில்லை. உயிராயுதங்களைப் பயன்படுத்தச் சொன்னவர்களின் நினைவு நாட்களை மட்டுமே அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.

2011. ஆகஸ்டு மாதம். ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு நீண்டகாலம் சிறையிலிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவிக்கக் கோரிக் குரல்கள் எழுந்த நேரம்.

செங்கொடி

“என்னுடல் இந்த மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செய்கிறேன்’’ என்ற கடிதவரிகளுடன் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு முன்னால் பெட்ரோல் ஊற்றித் தன்னை மாய்த்துக் கொண்ட துடிப்பான இளம் பெண்ணான செங்கொடியின் கோரிக்கைக்கு என்ன விளைவிருந்தது?

பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் வெளிவருவதற்கே பல ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

2015-ம் ஆண்டில் செல்போன் டவரில் ஏறி மதுவிலக்கை வலியுறுத்தி மரணத்தைச் சந்தித்த சசிபெருமாளின் உயிருக்கு தமிழக அரசு தந்த எதிர்வினை தான் என்ன?

தமிழகத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரிழப்பு யாரை உலுக்கியிருக்கிறது?

உயிரை இழக்கும்முன்பு அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் இன்னும் கோரிக்கைகளாக மட்டுமே நீடிக்கின்றன.

தங்கள் உயிரைக் கொடுத்து ஒரு பிரச்சினையைச் சுட்டுவிரலைப் போலச் சுட்டிக்காட்டிச் சென்றவர்களை அடக்கம் செய்துவிட்டு அவர்கள் சுட்டிக்காட்டிய திசையைத் திட்டமிட்டு மறக்கடித்துவிடுகிறோம். இது தான் வேதனை.

இதற்கு நேர் எதிரான இன்னொரு உயிரோட்டமான அனுபவத்தையும் உதாரணத்திற்குப் பார்ப்போம்.

நமக்குப் பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலம் உருவாகக் காரணமாக இருந்தவர் சென்னையில் வசித்தவரான பொட்டி ஸ்ரீராமுலு.

பொட்டி ஸ்ரீராமுலு

1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி உண்ணாவிரதத்தைத் துவக்கிய அவர் 58 நாட்கள் கழித்து டிசம்பர் 15-ம் தேதி இறந்தார்.

அந்த மரணத்தின் பொறி பரவி மாநிலமே கிளர்ந்தெழுந்தது. பல உயிர்கள் பலியாகின.

மாநிலப் பிரிவினை விஷயத்தில் பிடிவாதமாக இருந்த பிரதமர் நேருவை நெகிழ்த்தியது அந்த மரணமும், போராட்டமும்.

தன்னிலையில் இருந்து இறங்கிப் பரிசீலித்தார். விளைவு?

1953 ஜூனில் ஆந்திர மாநிலம் உருவானது. இப்போதும் ராமுலுவின் நினைவைப் போற்றுகிறார்கள் ஆந்திர மக்கள்.

அவர் உயிர் நீத்த இடம் ஆந்திர மக்கள் வழிபடும் ஆலயமாக மாறியிருக்கிறது. ஓராண்டுக்குள் ராமுலுவின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. உயிருக்கு அங்கு கிடைத்த மதிப்பு அது.

தங்களுக்காக மறைந்த உயிருக்கு ஆந்திர மக்கள் கொடுத்த எதிர்வினை. சராசரியாகவோ, அற்பக்காரணங்களுக்காகவோ நழுவும் உயிர்களுக்கும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை முன்வைத்து தன்னை அணைத்துக் கொள்ளும் உயிர்களுக்குமான வித்தியாசம் அவர்களுக்குத் தெரிகிறது.

போராடுகிறவர்களின் மொழி, அதிலும் உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்களின் உடல் பொசுங்கிய நெடியுடன் கூடிய மொழியின் அர்த்தம் அவர்களுக்குப் புலப்படுகிறது.

வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் புலப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தில் புலப்பட்டிருக்கிறது.

ஆனால் இங்கு?

போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். எந்த வடிவத்தில் போராடினாலும் அதைப் புரிந்துகொள்ள மறுப்பது தான் யார் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தாலும் நடந்து கொண்டிருக்கிறது.

முன்பு மொழிப்போருக்காக மாய்த்துக் கொண்டவர்கள். அடுத்து ஈழத்திற்காகத் தன்னுயிரைக் கொடுத்தவர்கள். இப்போது தன் மீது திணிக்கப்பட்ட கல்விக் கொள்கையை எதிர்த்து தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவைப் போன்ற இளம் கிராமத்துத் தளிரைப் போன்ற உயிர்.

சுட்டுவிரலைப் போலத் தங்கள் உடலைப் பலிகொடுத்து மிக முக்கியமான பிரச்சினையைச் சுட்டிக்காட்டி தமிழ் மண்ணில் பல உயிர்கள் பறிபோயிருக்கின்றன. பதிலுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்?

கூட்டமாகக் கூடி கோரிக்கைகளுடன் மறைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துவிட்டு, அவர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினையின் திசையை மறந்துவிடுகிறோம் அல்லது மறக்கடித்து விடுகிறோம்.

இது தான் அவர்களுடைய உயிர்களுக்கு நாம் கொடுக்கும் மதிப்பா?ஆனால் ஒன்று. இளைய தலைமுறையினர் தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையுமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு உயிரின் வலி தெரியும்!

அகில் அரவிந்தன்

25.01.2021  | 01 : 40 P.M

Comments (0)
Add Comment